இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றில் தமிழர் ஒருவர் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை காணப்பட்டதே அதற்குக் காரணம்.
இலங்கை இராணுவத்தின் முதல் தளபதியாக மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரு என்ற தமிழரே பதவி வகித்திருந்தார். இலங்கைக் கடற்படையின் தளபதியாக வைஸ் அட்மிரல் ராஜன் கதிர்காமர் 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
ஆனால் 1970களுக்குப் பின்னர் இலங்கையின் முப்படைகளில் தமிழர் ஒருவரால் உயர்நிலைப் பதவியைப் பெற முடியாத நிலையே காணப்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று முப்படைகளிலும் அதிகளவில் தமிழர்கள் இணையும் வாய்ப்பு இருக்கவில்லை. இரண்டாவது தகுதி வாய்ந்தவர்கள் சிலர் இருந்தாலும் தமிழர்கள் என்பதற்காக ஒதுக்கப்பட்டமை.
சிங்களம் மட்டும் சட்டம் உள்ளிட்ட தமிழர்களை ஒதுக்கி ஓரம் கட்டும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டதால் தமிழர்கள் விரக்தியும் வெறுப்பும் அடையும் நிலை ஏற்பட்டது.
அது முப்படைகள் மற்றும் பொலிஸ் சேவைகளில் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டமும் அதனை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் போரும் இரண்டு இனங்களுக்கிடையிலான போராகவே முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள இராணுவம் என்றும் தமிழ்ப் புலிகள் அல்லது தமிழ்த் தீவிரவாதிகள் என்றும் தான் போரிடும் தரப்புகள், மறுதரப்புகள் மாத்திரமன்றி சர்வதேச ஊடகங்களாலும் அடையாளப்படுத்தப்பட்டன.
அதற்குக் காரணம் இந்தப் போருக்குப் பின்னால் இருந்த அரசியலும் இனத்துவக் காரணிகளும் தான்.
இனப்பிரச்சினை, இனப்படுகொலை என்பது போலவே இது இனங்களுக்கிடையிலான போராகத் தான் கூர்மையடைந்திருந்தது.
இன்று இனப்பிரச்சினையே இல்லை என்றும், இனப்படுகொலையே நடக்கவில்லை என்றும் பலரும் நியாயப்படுத்த முனைகிறார்கள். ஆனால் அதே நபர்கள் சிங்களப் படைகள் என்றும், தமிழ்த் தீவிரவாதிகள் என்றும் முன்னர் தாங்கள் கூறியிருந்ததை மறந்து விடுகிறார்கள்.
இனத்துவ ரீதியான முரண்பாடுகளும், ஓரம் கட்டல்களும் அதிகம் நிகழ்ந்தது முப்படைகளில் தான். இன்றும் கூட முப்படைகளில் 99 வீதமானவர்கள் பெரும்பான்மையின சிங்களவர்களாகத் தான் இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் உயர்நிலைப் பதவிக்கு தமிழர்கள் தகைமை பெறும் வாய்ப்பு மற்றவர்களை விடக் குறைவானதாகவே இருந்திருக்கிறது.
இப்போது இரண்டாவது காரணிக்கு வருவோம். மிகச் சொற்பமாகவே தமிழர்கள் முப்படைகளில் பதவி வகித்திருந்தாலும் அவர்களால் உயர்நிலைப் பதவிகளை அடைவதற்கு இனத்துவப் பின்புலமே தடையாக இருந்தது.
இலங்கை இராணுவத்தில் இரண்டாவது நிலை வரை உயர்ந்த மேஜர் ஜெனரல் பாலரட்ணராஜா போன்றவர்களாலும் சரி, மேஜர் ஜெனரல் இரத்தினசபாபதி, மேஜர் ஜெனரல் இரத்தினசிங்கம் போன்றவர்களாலும் சரி இராணுவத் தளபதி பதவியை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
மேஜர் ஜெனரல் துரைராசா போன்றவர்கள் இராணுவத்தின் முன்னணிப் படைப் பிரிவுகளைச் சாராமல் மருத்துவப் படைப் பிரிவு போன்றவற்றில் அங்கம் வகித்ததால் கூட உயர்நிலைப் பதவிகளில் இருந்து ஒதுக்கப்பட்டனர்.
போர்க் காலத்தில் முப்படைகளிலும் பணியாற்றிய உயர்மட்டத் தளபதிகள் பலர் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு பட்டியலில் தொடர்ச்சியாக இருந்து வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த இரகசியம்.
கடற்படையில் இருந்து 2009ல் ஓய்வுபெற்ற பின்னர் கனடாவில் தஞ்சமடைந்த கொமடோர் குருபரன் என்ற அதிகாரி தாம் தமிழர் என்பதால் கடற்படையில் பல சவால்களைச் சந்திக்க நேரிட்டதாக கனேடிய நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
தம்மீது சந்தேகம் கொண்டு போர் நடக்கும் பகுதிகளில் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும் உயர்பதவியில் கொழும்பில் பணியாற்றிய போது கூட தம்மைப் புலனாய்வுப் பிரிவினர் எந்த நேரத்திலும் கண்காணித்து வந்தனர் என்றும் யாருடனும் எதையும் பேச முடியாமல் தனிமைப்படுத்தப்படும் நிலையில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதேநிலைதான் இராணுவம், கடற்படை, விமானப்படையில் இருந்த தமிழ் அதிகாரிகளில் பெரும்பாலானோர் எதிர்கொண்ட பிரதான சவால்.
தமிழ், சிங்கள இனப் போராகவே பார்க்கப்பட்ட மூன்று தசாப்த காலப் போரில் தமிழ் அதிகாரிகளை அரசாங்கமோ அல்லது சக படை அதிகாரிகளோ நம்புகின்ற நிலை இருக்கவில்லை.
எங்கே தமிழர் என்பதால் புலிகளுக்கு உதவி விடுவார்களோ என்ற அச்சமே அதிகம் இருந்தது. இதனால் தகுதி வாய்ந்த அதிகாரிகள் பலர் கடற்படை, விமானப்படை, இராணுவத்தில் இருந்த போதும் கூட அவர்களுக்கு தளபதியாகும் வாய்ப்புக் கிடைக்காமல் போனது.
விமானப்படையில் தலைமை அதிகாரி வரை உயர்ந்தவர் எயர் வைஸ் மார்ஷல் பாலசுந்தரம் பிரேமச்சந்திரா, அவர் ஒரு தமிழர் என்பதால் தான் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் விமானப்படைத் தளபதியாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டார். அதனால் அவர் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டது.
இந்தளவுக்கும் இறுதிப் போர்க்காலத்தில் இவரே விமானப்படையின் நடவடிக்கைத் தளபதியாகச் செயற்பட்டவர்.
தற்போது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் சின்னையா, கடலில் விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியதைப் போலவே போரில் விமானத் தாக்குதல்களை் அனைத்தையும் ஒருங்கிணைத்தவர் எயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திரா தான்.
ஆனாலும் கூட, அவரை முன்னைய அரசாங்கம் நம்புவதற்கு தயாராக இருக்கவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் கூட அவரால் விமானப்படைத் தளபதி பதவியை அடைய முடியாமல் வெளியேற நேரிட்டது.
அதுபோல விமானப்படையில் பிரதி தலைமை அதிகாரி வரை பதவிகளைப் பெற்ற எயர் வைஸ் மார்ஷல் ரவி அருந்தவநாதனால் கூட விமானப்படைத் தளபதி பதவியைப் பெற முடியவில்லை.
கடற்படையிலும் கூட பல அதிகாரிகள் உயர்மட்டப் பதவிகளில் இருந்தாலும் அவர்களால் தளபதி பதவியைப் பெற முடியவில்லை.
தமிழ் அதிகாரிகளை போர்ப் பிரதேசங்களில் இருந்து பெரும்பாலும் ஒதுக்கி வைத்து முக்கியத்துவமில்லாத பின்புலப் பணிகளில் ஈடுபடுத்தும் ஒரு மரபும் கூட முப்படைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.
இப்போது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கூட இந்தப் பதவியை இலகுவாகப் பெற்றவரில்லை.
அரசியல் பழிவாங்கல், அச்சுறுத்தல் போன்றவற்றினால் சேவையிலிருந்து விலகி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாலேயே அவரால் உயர் பதவியை அடைய முடிந்தது.
வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, எயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திரா போன்றவர்கள் விடுதலைப் புலிகளின் முதுகெலும்பை முறிப்பதற்காகப் பணியாற்றியவர்கள். ஆனாலும் கூட அவர்களை அரசாங்கம் நம்பவில்லை.
என்னதான் அரசாங்கத்துக்காகப் பணியாற்றினாலும் தமிழர்களை நம்பாத அவர்களை உயர் பதவிக்கு அனுமதிக்காதளவுக்கு இனரீதியான வன்மங்கள் அரச இயந்திரத்திற்குள் ஊறிப்போயிருந்தன.
இப்போது கூட இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூற முடியாது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தமிழர் ஒருவரை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமித்தது, மத்திய வங்கி ஆளுநராகவும் தமிழரை நியமித்தது.
இவை ஒன்றும் இலங்கை அரச இயந்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று கருத முடியாது. ஏனென்றால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது பெரியளவு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
வெளியுலக நெருக்கடிகள் அதிகளவில் இருந்தன. அவற்றைத் தணித்து சூழலை தமக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே இந்த அரசாங்கம் தமிழர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தியது.
மத்திய வங்கி ஆளுநராக, பிரதம நீதியரசராக தமிழர்களைத் தான் நியமித்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர் தான் இருக்கிறார் என்று ஜெனிவாவிலும் சர்வதேச அரங்குகளிலும் அரசாங்கம் பிரசாரம் செய்ததை மறந்து விட முடியாது.
இதன்மூலம் இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று காண்பிக்கவும் அரசாங்கம் தவறவில்லை.
அந்த வகையில் தான் இப்போது முப்படைகளில் ஒன்றான கடற்படையின் தளபதியாக தமிழர் ஒருவரை நியமிக்கும் முறை வந்திருக்கிறது. அல்லது அதற்கான வழி தேடப்பட்டிருக்கிறது.
இலங்கையின் முப்படைகளும் சிங்கள இனத்தைச் சார்ந்தது என்ற வலுவான குற்றச்சாட்டை மறைப்பதற்கும் தமிழர்கள் இப்போது முக்கிய பதவிகளில் ஆளுமை செலுத்துகிறார்கள். அந்தளவுக்கு நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளோம் என்று காட்டுவதற்கும் தான் இது உதவும்.
தமிழர் ஒருவர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டு விட்டதால் இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்ந்து விடாது.
வெறும் பதவிகளினால் மாத்திரம் தீர்க்கப்பட்டக் கூடிய பிரச்சினை இது அல்லவே.