கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் (2017) மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நில மீட்பு போராட்டம் இன்று (01) ஒரு வருடத்தை பூர்த்தி செய்கிறது. கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் டிசம்பர் 28 ஆம் திகதி மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து, மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணிகளுக்குள் கடந்த 1 ஆம் திகதி மக்கள் சென்றனர்.
இந்நிலையில் இன்னும் தமது காணிகளில் விடுவிக்க வேண்டியுள்ள 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து தொடரும் போடாட்டம் இன்று (01) ஒரு வருடத்தை நிறைவு செய்து இராண்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது.
இந்நிலையில் தமது காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாட இன்று காலை 10 மணிக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் தமது போராட்ட இடத்துக்கு வருகைதருமாறு மக்கள் பகிரங்க அழைப்பு விடுக்கின்றனர்.