இலங்கை இராணுவ ஆயுதங்களை களவாடிய புளொட்!


ananthi-siththarthan-3.jpg

யாழ்.குடாநாட்டினில் புளொட் அமைப்பு மூலம் அரங்கேற்றப்பட்ட படுகாலைகளிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இராணுவத்திடமிருந்து களவாடப்பட்டதாக கூறி இராணுவபுலனாய்வு பிரிவினர் தப்பித்துள்ளனர்.
புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை. அவை காணாமற்போயிருந்தன என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இலங்கை காவல்துறை இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட் அலுவலகம் இருந்தது.
அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரிவித்து வந்தார்.

வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் காவல்துறையினர் சென்றனர்.

அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர்; ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.
பயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன. அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் இன்றுவரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சந்தேகநபர் இன்று (26) திட்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
“சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் இராணுவத் தலைமையகத்திடம் விளக்கம் கோரப்பட்டது. அதற்கான விளக்கத்தை இராணுவத் தலைமையகம் வழங்கியுள்ளது.
1998ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4ஆம் திகதி இராணுவத்தின் காலாற்படைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் காணாமற்போயிருந்தன. அந்த ஆயுதங்களே தற்போது மீட்கப்பட்டுள்ளன. அவை சந்தேகநபர் வசம் சென்றமை தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது” என இராணுவத் தலைமையகம் யாழ்ப்பாணம் காவல்துறைக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதியுடன், காவல்துறையினர் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதனை வழக்கேட்டில் இணைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் 12ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila