கூட்டமைப்பு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்திவைப்புப் பிரேரணையுடன் மட்டும் நின்றுவிடாமல் நாடாளுமன்றத்தைப் பகிஸ்கரித்தோஅல்லது வேறு காத்திரமான போராட்டங்களினூடாகவோ அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டுமென பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக 19 பொது அமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் இணைந்து இன்று(22) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் கைதிகளினுடைய விடுதலை தொடர்பாகவும், வவுனியாவிலிருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்ட வழக்குகளை மீண்டும் வவுனியாவுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் கூடி வடமாகாணம் தழுவியரீதியில் கதவடைப்புப் போராட்டத்தையும், வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும், மறுநாள் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராகக் கறுப்புக்கொடிப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம்.

இத்தகைய போராட்டங்களே எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஒத்தி வைப்புப் பிரேரணையைக் கொண்டுவரும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வளவும் நடைபெற்றும் கூட அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக எவ்விதமான சாதகமான பதில்களும் அரசு தரப்பால் வழங்கப்படவில்லை.
ஆனால், இதேசமயம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுடனும் அரசியல் கைதிகளின் உறவினர்களுடனும் ஜனாதிபதி இரு சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
இச் சந்திப்புக்கள் திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை எனக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும் கூட அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மாறாக ஏனைய சிலரை அழைத்துப் பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் திசை திருப்பும் மற்றும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியேயாகும்.
ஜனாதிபதி பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஏற்கனவே பல வாக்குறுதிகளைஅளித்திருந்தாலும் எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்பட்டதாக இல்லை.
அதே நிலைமைதான் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் வருகை தரும்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களை 'வாருங்கள் பேசித் தீர்க்கலாம்' என அழைத்த ஜனாதிபதி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் பேசியும் ஆக்கபூர்வமான பதில் எதனையும் வழங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் நிலைப்பாடுகளைப் பார்க்கின்ற போது அரசியல் கைதிகளின் விடயமாயினும் சரி ஏனைய விடயங்களாயினும் சரி தொடர்ச்சியான போராட்டங்களும் அதனூடாக ஏற்படுத்தப்படும் அழுத்தமும் தான் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இவர்களைச் சிந்திக்கவைக்கும் என நம்புகின்றோம்.
ஒரு அரசியல் தீர்மானத்தின் மூலமே அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பதுடன் அதற்கு நிரந்தரமான முடிவினையும் எட்டமுடியும்.
இது அரசாங்கம் கூறுவதுபோல வெறுமனே ஒருசட்டப் பிரச்சினையல்ல. அரசியல் கோரிக்கைகளுக்காகப் போராடிய போராளிகள் மேல் சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களேயாகும்.
ஆகவே, அக்குற்றச்சாட்டுக்கள் அகற்றப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே ஜே.வி.பி. காலத்திலும், இந்திய, இலங்கை ஒப்பந்தக் காலத்திலும் இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தார்கள் என்று வரலாறு இருக்கும் போது இப்போது இது ஒரு புதிய விடயமுமல்ல என்பதையும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.
எனவே, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் வேண்டி நிற்கின்றோம்.
தவறும் பட்சத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதையும், கூறி வைக்க விரும்புகின்றோம் எனவும் மேற்படி பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila