இலங்கையில் சீனாவின் முதலீடுகளுக்கு எதிராக உள்ளூரில் நடத்தப்படும் போராட்டங்களையிட்டு சீனா கவலை கொள்ளவில்லை என்று, சீன தூதுவர் யி ஷியான்லியாங் முன்பொரு தடவை கூறியிருந்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா வின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு, குத்தகைக்கு வழங்கும், உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்ட பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினரின் எதிர்ப்பையும் கூட சீனத் தூதுவர் பெரிய விடயமாக அப்போது எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
உள்நாட்டில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகளினால், இலங்கையில் சீனாவின் முதலீடுகள் பாதிக்கப்படாது என்பதே அவரது கருத்தாக அப்போது இருந்தது.
ஆனால், அதே சீனத் தூதுவர் தான் கடந்த வாரம், இலங்கை மக்களுக்கு ஓர் அழைப் பை விடுத்தார். “இலங்கைக்கு அபிவிருத்தி முக்கியமானது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்பதே அவரது கோரிக்கை.
இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தி ருந்த சூழல், இடம் என்பன அவர் எத னைக் கூற வருகிறார் என்பதை புலப்படுத்தியிருக்கும். தங்காலையில், 1000 மாணவர்களுக்கு சீனாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது தான், அவர் இதனைக் கூறியிருந்தார்.
தங்காலை மஹிந்த ராஜபக் ஷவின் கார் ல்டன் இல்லம் அமைந்திருக்கின்ற இடம் மாத்திரமல்ல, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்ட இடமும் கூட.
அந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, சீனத் தூதுவர் நாட்டை அபிவிருத்தி செய்ய மக்கள் ஒத்துழைக்க வேண் டும் என்று விடுத்த கோரிக்கையின் உண்மையான நோக்கம் புலப்பட்டிருக்கும்.
இந்த நிகழ்வில் சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள சில தகவல் கள், அம்பாந்தோட்டையை உள்ளடக்கிய, தென்மாகாணத் தின் மீது, சீனா கொண்டிருக்கின்ற அதீத அக்கறையையும், இலங் கை மீதுள்ள அதன் கரிசனைகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
சீனாவின் ஷங்காய் நகரத்தைப் போன்று, தென்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா தொடர்ந்து உதவிகளைச் செய்யும்.
அடுத்த 15 ஆண்டுகளில் சிங்கப்பூரின் நிலைக்கு இலங்கையைத் தரமுயர்த்துவதற்கு சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்ற இர ண்டு அறிவிப்புகளையும் சீனத் தூதுவர் வெளியிட்டிருக்கிறார்.
சிங்கப்பூரின் சிற்பி என்று அழைக்கப்படும், அந்த நாட்டின் முன்னாள் பிரதமர், லி குவான் யூ இலங்கைக்கு வந்திருந்த போது, இலங்கையைப் போல சிங்கப்பூரை மாற்றுவேன் என்று கூறியிருந்தார்.
அந்தளவுக்கு இலங்கை அப்போது முன்னேற்றமடைந்திருந்தது. தன்னைப் பார் த்து மற்ற நாடுகள் பொறாமைப்படும் அள வுக்கு சிங்கப்பூர், இன்று வளர்ச்சியடைந்திருக்கிறது.
இதனால் தான், கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூரைப் போல இலங்கையை மாற்றுவோம் என்று இங்குள்ள அரசியல்வாதிகள் பலரும் கூறி வருகின்றனர்.
இப்போது ஒரு வித்தியாசமாக, சீனத் தூதுவரும் அதனையே கூறத் தொடங்கி யிருக்கிறார். இலங்கையில் சீனாவின் பொருளாதார முதலீடுகளும் தலையீடுகளும் அதிகரிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், இலங்கையை சிங்கப்பூரை நோக்கி கொண்டு செல்வதற்குப் பதிலாக, சோமாலியாவைப் போல பின்நோக்கி இழுத்துச் சென்றது தான் மிச்சம்.
இலங்கையைக் கடன்பொறிக்குள் சிக்க வைத்து, நாட்டின் வளங்களை வெளிநாடு களுக்கு குத்தகைக்குக் கொடுக்க வேண் டிய நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது சீனா தான்.
இதே சீனா தான், இன்னும் 15 ஆண்டு களுக்குள், இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவதற்கு உதவுவோம் என்று கூறியிருக்கிறது. இதனை எப்படி சீனா சாதிக்கப் போகிறது? சிங்கப்பூராக மாற்றுவதற்கான அத்தனை உதவிகளையும் சீனா வழங்கும் என்றால், அதன் அர்த்தம், எவ்வ ளவு கடனையும் தரத் தயாராக இருக்கி றோம் என்பது தான். இது தான், சீனா வைக்கின்ற பொறி.
இதே பொறியை சீனா இப்போது ஆபிரிக்க நாடுகளை நோக்கியும் வைக்கத் தொடங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்களில் காரசாரமான விவாதங்கள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது, சீனாவைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் மிகப் பெருமையாக ஒரு விடயத்தை குறிப்பிடுவார்.
“இலங்கையின் மிகச்சிறந்த நண்பன், மற்ற நாடுகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன்களையோ உதவிகளையோ கேட்டால், நிபந்தனைகளை விதிப்பார்கள். மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி எச்சரிப்பார்கள்.
இவை எதுபற்றியும் கேள்வியே எழுப்பாமல், சீனா நிதியை அள்ளித் தருவதால் தான் அவர்களிடம் போகிறோம்” என்று அவர் அடிக்கடி கூறிவந்தார்.
எவ்வளவு கடனையும், எந்த நிபந்தனைகளுக்கும் உட்படுத்தாமல் தரத் தயாராக இருக்கிறோம் என்ற சீனாவின் உத்தரவாதம் தான் பெரும்பாலான நேரங்களில் இலங்கை போன்ற வளரும் நாடுகளை படுகுழிக்குள் தள்ளி விடுகிறது.
இலங்கைக்கு உதவுவதற்காக எந்தக் கேள்வியும் இல்லாமல் கடன்களை அள்ளிக் கொடுத்த சீனா தான், அதிகவட்டியை கேட்டு நச்சரித்ததும், அதனைக் குறைக்க முடியாது என்று அடம் பிடித்ததும் வரலாறு.
சீனாவின் கடன்கள் தான், அம்பாந்தோட்டை துறைமுகத்தை, மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தை தள்ளிச் சென்றுள்ளது.
இதே சீனா தான், இப்போது அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சிங்கப்பூராக இலங்கையை மாற்றுவதற்கு உதவத் தயார் என்று கூறுகிறது என்றால், அது சற்று யோசிக்க வேண்டிய விடயம் தான்.
இந்தத் திட்டங்கள் வெற்றியளிக்க வேண்டுமென்றால் இங்குள்ள மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம் தேவை. அது இல்லையென்றால், சீனாவின் எந்தத் திட்டங்களும் பலனளிக்காது.
இதனால் தான், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டிருக்கிறார் சீனத் தூதுவர்.
சீனாவில் ஷங்காய் ஒரு முக்கியமான வணிக மையம். சீனாவின் கிழக்கு கடற்பரப்பை அண்டியுள்ள ஓர் உலக நிதி மையம். போக்குவரத்து கேந்திரம். உலகின் மிகப் பரபரப்பான கொள்கலன் துறைமுகம்.
ஆண்டுக்கு 17,125 டொலர், நபர் ஒருவரின் தலா வருமானத்தைக் கொண்ட ஒரு வளர்ச்சியடைந்த நகரம் தான் ஷங்காய்.
இலங்கையின் தென்பகுதியை ஷங்காய் நகரைப் போல மாற்றுவதற்கு உதவுவோம் என்ற சீனத் தூதுவரின் உறுதி மொழிக்குக் காரணம் இருக்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய நிலப்பகுதியை சீனா அபகரிக்கப் பார்க்கிறது என்ற கருத்து தென் மாகாணத்தில் உள்ள சிங்கள மக்களிடம் இருக்கிறது. அத்தகைய கருத்தை உருவாக்குவதில் மஹிந்த ராஜபக் ஷ ஆதரவு சக்திகளின் பங்கு கணிசமானது.
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், சூரியவெவ கிரிக்கெட் மைதானம் எல்லாவற்றையும் கட்டும் போது, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம், அம்பாந்தோட்டை உலகின் சொர்க்கபுரியாக மாறப் போகிறது என்று தான் வாக்குறுதி கொடுத்திருந்தது.
ஆனால், போகப் போகத் தான் அவை வெறும் மாயை என்பது மக்களுக்குத் தெரியவந்தது. அந்த அதிருப்தி இன்னமும் தென்பகுதி மக்களிடம் காணப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெற்றுக் கொள்வதால், தமது அன்றாட வாழ்வு, பழக்க வழக்கங்கள், மரபுகள், கலாசாரங்கள் மாறி விடுமோ, என்ற அச்சம் சிங்கள மக்களிடம் இருக்கிறது. தமது காணிகள் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. அதனால் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்பை போக்குவதில் சீனா முக்கிய கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. சலுகைகள் மற்றும் சாத்தியமான திட்டங்களின் மூலம், மக்களின் எதிர்ப்பைத் தணிக்க முற்படுகிறது சீனா.
உதாரணத்துக்கு, தங்காலை கூட்டத்தில் சீனத் தூதுவர் குறிப்பிட்ட இன்னும் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று தற்போது இலங்கையில் இருந்து 1300 மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை சீனா 2000 ஆக அதிகரிக்கவுள்ளது. இது இளம் சமூகத்தையும், மாணவர்களையும், வசப்படுத்துகின்ற ஒரு முயற்சி.
அதேபோலவே, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை தென்மாகாணத்தில் இலங்கை அரசுடன் இணைந்து சீனா நிறுவப் போகிறது என்பது இரண்டாவது விடயம்.
கல்விக்கான மிகப் பெரிய வாய்ப்புகளை சீனா திறந்து விடப் போகிறது என்றவுடன், அம்பாந்தோட்டை துறைமுகம் யாரிடம் இருக்கிறது என்பது பலருக்கு மறந்து விடும் என்று சீனா கணக்குப் போடுகிறது.
தெற்கில் உள்ள மக்களை அமைதிப்படுத்தி, தனக்கு எதிரான சிக்கல்கள் எழும்பாமல் பார்த்துக் கொள்வது தான் சீனாவின் உத்தி.
இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அனைத்துமே பொருளாதார நோக்கம் கொண்டதல்ல. இதில் கணிசமான மூலோபாய நோக்கங்களும் இருப்பதால், அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, நல்லவனாக – கொடையாளியாக, நடிக்க வேண்டிய தேவையும் சீனாவுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
– ஹரிகரன் –