உலகத்தமிழர் பேரவையின் திசைமாறிய பயணம் – அவுஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு!

தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய உலகத்தமிழர் பேரவையானது, சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று, தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாக, அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ள முக்கிய கூட்டம் ஒன்றில் கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பொதுக்கூட்டத்தில், நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலிலேயே, கடுமையான குற்றஞ்சாட்டுக்கள் அவ்வமைப்பின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
உலகத்தமிழர் பேரவையானது வண. பிதா இம்மானுவேல் அவர்களின் தலைமையில், சுரேன் என அழைக்கப்படும் பிரித்தானியாவைச் சேர்ந்த இன்னொரு செயற்பாட்டாளர் இணைந்து பொது அமைப்பாக இல்லாமல், தமக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களாக அண்மைக்காலமாக மாறினர்.
உலகதமிழர் பேரவை தொடங்கப்பட்டபோது 13 தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புகள் அதன் கிளை அமைப்புகளாக இணைந்திருந்தன. ஆனால் உலகதமிழர் பேரவையின் செயற்பாடுகளால் ஏமாற்றமடைந்த பத்து அமைப்புகள் வெளியேறிவிட, இப்போது அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அமெரிக்காவின் யுஎஸ்பக் ஆகியன மட்டுமே தொடர்ந்தும் இணைந்துள்ளன.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவையானது தொடங்கப்பட்டபோது, தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளான தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை வலியுறுத்தி, அதன் இலக்காக கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை, வகுத்து செயற்படுவதாகவே அதன் யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் உலகத் தமிழர் பேரவையானது, அக்கோரிக்கைகளை கைவிட்டு சிறிலங்கா அரசுடன் இணைந்து தமிழர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தியும், இனப்படுகொலை நடைபெற்றது என்பதை மறைத்தும், சர்வதேச பங்குபற்றலுடனான போர்க்குற்றசாட்டுக்கான கோரிக்கைகளை உள்நாட்டு போர்க்குற்றசாட்டுக்களாக மாற்றுவதற்கும் துணைநின்றமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அண்மையில் சிறிலங்கா சென்றடைந்த வண. இம்மானுவேல் அவர்கள் உண்மையான சிறிலங்கா இராணுவத்தின் போர்வீரர்களை கௌரவிக்கவேண்டும் என்றும், ஒரு சிலரே போர்க்குற்றசாட்டுக்களில் ஈடுபட்டனர் என்பதாக தனது பிரத்தியே செய்தியாக ருவிற்றரில் பதிவுசெய்திருந்தார்.
தமிழ் மக்களின் பிரதிநிதியாக செயற்படவேண்டிய வண. இம்மானுவேல் அவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் இரத்தக்கறை படிந்த வரலாற்றை மறைப்பதாகவும், 200 நாட்களுக்கு மேலாக காணாமல்போன உறவுகளை தேடி, தமிழர் தாயகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்தக்காலப்பகுதியில், அம்மக்களின் பிரதிநிதியாக செயற்படவேண்டிய உலகத் தமிழர் பேரவை இவ்வாறு செயற்படுவதை கவலையுடன் பெரும்பாலோனோர் கண்டித்தனர்.
கடந்த மூன்று வருடங்களாக சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவது போன்ற உலகத்தமிழர் பேரவையின் செயற்பாடுகளால் தமிழர்களின் அணுகுமுறை தோல்வியில் முடிவடைந்த மாதிரியான நிலையே காணப்படுவதாகவும் எனவே அதனை உடனடியாக அத்தகைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவையானது, உலகத்தமிழ் மக்கள் பேரவையின் அங்கமாக செயற்படாமல், அவுஸ்திரேலிய தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கவேண்டும் எனவும், தாயகமக்களின் போராட்டங்களுக்கான உந்துசக்தியாக அது செயற்படவேண்டும் என்றும், அதுபற்றிய முடிவை அடுத்த 3 மாதத்தில் எடுக்கவேண்டும் எனவும் தமது கோரிக்கையாக பெரும்பாலானவர்கள் முன்வைத்தனர்.
பொருத்தமான முடிவுகளை விரைந்து எடுப்பதன் மூலம், மீளவும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவையானது வெளியேறிய உறுப்பினர்களை மீளவும் இணைக்கமுடியும் எனவும், அதன் மூலம் பலமான குரலாக தொடர்ந்தும் செயற்படமுடியும் எனவும் மேலும் அவர்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் தலைவர் ஜெகநாதன் அவர்கள் அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் அங்கத்தவர்களின் கருத்துக்களை விளங்கிக்கொள்வதாகவும் அதற்கான உறுதியான முடிவுகளை விரைந்து எடுப்பதாகவும் அதுபற்றிய விபரங்கள் அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila