அந்த வகையில் தற்போது கிழக்கில் கல்முனை பிரதேசத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக, கல்முனை தமிழ் பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் கோவில் மாறியுள்ளது.

இதனால் கல்முனை மாநகரசபையில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஊழியர்களால் வழிபடுவதற்காக சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆலயத்தினை அந்த பகுதியில் இருந்து அகற்றுவதற்கு கல்முனை நீதி மன்றத்தில், கல்முனை மாநகரசபை மேயர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த விடயம் அந்த பகுதியில் உள்ள தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம், கல்முனை மாநகரசபைக்குட்பட்ட எல்லைக்குள் அமைக்கப்பட்ட சட்டவிரோதமான கட்டடம் என குறிப்பிட்டே இந்த ஆலயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரசபையின் மேயராக முஸ்லிம் ஒருவர் இருக்கின்றமையினால், குறித்த விடயம் மாநகரசபையில் மட்டுமல்லாது அந்த பகுதியிலும் ஒரு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கல்முனை மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், மேயருக்கும் இடையில் சபை அமர்வுகளின் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க கல்முனை தமிழ் பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றவர மறைப்புக்காகக் அமைக்கப்பட்டிருந்த கிடுகுவேலியை 200 பேர்கொண்ட ஒரு குழுவினர் உடைத்தெறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அந்த பகுதியில் மோதல் நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு எமது செய்தி சேவையான லங்காசிறி தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், அந்த உறுப்பினரிடம் இருந்து பொறுப்பான பதில்கள் எதனையும் வழங்காத நிலையில், சிறிது நேரம் கழித்து தொடர்புகொள்ளுமாறு கூறினார்.
இதனை தொடர்ந்து பல முறை தொடர்பை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியாமல் போனது.
இந்த வியடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாத்திரமே குரல்கொடுத்து வருகின்றனர்.
கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் யாரும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றமை குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைமைகளும் இந்த விடயத்திற்கு துணை போய்விட்டார்களா, ஏன்? அவர்கள் மௌனம் காத்து வருகின்றனர் என அந்த பகுதி மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

குறைந்தபட்சம் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராவது சம்பவம் இடத்திற்கு வந்து பார்வையிட்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டமைப்பின் தலைவர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்வொன்னை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் தற்போது குரல்கொடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு பல்வேறு விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி தீர்வொன்னை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஏனெனில், இந்த சிறிய விவகாரத்தை ஆரம்பத்திலேயே தீர்க்காவிட்டால் அது நாளடைவில் இனங்களுக்கு இடையில் மோதல் நிலையினை உருவாக்கி விடும் என பலரும் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், ஆரம்பத்திலேயே உரிய தரப்பினர்கள் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.