இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய கருத்து கசப்பானது!

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இராணுவத்திற்கு எதிராக பல வழக்குகள் நடைபெற்று வருகிறன. கடத்தல், கொலை செய்தல் தொடர்பில் இவ்வாறு வழக்குகள் நடைபெறுகின்ற போதும் இராணுவம் எந்தவிதப் பிழையும் செய்யவில்லை என ஜனாதிபதி தெரிவித்த விடயம் மிகவும் கசப்பானது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரினால் பாதிக்கப்பட்டு உரிமைகளுக்காக போராடுகின்ற மக்கள் என்ற வகையில் அம் மக்கள் தொடர்பாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தொடர்ச்சியாக சில கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
அத்துடன் அதற்கான அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நாங்கள் எதிர்பார்த்த தீர்வுகள் முழுமையாக கிடைத்திருக்கின்றதா என்பது கேள்விகுறியாகவுள்ளது.
ஜனாதிபதி ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தில் ஆற்றிய உரை மிக முக்கியமானதாக பலரால் கருதப்படுகிறது. இராணுவம் எந்தவித பிழையும் செய்யவில்லை எனத் தெரிவித்த விடயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்போதும் கூட கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இராணுவத்திற்கு எதிராக பல வழக்குகள் நடைபெற்று வருகிறன. கடத்தல், கொலை செய்தல் தொடர்பில் இவ்வாறு வழக்குகள் நடைபெறுகின்ற போதும் இராணுவம் எந்தவிதப் பிழையும் செய்யவில்லை என்ற விடயம் மிகவும் கசப்பானது.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுககு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. யுத்த மீறல்களுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைக்குமா என்பதும் கேள்வியாகவுள்ளது.
அரசாங்கத்திடம் நாம் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றோம். அந்த வகையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பல வருடங்களாக எந்தவித வழக்குகளும் இன்றி கூட பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கையில்லாது இருக்கிறது.
அமைக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம் கூட இனிமேல் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் காரியலயமாகவே இருக்கிறது.
இதுவரை காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு அழுத்தமான தீர்வை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சிபாரிசுகளுக்கு அமைவாக பதில் அளிக்க வேண்டும்.
வடபகுதி உட்பட இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக வடபகுதியில் இடம்பெறும் சுருள்வலை மீன்பிடியை தடை செய்வதற்கு 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் தெற்கு மீனவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகிறன. பருவகாலத்திற்கு வருகை தரும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட முறைகளை பின்பற்றுகிறார்கள்.
அதனை தடுப்பதற்கும், வடபகுதி மற்றும் தென்பகுதி மீனவர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும்.
வடபகுதியில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்கள் சுகபோகமான செயலகங்களாக இருக்கின்றன. ஆனால் வடபகுதி உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுடன் இணைந்து எந்தளவிற்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஆகவே உள்ளூராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடன் கலந்து பேசி அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பெண்களை உள்வாங்கிய போதும் அவர்களது கருத்துக்கள் அங்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வியும் உள்ளது. உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
மீள்குடியேறிய மக்கள் தமது வீட்டுத்திட்டங்களை சரியாக கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளது. அரசாங்கம் வேறுபட்ட வீட்டுத்திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளமையால் மக்கள் மத்தியில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
எனவே வீட்டுத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இறுதியாக மலையக மக்களினுடைய சம்பள பிரச்சினையிலும் ஜனாதிபதி தலையிட்டு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila