வடக்கு முதல்வரால் நிம்மதியில் பலர்.... சிக்கலில் சிலர்...!

தமிழர்களின் உரிமை வேண்டிய போராட்டத்தில் பல வரலாற்றுப் பதிவான மனிதர்களை தன்னகத்தே கொண்டு தமிழர்களின் போராட்டம் நகர்ந்தது, நகர்ந்துகொண்டிருப்பது யாவரும் அறிந்த உண்மை.
வட மாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரையில் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக் ஈடுபடுத்திய நிலையில் அரசியல் எனும் புதிய அங்கியை அணியும் நிலைக்கு காலம் அவரைத் தள்ளியது.
இன்றைய நிலையில் தமிழரின் தலைமை யாரெனும் பாரிய வினா சாமானிய மனிதர் தொடங்கி சகலரிடமும் உள்ளதை அனைவரும் நன்கறிவர். காரணம் காலாகாலங்களில் தமிழர்களின் தலைமை பெயர் குறிப்பிடும் வகையில் தம்மை நிலைநிறுத்தியமையை மறக்க முடியாது.
சம்பந்தன் அவர்களும் தலைமையெனும் பண்பில் சற்றும் தளர்வின்றி தனது ஆளுமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டிக் காப்பதிலும் நிதானமான கருத்துக்களை வெளியிடுவதிலும் கட்சிக்குள் எழும் விமர்சனங்களை கையாளும் முறைகளைப் பார்க்கையில் தன் தலைமையில் இயலுமானவரை தமிழ் மக்களின் உரிமை வேண்டிய போராட்டத்தை பல இடர்களின் மத்தியில் முன்னகர்த்துகிறார்.
இவ்விடத்தில் தான் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் தன் களங்கமில்லாத ஆளுமையை நிலைநிறுத்த முற்படுகிறார். அதுவும் அவராக முன்னிறுத்த முற்படவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்(தமிழரசுக் கட்சி) ஆளுமை இல்லாத சிக்கலான விவகாரங்களே வடக்கு முதல்வரை இக்களத்துக்கு நகர்த்தியது.
மிகவும் அமைதியாக தன் அரசியலை மக்களுக்காக முன்னகர்த்திய விக்னேஸ்வரன், தலைவராக சம்பந்தனையே இன்று வரை மனதார ஏற்றுள்ளமையை அவரது கருத்துக்கள் மூலம் அறியலாம்.
இவ்விடத்தில் சம்பந்தனின் தூரநோக்கான தன்மை புலப்படுகிறது. விக்னேஸ்வரனை அரசியலில் உள்நுழைத்ததில் பலருக்கு பங்குண்டு. இங்கு சம்பந்தன் விக்னேஸ்வரன் மீது வைத்துள்ள உண்மையான தேவையும் கடமையும் அவரின் உள்மனதால் நன்குணரப்பட்டுள்ளது.
கட்சிக்குள் விக்னேஸ்வரன் மீது எழுந்த விமர்சனங்களை மிகவும் நிதானமாக கையாண்டதுடன் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் பற்றி முரண்படாத கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் சுமந்திரனின் தேவை மிக மிக அவசியமானதாக இருந்தது உண்மை. என்பதுடன் இன்றைய நிலையில் சிற்சில பொறுப்பற்ற கருத்துக்கள் அவரை தமிழ் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தி விடலாம். அதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பல தலைவர்கள் வாழ்ந்துள்ளனர்.
அவர்களில் எல்லோரையும் தலைவர்களாக தமிழ் மக்கள் ஏற்கவில்லை. ஆனாலும் தந்தை செல்வா, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றவர்கள் இன்று வரை தமிழ் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களின் பட்டியலில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலை அண்மைக்காலமாக புலம்பெயர் தேசங்களிலும் ஈழ தேசங்களிலும் மக்களின் கருத்துக்கள் வாயிலாக புலப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் சுமந்திரன் அவர்கள் முன்வைக்கும் காலங்கடந்த விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாக மாறிவிட்டது. இதனை சுமந்திரன் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் சுமந்திரனின் நீண்டதூர பயணத்துக்கு இவைகள் ஆரோக்கியமாக அமையாது.
சிலவேளை சிலர் கூற முற்படலாம், கடந்த தேர்தலில் சுமந்திரனுக்கு யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் மூலம் அவரை தமிழ் மக்கள் அங்கீகரித்துள்ளதாக. அப்படிக் கூறுபவர்கள் புரியவேன்டியவை - இந்த விமர்சனங்களை தேர்தல் காலத்தில் சுமந்திரன் முன்வைத்திருக்கலாம். ஏன் முன்வைக்கவில்லை.
அப்படி முன்வைத்தால் என்ன முடிவு கிடைக்குமென சுமந்திரன் நன்கறிந்திருந்தார். அதனால்தான் அதனை தவிர்த்தார். இது சுமந்திரனின் மனட்சாட்சிக்கு நன்கு புரியும்.
மேற்கூறுபவர்கள் இவ் உண்மையைப் புரிவார்களா? அப்படி இல்லையாயின் இனியாவது புரிந்துகொள்வது வரலாற்றுக் கடமை.
எம் தமிழ் சமூகத்திற்கென கலை, கலாச்சார பண்பாடுகள் உண்டு. அதை எக்காலத்திலும் யாரும் யாருக்காகவும் மாற்றமுடியாது. இவ்விடத்தில்தான் சுமந்திரன், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களின் கருத்து மோதலும் இவர்களில் உண்மையில் தமிழர்களை பிரதிபலிப்பது யார் என்கின்ற வாதமும் வலுப்பெறுகிறது.
வடக்கு முதல்வர் கடந்த மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் இருந்த வேகத்தை விட புதிய தேசிய அரசுக் காலத்தில் பன்மடங்கு அதிகரித்ததுடன் தமிழ் மக்கள் ஏதோ மிகமிக ஆபத்தில் உள்ளனர் எனும் பதற்றம் அவரிடம் உள்ளதை அண்மைய செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.
அதில் அரசியல் கைதிகள் விடயத்தில் இருமுறை கொழும்பு சென்றதுடன் தன் தலைமைத்துவ பண்பை முதன்முதலாக நான்கு அமைச்சர்களுடன் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் வெளிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அரசியற் கைதிகளுடனான சந்திப்பு கொழும்புத் தலைமை வடக்கு முதல்வருக்கு கொடுத்த உறுதிமொழிப்படி சரியா தவறா என்பதற்கப்பால் திங்கட்கிழமை அரசுத் தலைவரால் முடிவு வழங்கப்பட்டமை தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரிடம் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.
தமது நாட்டாண்மை தன்மை அரசியலில் வலுவிழந்து விட்டது, வடக்கு முதல்வரின் ஆதரவுத் தளம் மக்களிடம் மட்டுமன்றி தென்னிலங்கை அரசு மட்டத்திலும் அதிகரித்துள்ளதாகும்.
நூற்றில் தொண்ணூற்றைந்து வீதமான பலர் நிம்மதியில் உள்ளமை அவர்களின் எளிமையான உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இப்படியான நிலையில் வடக்கின் முதல்வர் நான் அரசியலில் நிலையானவன் அல்ல.
நான் மக்களுக்காக மட்டுமே நீதியாக பணிசெய்வேன் எனக் கூறுவது உண்மையும் நேர்மையை ஒத்ததுமான கருத்துமாக இருந்தால் சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அவர் காலத்தில் அவரது மனம் நிறைவடையும் வகையில் தமிழ் மக்களின் தலைமையை சுயநலத்துக்காக அல்ல.... மாறாக பொதுநலத்துக்காக விரைந்து ஏற்கவேண்டும்.
அப்படியில்லையாயின் வடக்கு முதல்வரும், முன்னாள் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரன் வரலாற்றுப் பழி பாவங்களுக்கு அவர் உயிராய் நினைக்கும் ஆன்மீகம் அனுமதிக்காது என்பதனை அவர் நன்கறிவார்.
அதனால் அவர் எக்காலத்திலும் இப்படியான விடயங்களை ஏற்கமாட்டார். காரணம் இன்றைய அவரது உயிர் வட கிழக்கு என மக்கள் நம்புகின்றனர்.
கே.ராக்கி
rhakkey@gmail.com
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila