தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சந்திப்பின்போது அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒன்றாக நடத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து மஹிந்த ராஜபக் ஷ கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடர்பிலும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதில் காணப்படும் சிக்கல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை இன்று வியாழக்கிழமையுடன புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவிடத்தில் அனைத்துக்கட்சிகளும் தமது நிலைப்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி தினம் வழங்கப்பட்டிருந்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாகவுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடந்த வழிநடத்தல் குழு கூட்டத்தில் முன்மொழிவொன்றைச் செய்யவிருப்பதாக கூறியிருந்தார்கள்.
குறிப்பாக நாட்டின் தன்மை ஒற்றையாட்சி அரசு என்பது மும்மொழிகளிலும் வேறுபடுத்தப்படாது அமைய வேண்டும் என்பதை மையப்படுத்தியே அம்முன்மொழிவு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன எம்.பி. ஏற்கனவே இந்த விடயத்தினை சுட்டிக்காட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வரவை மேலும் தாமதப்படுத்தும் வகையில் மஹிந்தவுக்கு ஆதரவான அணியினர் செயற்படக்கூடாது. அவ்வறிக்கை தொடர்பாக கூட்டு எதிரணியினர் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் அவற்றின் யாதார்த்தம் தொடர்பில் பரஸ்பரம் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் சுமார் இரண்டு மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.