உரும்பிராயில் அடாவடி! சிகையலங்கரிப்பு நிலையத்தில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்

யாழ். மானிப்பாய் வீதி உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக் குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
உரும்பிராய் சந்தி பகுதியில் காணப்படும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு முடி திருத்துவதற்காக இனந்தெரியாத நபர்கள் இருவர் சென்றுள்ளனர்.
அப்போது குறித்த சிகை அலங்கரிப்பு நிலையம் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இப்பொழுது முடி திருத்த முடியாது என்று கடை ஊழியரால் அந்நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மது போதையில் காணப்பட்ட அவர்கள் கோபமடைந்து தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டவாறு அவ்விடத்தில் நின்றுள்ளனர்.
இதனை அடுத்து கடை உரிமையாளர் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதனால் அங்கிருந்து சென்ற அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் மேலும் ஒருவரை அழைத்துக் கொண்டு மூவராக வந்து கடையில் பணி புரியும் ஊழியர் மீதும் கடை உரிமையாளர் மீதும் சராமரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வாள்வெட்டுத் தாக்குதலின் போது கடை உரிமையாளர் தப்பித்த போதும் கடையில் பணி புரிந்த ஊழியர் வாள்வெட்டினால் படு காயமடைந்து கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அவர்கள் கடையையும் அடித்து நொருக்கி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த கடையில் பணி புரிந்த ஊழியர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் திடீர் வாள்வெட்டு சம்பவத்தால் உரும்பிராய் சந்திப் பகுதி பரபரப்பு ஏற்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்களும் அச்சம் காரணமாக உடனடியாக மூடப்பட்டுள்ளன.
அச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila