யாழ்ப்பாணத்தை மீண்டும் அதிகரித்துள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் மக்களை பதற்றத்துக்குள் தள்ளிவிட்டுள்ளன. ஊரடங்குச் சட்டங்கள் இல்லாத நிலையிலும் மக்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியே அஞ்சுகின்ற நிலையிலேயே இருக்கின்றனர்.
இரவில் மோட்டார் சைக்கிளில் திடீரென்று வருகின்ற இளைஞர்கள் ஆவேசம் கொண்டவர்களாக வீதியில் ஓடுவதும்,கடைகளைத் தாக்குவதும்,மோட்டார் சைக்கிள்களைத் தாக்குவதும்,ஆட்களை மிருகத்தனமாக வெட்டுவதுமாக வாள் வெட்டுக் குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்கின்றது.
ஆரம்பத்தில் ‘ஆவா குழு,டில்லு டீம்’ என்று இரண்டு குழுக்கள் இருந்தன. அந்தக் குழுக்களை தலைமை ஏற்று நடத்திய இளைஞர்கள் முன்னர் இராணுவப் புலனாய்வு அமைப்பக்களுக்கு நெருக்கமாகச் செயற்பட்டவர்கள் என்றும், அத்தகைய செயற்பாடுகளே அவர்களுக்கு இவ்வாறான செயற்பாடகளில் துணிச்சலாக இறங்கும் மனோ தைரியத்தைக் கொடுத்தது என்றும் அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்தக் குழுக்கள் சமூகத்தில் குற்றவாளிகளைத் தண்டிப்பதாக செயற்படத் தொடங்கியபோதும், பின்னர் கூலிக்கு கொலைகள் செய்கின்றவர்களாகவும்,கொள்கைளில் ஈடுபடுகின்றவர்களாகவும்,பகைமைகளைத் தீர்த்துக்கொள்ளப்ப பயன்படுத்தப்படும் கூட்டமாகவும் செயற்படத் தொடங்கியபோது,அதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும்,ஆரம்பத்திலேயே இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறினால்,இன்று வாள் வெட்டில் தொடங்கியவர்கள்,நாளை,ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு சமூத்தை அச்சுறுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்றும் மக்கள் அச்சப்படத் தொடங்கினார்கள்.
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக பொலிஸாரையும் இந்த வாள்வெட்டுக் குழுக்கள் தாக்கும் நிலைமை உருவாகியிருந்தது.
அதன் பின்னரே இவ்வாறான வாள் வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுற்றிவளைப்புக்கள்,தேடுதல்கள், கைதுகளை நடத்தி பலரைக் கைது செய்து சிறைகளில் அடைக்கும் நடவடிக்கையை பொலிஸாரும், படையினரும் இணைந்து மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிலகாலம் யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவியது,சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதைத் தொடர்ந்து மீண்டும் வாள்வெட்டுக் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியுள்ளது. இம்முறை நடக்கும் வாள் வெட்டுச் சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும்போது விசித்திரமாக உள்ளது.
வாள் வெட்டுக் குழுக்களில் தலைமைக்குழுவாக செயற்படும் ஆவா குழுவிலிருந்து சிலர் விலகி தனித்துச் செயற்படுவதாகவும்,இந்தப் பிரிவும், அவர்களுக்குள்ளே நீயா? நானா? பலமான குழுவாக இருக்கின்றோம் என்பதை நிரூபிக்கும் போட்டித் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும்,அந்த போட்டித் தன்மைகள் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது,ஏதோ ஒரு வாள் வெட்டுச் சம்பவம் போலவும், அதை ஒரே குழுவே செய்வது போலவும் தொற்றமளித்தாலும், உண்மையில் ஒரே குழுவின் தாக்குதல் சம்பவங்கள் அல்ல.
இப்போது யாழ்ப்பாணத்தில், ஆவா குழுவிலிருந்து பிரிந்து ‘தனு ரொக்,மின்னல் குழு,தாரா குழு’ என்று மூன்று குழுக்கள் செயற்படுகின்றன. இவை தவிர டில்லு டீம் தனியாக இயங்குகின்றது. இப்போது புதிதாக ‘சிந்து டீம்’என்றொரு குழுவும் ஆரம்ப நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
இந்தக் குழுக்களின் பின்னணியில் வடக்கிலுள்ள சில அரசியல் கட்சிகளின் கையும் இருப்பதை மறுப்பதற்கில்லை. முன்னர் கஜேந்திர குமாரின் கட்சி உறுப்பினர் ஒருவர் ஆவா குழுவோடு தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் மகன்,இவ்வாறான குழுக்களோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஒரு சண்டியர் குழுவின் செயற்பாடுகள் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கடந்த வாரம் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வாள் வெட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.பல குழுக்களாகச் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில் அதைத் தடுத்து நிறுத்த உரியவாறான நடவடிக்கை விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சாதாரண மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இச்சம்பவங்கள் இயல்புச் சூழலை சீர்குலைக்கத் தொடங்கியிருப்பதையும்,மக்கள் அச்சமடையத் தொடங்கியிருப்பதையும் கருத்தில் கொண்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், வட மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு அவசரமாக விடுத்துள்ள பணிப்புரையில்,சட்டம் ஒழுங்கிற்கு சவால்விடும் அளவுக்கு அதிகரித்துள்ள வாள் வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துமாறும்,அதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தெரிவித்திருக்கின்றார்.
நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு அவசரப்பணிப்புரை வழங்கியிரப்பதானது,பதற்றமான சூழல் யாழ்ப்பாணத்தில் நிலவுகின்றது என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.எனவே இந்த ஆபத்தை மக்களும் உணர்ந்து கொண்டு,பதற்றச் சூழலை எதிர்கொள்வதற்கு பங்களிப்பைச் செய்யவேண்டும்.
யாழ்ப்பாணத்தின் நிலைமை இவ்வாறு மோசமடைந்துள்ளபோதும் அதைப்பற்றி எவ்விதமான பிரக்ஞையும் இல்லாமல் அங்பு அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகள் இருப்பதை அவதானிக்கும்போது இவர்களுக்கு சமூகம் மீதான அக்கறையோ,சட்டம் ஒழுங்கு சீர்குலைவது தொடர்பான உணர்வே இல்லாமல் இவர்களால் எப்படி இருக்க முடிகின்றதோ தெரிவில்லை.
அவர்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டும்,உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் யாரோடு கூட்டமைத்துக்கொண்டால் வாக்குகளை அதிகமாகப் பெற்று பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதிலேயே அக்கறையோடு இருக்கின்றார்கள்.
தேசியக் கட்சிகள் தனித்தும்,ஈ.பி.டி.பி தனித்தும்,தமிழ்த் தேசியக் கூட்டமைபாகவும், ஆனந்த சங்கரி தலைமையிலான அணி தனியாகவும், தமிழரசுக்கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படும் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரன் குமார் ஆகியோரின் தலைமையிலான அணியினரும்,இவற்றுக்கிடையே அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் தாமும் குழம்பிக்கொண்டு, மக்களையும் குழப்பும் அறிக்கைகளை விடுகின்ற அணியாக தமிழ் மக்கள் பேரவையுமாக அரசியல்வாதிகள் மிகுந்த வேலைப்பளுவுக்குள் மூழ்கிக்கொண்டுள்ளார்கள்.
தமிழ் மக்கள் மீது இந்த அரசியல் கட்சியினருக்கு இருக்கும் நம்பிக்கை மிதமிஞ்சியதாகவே இருக்கின்றது. அதாவது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு முன்வராமலும், அதற்காகன உழைக்காமலும்,இருந்துவிட்டு, தமிழ் மக்கள் எக்கேடு கெட்டுப்போனாலும்,தேர்தலின்போது,தமிழ் மக்களிடம் சென்று தமிழ்த் தேசியத்தையும், தன்மானத்தையும் கேள்விக்குட்படுத்தி ஒற்றுமையாக வாக்களியுங்கள் என்றும், தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து தெரிவு செய்தால்தான், சர்வதேச சமூகம் நாம் கூறுவதைக் கேட்கும் என்றும் கூறினால் தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று அவர்கள் நம்புகின்றார்கள்.
அல்லது தமிழ்மக்களைப் பற்றி அவ்வாறுதான் புரிதல் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் தமிழ்மக்கள் தமது அரசியல் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தொடர்பாகவும், அவர்களின் இயலுமைகள் தொடர்பாகவும் போதுமான புரிதலைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், அல்லது புரிதல் இருந்தும்,உணர்ச்சியைக் கடந்து அறிவுக்கு வேலை கொடுத்து தீர்மானத்தை எடுக்கத் தெரியாதவர்களாகவுமே இருக்கின்றார்களா? என்றே எண்ணத் தோன்றுகின்றது.