இந்த நிலையில், தமது சொந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறுகோரி குறித்த காணிகளின் உரிமையாளர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் தொடர்ந்து ஒரு மாதகால போராட்டத்தினை இராணுவ முகாம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாக ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டதோடு மேலும் இரண்டு கட்டங்களாக மிகுதி காணிகள் விடுவிக்கப்படும் என இராணுவத்தரப்பாலும் அரச அதிகாரிகளினாலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டு கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் தற்போது முடிவடைந்த நிலையில் ஏமாற்றமடைந்த மக்கள் தமது காணி விடுவிப்புக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை குறித்த இராணுவ முகாம் முன்பாகவும் வீதியை மறித்தும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வாயிலை மறித்தும் முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் மக்களின் போராட்ட இடத்திற்கு வருகைதந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். அதனையடுத்து, குறித்த காணிகளில் அமைந்துள்ள 682 ஆவது படை முகாமின் படைத் தளபதி பிரதேச செயலருடன் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாட பிரதேச செயலகம் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலக வாயிலை மறித்து நின்றனர். இதன் காரணமாக தனது வாகனத்தை கொண்டு செல்ல முடியாததால் இறங்கி நடந்து பிரதேச செயலகம் செல்ல முடியாது என தெரிவித்து பேச்சு நடத்த வந்த படைத்தளபதி திரும்பி சென்றார். இதனை அடுத்து மக்கள் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியை மறித்து போராட முற்பட்டதால் சிறிது நேரம் பதட்ட நிலைமை தோன்றியது. இதன்காரணமாக குறித்த வீதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் தடங்கலும் ஏற்பட்டது. தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பிரதேச செயலகத்திற்குள் அழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது காணி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் கையளித்து காணி விடுவிப்பை விரைவு படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இதுதொடர்பில் எடுத்துரைக்கப்படவுள்ளதாகவும் அதன்பின்னர் மக்கள் தமது முடிவினை தெரிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் மக்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து, போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக கைவிடுவதாக கூறினர். வழமைபோலவே இன்றும் மக்கள் போராட்டத்தை இராணுவம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததை அவதானிக்க முடிந்தது. |
காணிகளை விடுவிக்கக் கோரி புதுக்குடியிருப்பில் மீண்டும் போராட்டம்!
Related Post:
Add Comments