வடமாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமற்போன உறவுகள் சிலர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர்கள் இறந்துவிட்டனர் என தெரிவித்தமை காணாமற்போன உறவுகளின் குடும்பத்துக்கு இடிமேல் இடிவிழுந்து பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பிரதமர் வெளிப்படையாக கூறிய இந்த தகவல் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை, விடயங்கள், தடயங்கள் என்பன எம் நாட்டு பிரதமருக்கும் தொடர்புகள் இருப்பதற்கான வழி முறை உள்ளது என்பதை தெட்டத்தெளிவாக எமக்கு தெரிகின்றது.
எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த விடயத்தில் இவருக்கும் பங்கு உண்டா? எமது உறவுகள் உயிருடன் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா? மக்களின் பல கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? நாட்டில் பிரதமரே இப்படியான செய்தியை கூறினால் எம் நிலைதான் என்ன? இதுதானா நல்லாட்சி? நல்லிணக்கம்?
இதற்கு எமது வேதனையை அதிகரித்த பிரதமரே பதில் தரவேண்டியவராக உள்ளார்.
எமது காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளின் சிலர் உயிருடன் இல்லை என்று எப்படி கூறுவீர்கள்? அதற்கான ஆதாரங்களை எமக்கு வெளிப்படுத்த முடியுமா? எதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிவுகள் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது?
அவர்களின் குடும்பத்தினரின் கண் துடைப்பிற்காகவா? சித்திரவதை முகாம்களில் இருந்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்ன ஆனார்கள்? இதற்கான பதிலையும் பிரதமரே எமக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.