முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், தலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஒன்றுமே செய்யவில்லை என மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை கபளீகரம் செய்து ஹிபுல் ஓயா என்னும் பெயரில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காகவும், மேலும் குடியேற்றப்படவுள்ள சிங்கள மக்களுக்காகவும் பாரிய நீர்பாசன திட்டம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்படுகிறது.
மேற்படி திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கு பகுதியில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன், வடமாகாணத்தில் இன விகிதாசாரத்தில் மாற்றம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் கோரி மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் விசேட கவனயீர்ப்பு விடயம் ஒன்றை இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 115வது அமர்வில் கொண்டுவந்தார்.
மேற்படி விசேட கவனயீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் மேற்படி கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், கடுமையான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.
இவ்விசேட கவனயீர்ப்பை கொண்டுவந்து து.ரவிகரன் உரையாற்றுகையில்,
“1000 மில்லியன் ரூபாய் செலவில் 6000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வகையில் திட்டமிட்டு தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதன் ஊடாக மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மயமாக்கப்படும். எனவே முல்லைத்தீவு மாவட்டத்தை காப்பாற்றுங்கள்” என உருக்கமாக கேட்கிறேன் என்றார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் கருத்து கூறுகையில்,
“இந்த திட்டமிட்ட குடியேற்றங்கள் 1977ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்கள் இவ்வாறான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தக்கோரியும்தான் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தார்கள்.
ஆனால் இன்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர் ஆகியோர் இந்த விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அவர்களுடைய மௌனத்தினாலேயே இவ்வளவு பிரச்சினைகள் எழுந்துள்ளது” என்றார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கையில்,
“நல்லாட்சி அரசாங்கமும் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை தமிழ் மக்களின் நிலங்களில் நடத்துவது வேதனையளிக்கிறது.
இதனை தடுத்து நிறுத்தவதற்கு ஜனாதிபதி, பிரதமருடன் முதலமைச்சர் பேசவேண்டும். இல்லையேல் சட்ட ரீதியாக இந்த குடியேற்றங்களை எதிர்க்கவேண்டும்” என்றார்.
தொடர்ந்து மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் கருத்து தெரிவிக்கையில்,
“திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? எங்களுடைய திட்டங்களை எல்லை கிராமங்களை நோக்கி நாங்கள் நகர்த்தினோமா? இல்லை.
இன்றும் பல எல்லை கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வினை காண எல்லை கிராமங்களை நோக்கி எங்களுடைய செயற்றிட்டங்களை கொண்டு செல்லவேண்டும்” என்றார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறான சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த நாங்கள் என்ன செய்தோம்? என கேட்டால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை.
எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வினை காண நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டும். வெறுமனனே நாங்கள் அதிகாரிகளை மிரட்டிக் கொண்டிருப்பதால் பயன் ஒன்றுமில்லை” என்றார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் க.விந்தன் கருத்து தெரிவிக்கையில்,
“எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மத திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனை தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 30 மாகாணசபை உறுப்பினர்கள் இருந்தும் எடுத்த நடவடிக்கை என்ன?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த விசேட கவனயீர்ப்பை முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கு அனுப்புங்கள்.
தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கையில் அப்படி ஒன்றுமே நடக்காததுபோல் அரசாங்கத்துடனும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் மாயஜாலம் காட்டுவதுபோல் பேசிக் கொண்டிருக்கின்றார்.
எதிர்கட்சி பதவியில் இருந்து கொண்டு அரசை தாங்கள் தான் கொண்டுவந்தோம் என மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன் பலத்தை தமிழ் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும்.
காந்தியம் அமைப்பின் ஊடாக திருகோணமலையில் தமிழ் மக்களை நாங்கள் குடியேற்றியிருக்காவிட்டால் திருகோணமலையில் இருந்து ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக இரா.சம்பந்தன் நாடாளுமன்றம் சென்றிருக்க மாட்டார்” என கூறினார்.
தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில்,
குடியேற்றங்களை தடுக்க நாங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது சட்டரீதியாக அணுகவேண்டும். எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வினை தாம்பாளத்தில் வைத்து யாரும் எங்களுக்கு தரமாட்டார்கள்.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் அத்துமீறிய குடியேற்றங்களை தடுப்பதற்கான பொறிமுறைகள் உள்ளது.
அதனையும் ஒழுங்காக படிக்காமல் நிராகரிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண அரசியலமைப்பை மாற்ற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,
1956ஆம் ஆண்டு தொடக்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காக போரடியவர்கள் நாங்கள். சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கும் நிலைப்பாட்டினை கொண்ட கட்சி ஊடாக வந்தவர்கள்.
அந்த கொள்கை வழி நிற்பவர்கள் நாங்கள். எனவே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், மற்றும் எதிர்கட்சி தலைவருக்கு தெரியப்படுத்தப்படும்” என்றார்.
சம்பந்தன் - விக்னேஸ்வரன் ஒன்றும் செய்யவில்லை! கடும் குற்றச்சாட்டு
Posted by : srifm on Flash News On 04:19:00
Related Post:
Add Comments