ஆதவன் தமிழ் செய்திகள் | பரண் மீது ஏறியதால் பதற்றம்! - கேப்பாப்புலவு வீதியை மூடியது ராணுவம்


முல்லைத்தீவு கேப்பாப்புலவு ராணுவ முகாமுக்கு முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், கேப்பாப்புலவு பிரதான வீதியை மூடிய ராணுவம் மக்களை காட்டு வழியாக செல்லுமாறு பணித்துள்ளது.
தமது பூர்வீக காணியை விடுவிக்குமாறு அம்மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். குறிப்பாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை நடத்திய ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை என்பவரின் போராட்டம், நேற்றுடன் ஒரு வருடத்தை எட்டியது.
இந்நிலையில், நேற்றைய சுதந்திர தினத்தை எதிர்த்து கருப்பு உடையணிந்து பரண்மீது ஏறி அவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். நண்பகலையும் தாண்டி அவரது போராட்டம் தொடர்ந்த நிலையில், அங்கு வந்த முள்ளியவளை பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் தடுத்தனர். இதனையடுத்து ராணுவ முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அண்மையில் திறந்து விடப்பட்டிருந்த கேப்பாப்புலவு பிரதான வீதியை மூடிய ராணுவம் மக்களை காட்டு வழியாக மீண்டும் செல்ல நிர்ப்பந்தித்துள்ளது.
இதன் பின்னர் குறித்த இடத்துக்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, மக்களுடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து  சென்று ஏற்கனவே போராட்டம் நடத்திய இடத்தில் அமர்ந்து தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாம் கலைந்து சென்ற பின்னர் பாதையை ராணுவம் திறந்துவிட்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள், தமது பூர்வீக காணிகளை முழுமையாக விடுவிக்கும்வரை போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.
இம்மக்களின் போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) 340 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்புலவு மக்களுக்குச் சொந்தமான காணிகளில் 133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி விடுவிக்கப்பட்டன. குறித்த காணிகளுக்குள் கடந்த முதலாம் திகதி மக்கள் சென்றனர்.
இப்பகுதியில் 104 குடும்பங்களுக்குச் சொந்தமான மேலும் 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், அக்காணிகளை விரைந்து விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியே மக்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
kepapulavu protest 2
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila