மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் வேலணையைச் சேர்ந்த திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்துகிறார்கள்.
இன்றுடன் நான்காவது நாள் கடந்துள்ள போதும் அவர்களுடைய கோரிக்கைகள் கவனிக்கப்படாத நிலையில் அவர்களுடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது.
இந்தப் போராட்டத்தை நடாத்துவதன் பிரதான காரணம் அவர்கள் கடந்த-2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிரான குற்றப் பத்திரிகை 2013 ஆம் ஆண்டு யூலை மாதம்-15 ஆம் திகதி வவுனியா உயர் நீதிமன்றத்தில் அரசாங்கத் தரப்பு வக்கீல்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகள் மிகக் கடுமையான விசாரணை, சித்திரவதைகள், துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் மூலமாகவே அவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மதியரசன் சுலக்சன் மற்றும் கணேசன் தர்சன் ஆகிய இருவரிடமிருந்து தான் அந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இன்று நான்கு வருடங்கள் கடந்து விட்டது.
இதன் காரணமாக நீதிக்குப் புறம்பாக ஒரு நான்கு சுவருக்குள் அடைபட்ட நிலையில் மிகவும் மோசமான வகையில் உளச் சித்திரவதையை குறித்த அரசியல் கைதிகள் அனுபவித்து வருகிறார்கள்.
தமிழ் அரசியல் கைதிகளுடையதும், கைதிகளின் உறவினர்களினதும் விருப்பத்திற்கு மாறாக குற்றம் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு வெளியே வேறொரு நீதிமன்றத்திற்கு அந்த வழக்கைக் கொண்டு செல்வதற்கான நோக்கமென்ன? என்பது தொடர்பாகப் பலத்த சந்தேகம் காணப்படுகிறது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை(23) பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீதி விசாரணையில்லாமல் தொடர்ச்சியாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் வாடுகின்றவர்கள் விரக்தியடைந்த நிலையில் தங்களுடைய விடுதலையை வலியுறுத்தியும், நீதி விசாரணையை விரைவுபடுத்தக் கோரியும் கடந்த- 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்களை வேண்டுமென்றே பழிவாங்க வேண்டும் என்ற அரச தரப்பின் செயற்பாடு காரணமாக அவர்களுடைய குற்றப் பத்திரம் திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டதன் ஊடாக திருவருள் என்பவர் அந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் பின்னரும் கூட இன்னமும் அந்த வழக்கைத் தொடர்ந்தும் நடாத்துவதற்கு கால அவகாசத்தைக் கோரியிருப்பது மாத்திரமல்லாமல் வவுனியா உயர்நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நடைபெற்ற குற்றம் அந்த எல்லைக்குள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தான் வழக்குத் தொடரப்பட்டது.
ஆனால், அந்த நீதிமன்ற எல்லையை விடுத்து அனுராதபுரத்திற்கு அல்லது கொழும்பிற்கு அந்த வழக்கை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஆரம்பத்திலிருந்து சட்டமா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தச் செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதுடன் நீதிக்கும் புறம்பானது.
அனுராதபுரம் ஒரு தனிச் சிங்களப் பிரதேசம். கொழும்பு என்பது இந்த வழக்குடன் எந்தவகையிலும் சம்பந்தமில்லாத மிக நீண்ட தொலைவிலுள்ள பிரதேசம். இந்த இடங்களுக்கு இவ்வாறான வழக்குகளை மாற்றுவதன் ஊடாக கைதிகள், குடும்பத்தினர், வழக்குடன் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளை நியமிப்பது என்பதோ அல்லது அடிக்கடி அங்கு சென்று அவர்களைக் கவனிப்பது என்பதோ முடியாத காரணம்.
ஆகவே, செய்யாத குற்றத்துக்காக அவர்களைத் தனித்ததொரு பிரதேசத்திற்குக் கொண்டு சென்று முழுமையாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டதொரு சூழலில் தாங்கள் விரும்புகின்றதொரு தீர்ப்பை இவர்களுக்கு எதிராகத் திணிப்பதற்கெதிரான முயற்சியில் சட்டமா அதிபர் திணைக்களம் ஈடுபட்டிருக்கிறதா? என்ற வலுத்த சந்தேகம் கைதிகள் மட்டத்திலும், குடும்பத்தினர் மட்டத்திலும் எழுந்துள்ளது.
குற்றச் செயல் இடம்பெற்ற நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு வெளியே குறித்த வழக்குகள் மாற்றப்படக் கூடாது. குறிப்பாக வவுனியா உயர் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்தும் வழக்குகள் இடம்பெற வேண்டும். அல்லது யாழ்ப்பாணத்திற்கு வழக்குகள் மாற்றப்பட வேண்டும் அல்லது தாங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது உண்ணாவிரமிருந்து வரும் அரசியல் கைதிகளின் கோரிக்கையாகவுள்ளது. அந்தக் கோரிக்கைகள் முற்றுமுழுதாக நியாயமான கோரிக்கைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.