மூதூரில் இயங்கிவந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான ஏ.சி.எப்பின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பதிலளிக்குமாறு அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்ட் 4ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடைபெறவில்லை என அந்த நிறுவனம் கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச் செயல் தொடர்பில் விசேட நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த படுகொலைகளை இராணுவத்தினரே மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் அமைப்பும், புலிகளே மேற்கொண்டதாக இராணுவத்தினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
எனினும் இவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி படுகொலை செய்யப்பட்டதாகவும், இவர்களைச் படுகொலை செய்தவர்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினரே என்பதற்கு தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் ஏ.சி.எப். நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.