வடமாகாண சபையினில் 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை தோற்றுவிக்க சுமந்திரனின் வழிநடத்தலில் மீண்டும் தமிழரசுக்கும்பல் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு அங்கமாகவே கடைசியாக நடைபெற்ற மாகாணசபை அமர்வினில் சத்தமின்றி வெளியேறியதால் கோரமின்மை காரணமாக அமர்வை பின்போட வைக்க இக்கும்பல் களமிறங்கியிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. ஏற்கனவே கிழக்கு மாகாணசபையினில் ஆதரவாக வாக்களிப்பு நடந்துள்ள நிலையினில் வடக்கிலும் அம்முயற்சிகளை சுமந்திரன் தரப்பு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வடமாகாணசபை தொடர்பான கவனத்தை திசைதிருப்ப முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு, உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை திட்டம் தொடர்பில் மிக இரகசியம் பேணப்பட்டு நடவடிக்கைகள் பேணப்பட்டுவந்தன. எனினும் பிரேரணைக்கு போதியளவு உறுப்பினர்களின் ஆதரவின்மையால் முதலமைச்சர் சார்பு உறுப்பினர்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மூலமே தகவல் வெளிக்கசிந்ததாக தெரியவருகின்றது.
மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை ஒத்திவைப்பதனால், மாகாண சபையில் பிரச்சினையான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை அடிப்படையாக வைத்தே, சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
முதலமைச்சரின் செயற்பாட்டினால், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் அவர்கள் இருப்பதாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையிலேயே அவருக்கு எதிராக பிரேரணை கையளிப்பது என முடிவுசெய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
அமைச்சு பதவி காரணமாக சலிப்புற்றுள்ள சிலரை உள்ளடக்கி இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவரவும் சத்தம் சந்தடியின்றி 20வதிற்கு ஆதரவான வாக்களிப்பினை இதன் மூலம் நடத்தவும் இத்தரப்புக்கள் ஆர்வம் கொண்டுள்ளன.
Add Comments