கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபாலவை எதிர் நோக்க வேண்டிய வேளையிலும், தோல்வியே தனக்கு கிட்டும் என்று தெரிந்தும், தான் கொலை செய்து எஞ்சியிருந்த மக்களிடத்தே, போய், தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என்று கோரியிருந்தார்.
தன்னை தானே தமிழினத்திற்கான எதிரி என்பதை அவர் அன்றே உறுதிப்படுத்தியிருந்தார்.
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைப்பது தள்ளிப் போய்க் கொண்டிருப்பதற்கு பிரதான மூல காரணமாக இருந்தவர், இருப்பவர், வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்திற்கு சென்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
ஒரு இனத்தின் ஆணிவேரையே கருவறுத்து, நாசகாரம் செய்த நபர், அதே மக்களிடத்தே சென்று தேர்தலுக்கான வாக்குகளைக் கேட்கிறார் எனில், தமிழ் மக்களின் வாக்குகள் எவ்வளவு பெறுமதியானது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இன்றைய தினம் அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒருத்தர் கூட அங்கே திரளவில்லை. குறைந்தது கறுப்பு பட்டியையோ, எதிர்ப்பு பதாகையோ கூட அங்கே வைக்கவில்லை.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சரணடைந்து காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், சிறையில் இருப்பவர்கள் என்று அனைத்து உறவுகளையும் விடுதலை செய்யுமாறு வீதிக்கு வீதி உறவுகள் கதறிய படியே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
எமது தமிழ்த் தலைமைகள் தொடர்ந்தும் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு தரப்போ தமிழ்த் தலைமைகளை எதிர்ப்பதை மட்டுமே தமது கடமையாக வைத்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜனாதிபதி தேர்தலோடு சென்றவர் மீண்டும் உள்ளாட்சி தேர்தலுக்காக வந்திருக்கிறார்.
குறைந்தபட்சம் ஒரு கறுப்புத் துண்டையேனும் காட்டுவதற்கு ஒரு நாதியற்றுப் போயிருக்கிறது தேசம். தமிழ் மக்களின் வாக்குகளைத் திரட்டச் சென்றவரை பார்க்க திரண்ட கூட்டத்தை என்னவென்று சொல்ல? ஒருவேளை வழமை போன்று பேருந்துகளில் ஏற்றி வந்திருக்கலாம்.
ஆனால், தமிழ்த் தலைமைகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருக்கும் மற்றைய தரப்பு மகிந்தவின் இன்றைய வருகையை எதிர்க்காமல் இருந்தது ஏன்? தேர்தல் வந்தால் தமிழினத்திற்கு நடந்த கொடூரங்கள் மறந்து போய்விடுமா?
இனத்தை கருவறுத்த ஒருவரை எதிர்ப்பதற்கு அந்தத் தரப்பினர் யாழ்ப்பாணத்தில் இல்லையா? அல்லது மகிந்தவிற்கும் இனப்படுகொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிவிட்டார்களா?
தமிழ் மக்கள் எப்பொழுதும் சோரம் போகமாட்டார்கள் என்பது நன்கு தெரியும். பால் எது அன்னம் எது என்று மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆனாலும் கிடைத்திருக்கும் ஜனநாயக வழியைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவின் வருகை ஒரு பெயருக்கேனும் எதிர்த்திருக்கலாம்.
சந்தர்ப்பத்தை கை நழுவவிட்டுவிட்டு, மற்றைய தரப்பினர் விலைபோய் விட்டனர், சோரம் போய்விட்டனர் என்று கூச்சல் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.