மேலே தலைப்பிடப்பட்டுள்ள பகுதி முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட அடர்வனத்தைக் குறிக்கும். இந்தக் காட்டில் 177 ஏக்கரை அழித்து முஸ்லிம் மக்களைக் கொண்ட குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான செய்திகளே இப்போது முல்லைத்தீவில் சலசலப்பைத் தருகின்றன.
எப்போதிலிருந்து இந்தப் பிரச்சினை…!மகிந்த காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்கின்றனர் மக்கள். போரின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் தடல்புடலாக நடந்துகொண்டிருந்த வேளையில், 1444 முஸ்லிம் குடும்பங்களுக்கு முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை அப்போதிருந்த அரச அதிகாரிகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடந்த காணியற்றவர்களுக்கான காணி கச்சேரியில் 902 குடும்பத்தினர் கலந்துகொண்டிருக்கின்றனர். காணியற்றோர் எனக் கூறி காணி கோரிய 1444 பேரில் மிகுதியானவர்கள் யாரென, அதனைக் கோரியவர்களுக்கே தெரியாமல் இருந்தமை வியப்புத் தரும் விடயமாக அந்நாட்களில் பேசப்பட்டது. அவ்வாறு காணி கச்சேரிக்கு வருகை தந்த 902 பேரிலும், 544 குடும்பங்களே காணி பெறத் தகுதியானவர்கள் என கச்சேரியின் முடிவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் முள்ளியவளை ஐயன்கோவிலுக்கு அருகான பகுதி தொடக்கம் கூழாமுறிப்பு -வெள்ளை மலை ஏத்தம் வரையான கன்னிவனத்தை அழித்து புதிய குடியேற்றத்தை உருவாக்க மக்களும் விரும்பவில்லை. வனவளத் திணைக்களமும் விரும்பவில்லை. காரணம் அது இலங்கை வன இலாகாவால் பாதுகாக்கப்பட்ட வனம் என்கிற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்தமை ஆகும்.
எனவே தான் வன வளத்துறை கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணாக்காடு வரைக்கும் உள்ள 177 ஏக்கர் அடர் வனத்தை அழித்து காணிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. (இது தொடர்பில், முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகாரம் செலுத்தும் தரப்பினர் மகிந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் தமக்கு சார்பான அதிகாரிகளை நியமித்து, இவ்வாறு அனுமதி பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு) இந்த அனுமதியும் இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நியமங்களுக்கு விரோதமானதாகவே இருக்கின்றது. இலங்கையில் 300க்கு மேற்பட்ட மரங்களை வெட்டி வனம் அழிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி சுற்றுச்சூழல் ஆணைக்குழுவில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்கு அந்த அனுமதி பெறப்பட்டதாகத் தகவல் இல்லை. மாறாக மாவட்ட சுற்றுச்சூழல் குழுவின் அனுமதியுடனேயே காடழிப்புக்கு அத்திவாரமிடப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களின் தொகை 1000 குடும்பங்களுக்கு உட்பட்டதென அவர்களின் பதிவுகளிலேயே கூறப்பட்டுள்ளது. இப்போது மாஞ்சோலை – ஹிச்சிராபுரம், சூரிபுரம், குமாரபுரம் ஆகிய பகுதிகளில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை விட, மேலதிகமாகவே 1444 பேருக்கான காணிகள் கோரப்பட்டிருக்கின்றமை, மாவட்டத்துக்கே உரித்தான இனப்பரம்பலை சிதைக்கும் நோக்குடனான செயல் எனப் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, இனப் பரம்பலை சிதைக்கும் விதமாகக் குடியேற்றங்களை உருவாக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை இவ்விடத்தில் நினைவிற்கொள்ளத்தக்கது.
– ஜெரா-.