சீத்தலைச் சாத்தனார் என்றொரு பெரும் புலவர் இருந்தார்.
மாணவர்களுக்கு கற்பிக்கும் போது யாராவது பிழைவிட்டால் பிழை விட்ட மாணவனைத் தண்டிப்பதற்கு பதிலாக எழுத்தாணியால் தன் தலையில் குத்திக்கொள்வார்.
இதனால் அவரின் தலையில் காயத்துக்குக் குறைவில்லை. தலையில் தொடர்ந்து காயம் இருந்ததால் அவரை சீத்தலைச் சாத்தனார் என்று அழைத்தனர்.
சீத்தலைச் சாத்தனாரின் நிலைமையில் தான் இன்று தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
வாக்களித்து தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பார்கள் என்று நம்பியிருக்க, நம் அரசியல் தலைமை செய்கின்ற அத்தனை வேலைகளும் எந்தப் பிரயோசன மும் இல்லை என்பதுடன் அவர்களின் செயற் பாடுகள் தமிழ் மக்களுக்கு கெடுதி செய்வதாகவுமே அமைந்துள்ளன.
இவற்றைப்பார்க்கும் போதெல்லாம் சீத்தலைச் சாத்தனார் போல நாம் தலையில் குத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனலாம்.
அதிலும் குறிப்பாக எங்கள் தமிழ் அரசியல் தலைமைக்குள் இருக்கக்கூடிய சிலர், அரசாங்கத்துடன் இணைந்துவிட்டவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன.
அரசுடன் இணைந்து போவதென்பது ஒரு தவறான அணுகுமுறை என்பது நம் வாதம் அல்ல. மாறாக சாரை ஊருக்குப் போனாலும் நடுமுறி நமக்கு என்ற கொள்கையில் இருந்து நாம் இம்மியும் விலகக்கூடாது.
அதாவது அரசாங்கத்துடன் சேர்ந்து போனாலும் எதிர்த்தாலும் தமிழினம் என்பதுதான் எங்கள் நோக்கமும் குறிக்கோளுமாக இருக்க வேண்டும்.
இஃது தமிழ் அரசியல் தலைமை சார்ந்தவர்களுக்கு மட்டும் உரியதல்ல. மாறாக பெரும் பான்மை இனம்சார்ந்த கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பவற்றில் நின்று தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் உறுப்பினர் பதவியைப் பெற்ற அனைத்துத் தமிழ் இனம் சார்ந்தவர்களுக்கும் பொருந்தக் கூடியது.
எங்கு நின்றாலும் தமிழர்களுக்காக - தமிழினத்துக்காக - தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழர்கள் பாடுபடுவதென்பது கட்டாயமானது.
இதைச் செய்யாமல் அரசுடன் சேர்ந்து போவது அரசுடன் சேர்ந்து பாடுபடுவது இதற்காக தமிழர்களின் அடிப்படை உரிமையை சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பதும் இழப்பதும் என்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.
ஆகையால் தமிழ்ப் பிரதிநிதிகள் என்ற வகைமைக்குள் யார் இருந்தாலும் அவர்கள் தமிழ் மக்களுக்காகப் பாடுபட வேண்டுமேயன்றி தங்களின் சுயநலத்துக்காக செயற்படக் கூடாது.
அரசியலில் ஒவ்வொரு நகர்வையும் மிக நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுத்த வேண்டும்.
மகிந்தவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பது பின்னர் மைத்திரியை ஆதரித்து அவர் வெற்றி பெற்ற பின் மகிந்த ராஜபக்வுடன் சேர நினைப்பதானது மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா என எல்லோரிடமும் பகைப்பதாக இருக்குமேயன்றி வேறில்லை.
இப்போது சம்பந்தர் ஐயா மகிந்த ராஜபக்ஷவுக்கு கைகொடுத்து இணையலாமா என்று கேட்பது ஜனாதிபதி மைத்திரிக்கு எப்படி இருந்திருக்கும்.
எல்லாவற்றையும் போட்டுடைக்காமல் கொஞ்ச மேனும் இராஜதந்திரத்துடன் செயலாற்ற வேண்டும்.