எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினையை பத்தோடு பதினொன்றாக சேர்த்து நோக்குகின்ற அரசியல் அணுகுமுறை ஒன்றை மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் ஜெனீவாவில் வெற்றிகரமாக கையாண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்ற வாசகத்தை, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறிவந்தார்.
ஆனால், நல்லாட்சி அரசாங்கம் அதனை புதிய அரசியல் அணுகுமுறையாகவும், ஜெனீவா மனித உரிமைச் சபையும் அந்த அடிப்படையில் இலங்கை விவகாரத்தை நோக்க வேண்டும் என உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் உயர்மட்ட இராஜதந்திரிகளை சந்தித்து உரையாடிய வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, இனப்பிரச்சினை இல்லை என்ற மறைமுகமான கருத்தை முன்வைத்ததுடன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையிலும் அமைச்சர் திலக் மாரப்பன விளக்கமளித்துள்ளார் என்று ஜெனீவா தகவ்லகள் கூறுகின்றன.
ஜெனீவாவுக்குச் சென்ற தமிழ் பிரதிநிதிகள் பலர், மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் முன்னேற்றங்கள் எதுவும் இல்லையென குறைகூறியதுடன், சர்வதேச விசாரணைக்கும் அழுத்தங்களை கொடுத்தனர்.
பிரதான மண்டபத்துக்கு வெளியில் இடம்பெற்ற உப குழுக் கூட்டங்கள், மற்றும் சிறிய சந்திப்புக்களில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கண்டனங்கள் வெளியிடப்பட்டது. தமிழ் மக்கள் மீது இராணுவத்தின் கெடுபிடி சித்திரவதைகள் தொடருவதாகவும் ஆதரங்களுடன் நிரூப்பிக்கப்பட்டது. போர்க்குற்ற விசாரணையை மைத்திரி ரணில் தட்டிக்கழிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட மைத்திரி ரணில் அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளை எடுத்துக் கூறியிருந்தன. குறிப்பாக இராணுவத்தின் இரகசிய சித்திரவதை முகாம்கள், திருகோணமலை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் ஜெனீவா மனித உரிமைச் சபையின் உயர்மட்ட இராஜதந்திரிகள், இலங்கை அரசாங்கம் கூறிய விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அழுத்தங்கள், நேரடியான எச்சரிக்கைகளை விடுத்திருந்தாலும் மைத்திரி ரணில் அரசாங்கத்துக்கு மீண்டும் நிபந்தனையுடன் கால அவகாசம் ஒன்றை வழங்க மனித உரிமைச் சபை விருப்பம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இலங்கை அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.