தென்னிலங்கை கட்சிகள் புறக்கணிக்கப்படவேண்டும்:ஜங்கரநேசன்!


iyn

தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை எதிர்பார்த்தே இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது பகிரங்கமாக தெரிந்த ஒன்று தெரிந்த முகம் என்பதற்காக இவர்களுக்கு நாங்கள் வாக்களித்தால், நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை நாங்களே நியாயப்படுத்தியதுபோல ஆகிவிடும் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

சிங்களக் கட்சிகள் எல்லாம் தேர்தல்களின்போது ஆசனங்களைப் பிடிப்பதற்காகத் தங்களுக்கு இடையே போட்டிபோட்டுக் கொண்டாலும், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்ற கருத்து நிலையில் ஒன்றாகவே நிற்கின்றன. மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் வெல்லப்பட முடியாமல் இருந்த விடுதலைப்புலிகளைத் தாமே தோற்கடித்ததாக மார்தட்டுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அணியினர் தாங்களே கருணாவைப் புலிகளிடம் இருந்து பிரித்து புலிகளைப் பலவீனப்படுத்தித் தோற்கடிப்பதற்குக் காரணமாக இருந்தார்கள் என்று பெருமை பேசுகிறார்கள். இலங்கையை மாறிமாறி ஆண்ட இரண்டு பெருந்தேசியவாதக் கட்சிகளுமே தமிழின அழிப்பில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.
இப்போது யுத்தம் முடிந்து விடுதலைப்புலிகள் களத்தில் இல்லை என்றவுடன் இந்தக் கட்சிகள் வடக்கு கிழக்கில் எல்லா வட்டாரங்களிலுமே போட்டிபோடுவதற்குக் குதித்துள்ளன. அதுவும், ஆசை வார்த்தைகளைக் காட்டி எம்மவர்களையே வேட்பாளர்களாகவும் இறக்கியுள்ளார்கள். பரப்புரைக்காக இந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் இங்கே வந்து போகின்றார்கள். இங்கே தாங்கள் போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்களிடையே தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று உலகநாடுகளுக்குக் காட்டுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். இந்தக் கட்சிகளுக்கு நாங்கள் போடுகின்ற வாக்குகளின் மூலம் எங்கள் மூலமே இங்கு நடைபெற்றது தமிழ் இனப்படுகொலையல்ல என்று சொல்லவைக்க விரும்புகின்றார்கள்.
தென்னிலங்கைக் கட்சிகளில் போட்டியிடுகின்றவர்கள் எங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் இந்தத் தேர்தலில் அவர்களை நிராகரிப்போம். இவர்களுக்கு நாங்கள் வாக்களிக்காமல் தவிர்ப்போம். மற்றவர்களிடமும் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவோம். இதுதான் யுத்தத்தை நடாத்திய, அதற்கு ஆதரவளித்த தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாங்கள் காட்டுகின்ற குறைந்தபட்ச எதிர்ப்பாக இருக்கும் என்றும் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
iyn
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila