யுத்த குற்ற நீதிமன்றங்களின் முன்னிலையில் படையினரை நிறுத்தப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கட்டளை தளபதிகள் உட்பட சுமார் 350ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காக பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டின் நன்மைக்காக ஓவ்வொரு அதிகாரியையும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்கள் உயிரை பணயம்வைத்து நீங்கள் அர்ப்பணிப்புடன் நாட்டை பாதுகாப்பதற்காக முன்வந்துள்ளீர்கள் இயற்கை அனர்த்தங்களின் போதும் அவ்வாறே செயற்பட்டுள்ளீர்கள் அதற்காக நாடு உங்களிற்கு கடமைப்பட்டுள்ளது என சிறிசேன படையினருக்கு தெரிவித்துள்ளார்.
உலகின் எந்த மனித உரிமை அமைப்பும், எந்த அடிப்படையிலும் இலங்கை இராணுவத்தினரிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள சிறிசேன இறைமையுள்ள நாடு என்றவகையில் எந்தவித தலையீடுகளும் இல்லாத நிலையில் இலங்கையால் தனது சொந்தப்பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியும் என்பதை ஐக்கியநாடுகள் அமைப்பிற்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் இந்த நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கும் வரை யுத்தகுற்ற நீதிமன்றங்களின் முன்னிலையில் உங்கள் எவரையும் நிறுத்த அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிருப்தியடைந்துள்ள அரசியல்வாதிகளும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிலரும் யுத்த வீரர்களை விசாரணை செய்து தண்டிக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நான் வெளிநாட்டு நீதிபதிகள் போன்றவர்களால் எவரும் விசாரணை செய்ப்படுவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்றும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக பிழையான அறிக்கைகளால் தவறாக வழிநடத்தப்படவேண்டாம் எனவும் சிறிசேன அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களை போலயில்லாமல் யுத்தவீரர்களிற்கு எதிர்காலத்தில் வெளிநாடுகள் விசா மறுப்பு செய்யாத நிலையை உருவாக்குவேன் என்றும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதியின் உரை பாதுகாப்பு படையினரின் அனைத்து தலைமையங்களிற்கும் நேரடி ஓலிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.