யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்து, தமது கட்சி சார்பில் மேயர் பதவிக்கு ஒருவரின் பெயரை முன்மொழியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|
யாழ்ப்பாணம் மாநகர சபையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. கூடிய ஆசனங்களை கூட்டமைப்புப் பெற்றுக் கொண்டுள்ளதன் அடிப்படையில், மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கான முன்நகர்வுகளை அந்தக் கட்சி மேற்கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13 ஆசனங்களுடன் இரண்டாவது நிலையில் உள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுத் தீர்மானித்தது. இந்த முடிவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிச்சயமாக எதிர்க்கும் என்று அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, சபைகளில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கப்படும் என்று ஈ.பி.டி.பி. ஏற்கனவே அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் மேயர் பெயர் முன்மொழிவை எதிர்த்து, முன்னணியால் பெயர் முன்மொழியப்பட்டாலும், ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காமல் வெற்றிபெற முடியாது.
அதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக வி.மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் வட்டாரத்தில் நேரடியாகப் போட்டியிட்டிருக்கவில்லை. விகிதாசாரப் பட்டியலிலேயே உள்ளடக்கப்பட்டிருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு விகிதாசாரப் பட்டியலில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அந்தக் கட்சி வட்டாரங்களில் 9 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. வட்டாரத்தில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஆண்கள். இதனால் அந்தக் கட்சியின் சார்பில் மாநகர சபைக்கு கட்டாயம் 4 பெண்களின் பெயர்களை விகிதாசார பட்டியல் ஊடாக வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் மணிவண்ணன் உறுப்பினராவதில் சிக்கல் நிலமை ஏற்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வட்டாரத்தில் வெற்றி பெற்ற 9 பேரில் யாராவது ஒருவர் பதவி விலகுவதன் ஊடாகவே மணிவண்ணன் மாநகர சபை உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! - மணிவண்ணனுக்கும் சிக்கல்
Related Post:
Add Comments