மகாநாயக்கர்களின் முடிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வதில் அர்த்தமில்லை. மாறாக சங்க பீடங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூட்டமைப்பு அறிவிக்க வேண்டும்.
தேர்தல் முறை மாற்றத்தினூடாக அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுக்கலாம் என சங்கபீடங்கள் கூறியுள்ளதால் அதனை பயன்படுத்தி அந்த திருத்தத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிவிட வேண்டும். எனவே தற்போது பந்து சம்பந்தன் கையில் உள்ளது. அவர் எப்படி விளையாடப் போகின்றார் என்பதே இங்கு முக்கியமான விடயமாகும் என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரசியல் தீர்வை சம்பந்தன் பெற்றுக்கொள்வாரா அல்லது சர்வஜன வாக்கெடுப்பை கோரி எதனையும் பெற முடியாத நிலைமையை ஏற்படுத்துவாரா? சம்பந்தன் பந்தை எப்படிப் போடப் போகின்றார் என்பதிலேயே அனைத்து விடயங்களும் தங்கியுள்ளன என்றும் டிலான் பெரெரா சுட்டிக்காட்டினார்.
சம்பந்தன் காலத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எனவே தமிழர்களின் தலைவிதியை தீர்க்கும் பொறுப்பு தற்போது சம்பந்தன் கையில் உள் ளது. நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை கைவிடுவதுடன் சர்வஜன வாக்கெடுப்பும் வேண்டாம் என்ற இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கி வரவேண்டும் என்றும் சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.