20ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதற்கு கடந்த வியாழக்கிழமை திட்டமிட்டிருந்தார்.
இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு நிறுத்தப்பட்டது. எனினும் நேற்றிரவு அந்த சந்திப்பு கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றிருந்தது.
சந்திப்பில், பல்வேறு விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது , நீதியமைச்சரின் செயற்பாடு தொடர்பாகவும், அவர் தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் குறித்தும் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் செயற்பாடுகள் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்திருந்தது.
இந்த நிலையில் அவரின் அமைச்சுப் பதவியை பறிப்பதற்கான தீர்மானம் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விஜயதாச ராஜபக்சவை நீதி அமைச்சு பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கிய அரசின் திட்டத்துக்கு எதிராக விஜயதாச ராஜபக்ச போர்க்கொடி தூக்கினார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள், முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளை தாக்கல் செய்வதை துரிதப்படுத்தாமை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை விமர்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் விஜயதாச ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்ல. மகிந்த அரசு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. இதற்கு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவே காரணம் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பையும் அவர் மீறிச் செயற்பட்டு வருகின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தனர்.
மேலும், அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு விரோதமாக கருத்து வெளியிட்டமை, மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்திருந்திருந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அமையப்பெற்றது.
அதன் பின்னர் மீண்டும் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று தேசிய அரசை நிறுவியது.
நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இன்னும் செய்ய வேண்டியது அதிகம் உள்ளன.
தற்போது நல்லாட்சி தனது வேட்டையை ஆரம்பித்து விட்டது போலத்தான் தெரிகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவர் பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில் நல்லாட்சி அரசிற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளை பொது எதிரணியினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அமைக்கப்பட்ட போது, ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியில் பங்கொள்ள முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்தனர்.
அன்று முதல் இன்று வரை தேசிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பொது எதிரணி செயற்பட்டு வருகின்றது. கடந்த வருடம் ஆகஸ்ட் 18ஆம் திகதி அரசுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியை பொது எதிரணி நடத்தியிருந்தது.
அதன் பின்னர் மக்களைத் திரட்டி கண்டியிலிருந்து கொழும்புக்கான நடைப்பயணப் போராட்டமொன்றையும் அரசுக்கு எதிராகப் பொது எதிரணி மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பொது எதிரணி, ஆகஸ்ட் 18ஆம் திகதியை இலங்கைக்கு மூதேவி பிடித்த தினமாகப் பிரகடனப்படுத்தி கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை எடுத்திருந்தது.
அதுமட்டும் அல்ல அண்மையில் பதவி விலகிய அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது மத்திய வங்கி பிணைமுறிகள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது, கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக அமைச்சர் ரவி பதவி விலகியிருப்பது நல்லாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பொது எதிரணியினரால் அவ்வப்போது அரசாங்கம் நெருக்கடியில் சிக்கினாலும் நெருக்கடியான காலங்களில் சாதூரியமாக சமாளித்து விடுகின்றது.
இந்த நிலையில் தற்போது நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பதவி பறிக்கப்படும் என அரசியல் ஆர்வலர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவியை தொடர்ந்து விஜயதாச ராஜபக்சவின் பதவி பறிக்கப்பட்டால் புதிய மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுமா..? அல்லது அவரின் பதவி தொடருமானால் பொது எதிரணி மட்டும் அல்ல ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தும் நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுமா? என்பது அரசியல் ஆர்வலர்களின் கேள்வியாக காணப்படுகின்றது.