முல்லைத்தீவில் வன இலாகாவின் காட்டாட்சி! - வடக்கு மாகாணசபையில் கண்டனம்


முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்களில் வனஇலாகாவினர் சர்வாதிகாரத்துடன் செயற்பட்டு வருவதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதாக இத்தகைய செயற்பாடுகளை வனஇலாகாவினர் நிறுத்த வேண்டுமென்றும் கோரி வடக்கு மாகாண சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்களில் வனஇலாகாவினர் சர்வாதிகாரத்துடன் செயற்பட்டு வருவதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதாக இத்தகைய செயற்பாடுகளை வனஇலாகாவினர் நிறுத்த வேண்டுமென்றும் கோரி வடக்கு மாகாண சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஇலாகாவின் சர்வாதிகார செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமெனக் கோரி உறுப்பினர் ரவிகரன் பிரேரணையொன்றைக் கொண்டு வந்திருந்தார்.
அப்பிரேரணையில் “வனஇலாகா தாம் நினைத்தபடியே எதும் செய்யலாம் என்றாற் போல் மாவட்டத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக காளி மாத்தறை அம்பாந்தோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மக்களைக் கொண்டு வந்து காடுகளை அழித்து குடியேற்றலாம். அவர்களுக்கு காணிகளையும் வழங்கலாம் என்றது போன்று செயற்படுகின்றனர். ஆனால், உண்மையாக இக்காணிகளின் பூர்வீக உரிமையாளர்களான தமிழர் காணிகளை மட்டும் பறிக்கலாம். அல்லது தடுக்கலாம். இதுதான் வனஇலாகாவின் செயலாக முல்லைத்தீவில் காணக் கூடியதாக உள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் 15,356 ஏக்கர் காணிகளுக்கு தாங்கள் எல்லைகள் இட்டுள்ளதாக வனஇலாகா அதிகாரிகள், 2016இல் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். இந்த ஏக்கர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். 4,035 குடும்பங்களின் வாழ்வாதார 13,032 ஏக்கர் நிலங்களும் இதற்குள் உள்ளடங்கும்.
செம்மலை மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கும் வாழ்வாதாரத்துக்குரிய நிலங்கள் புளியமுனைப் பகுதியில் உள்ளன. 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து உப உணவுப் பயிர்ச்செய்கை இந்தக் காணிகளில் செய்து வந்தார்கள். போர் நடைபெற்ற 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இங்கு பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலை இருந்தது.
கிட்டத்தட்ட 35 வருடங்களின் பின்பு தற்போது இங்கு பயிர்ச்செய்கை செய்து வருகிறார்கள். கடந்த மாதம் அப் பகுதிக்குச் சென்ற வனஇலாகாவினர் முன்பு எல்லைகள் இட்டிராத இடங்களில் அங்காங்கே ஒழுங்கீனமற்ற முறையில் ‘எப்’ என்ற அடையாளத்தை இட்டு இந்த இடங்களுக்குள் நுழையக் கூடாது என்றும் அதனை மீறுவோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்துள்ளார்கள்.
இவ்றிவித்தல்களால் வயிற்றுப் பசிக்காக வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொண்டிருந்த 40 குடும்பங்களின் 100 ஏக்கர் வரையான காணிகளில் தொழில் செய்ய முடியாத நிலையில் தவிக்கின்றார்கள். இன்னும் இரண்டு வார காலத்துக்குள் கச்சான் சோளம் ஆகியன பயிரிட வேண்டிய நிலையில் இத்தடுப்பானது இந்த மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இக்குறைபாடுகளை நேரில் வந்து பார்வையிடும் படி என்னிடம் கேட்டுக் கொண்டதற்கமைய கடந்த முதலாம் திகதி நான் அங்கு சென்று அப்பகுதி மக்களுடன் குறித்த இடங்களைப் பார்வையிட்டேன். இக்காணிகள் சிலவற்றுக்கு ஆவணங்கள் உள்ளன. ஒவ்வொரு காணிகளிலும் ஒன்று அல்லது இரண்டு பெரிய மரங்கள் உள்ளன. இவை ஏத்துக்காவல் மற்றும் நிழல்களுக்காக முன்பு தொடக்கம் இருந்தவை எனவும் தெரிவித்தார்கள்.
கடந்த மூன்று வருடங்களாக தாம் உப உணவுப் பயிர்ச்செய்கை செய்து வரும் நிலையில் இதனை ஏற்றுக் கொண்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிபாரிசு விவசாயக் கிணறுகளும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்வையிட்டு பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தினேன். ஆனால், தான் இந்தியா செல்வதாகவும் வந்தவுடன் இது விடங்களைப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஆகவே இந்தவிடயத்தில் இந்த அவை கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். இந்த மக்களுடைய வாழ்க்கையில் வயிற்றுப் பசியில் கைவைக்காது அவர்களுடைய சொந்த நிலங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என, ரவிகரன் இத்தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.
இதனையடுத்து, சபையில் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய வனஇலாவினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் வனஇலாகா திணைக்களத்துக்கும் இத்தீர்மானத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக, அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila