சட்டவிரோத மணல் விவகாரம் வடமராட்சியில் பெரும் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.
விசேட அதிரடிப்படையினரைக் குவிக்குமளவில் மணல் விவகாரம் அங்கு எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
மணல் தட்டுப்பாடு நீண்டகாலமாக இருப்பது கண்டும் உயர்அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சில உயர்அதிகாரிகளைப் பொறுத்தவரை தங்களது பதவிக்குப் பங்கம் வராத வகையில் கடமையில் காலம் கடத்துகின்றவர்களாகவே இருக்கின்றனர்.
இதன்காரணமாக ஓர் இளைஞனின் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது. இந்த அநியாயத்துக்கு யார் பதில் அளிப்பது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
மணல் தட்டுப்பாட்டை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதும் இதுவரை தெரியவில்லை. சட்டவிரோத மணல் விவகாரம் பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கிராமங்களிடையே மோதல்களை ஏற்படுத்துமளவில் நிலைமை முற்றுமுறுகிப் போயிற்று.
இதுதவிர, வீட்டுத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு மணல் தட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது.
அத்துடன் சிலர் ஏதோவொரு வகையில் சட்டவிரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு அதிகூடிய இலாபத்தை உழைக்கின்றனர்.
இரவுப் பொழுதில் இந்த சட்டவிரோத மணல் விவகாரம் நடக்கிறது. இதில் காவல் செய்பவர்களுக்கும் பங்கு உண்டா? என்று எண்ணத் தோன்றும்.
இத்தகைய சட்டவிரோத மணலை மிக உச்சமான விலைக்கு விற்பதால், ஏழை மக்கள் தாங்க முடியாத சுமையைத் தாங்கி தமக்குக் கிடைத்த வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
பொருத்து வீட்டுத் திட்டத்தை வடக்குக்கு அறிமுகம் செய்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் கூறிய ஒரு விடயம்,
வடக்கு மாகாணத்தில் மணல் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளர்களைப் பெறுவதில் கஷ்ரம் ஆகிய காரணங்களால் கல் வீடு என்பதற்குப்பதிலாக பொருத்து வீடுகளே பொருத்தம் என்கிறார்.
எனினும் நம்மவர்கள் பொருத்து வீட்டை எதிர்த்தனர். மக்கள் குடி இருப்பதற்கு வழங்கப்படுகின்ற பொருத்துவீட்டை எதிர்ப்பதால் இவர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி நடு நிலையாளர்களிடம் எழவே செய்தது.
ஆனால் அமைச்சர் சுவாமிநாதன் கூறிய, வடக்கில் மணல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொருத்து வீடே பொருத்தம் என்ற கருத்து ஏற்புடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.
பொருத்து வீட்டுக்குப் பதிலாக கல்வீடுதான் தேவை என்றால், நல்லது அதற்கு மணல் கிடைக்குமா? மணலைத் தட்டுப்பாடின்றி தேவைக்கேற்ப வழங்க முடியுமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யதார்த்தமான கருத்துக்கள் புற நீக்கப்படுமாக இருந்தால் நிலைமைகள் மோசமாகவே அமையும்.
ஆகையால் மணல் தட்டுப்பாடு என்ற விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமானதாகும்.
இது விடயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுநலன் சார்ந்து; சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் முன்வர வேண்டும்.
இல்லையென்றால் எங்கள் மண்ணில் துப்பாக்கிச் சூடுகளும் மரணங்களும் அழுகை ஒலிகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இதைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுங்கள்.