காணாமல் ஆக்கப்பட்டவரின் ஆட்கொணர்வு மனுவை இழுத்தடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்! - குட்டு வைத்த நீதிபதி


யாழ்ப்பாணம்- அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த  சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா என கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனுதாரரின் வயதைக் கருத்திற் கொண்டு விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம்- அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கின்றதா என கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனுதாரரின் வயதைக் கருத்திற் கொண்டு விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் குறித்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளில் நேற்று இடம்பெற்ற முக்கிய சாட்சியப் பதிவின் போது, 5ஆவது பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகவில்லை.
இந்த வழக்கு காலை மன்றினால் விளக்கத்துக்கு எடுக்கப்பட்ட போது, அரச சட்டவாதி மன்றில் தோன்றவில்லை. அதனால் பிற்பகல் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் வழக்கு விளக்கத்துக்கு வந்த போது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மன்றில் தோன்றினார்.
“சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அரச சட்டவாதி வழக்கின் சாட்சியிடம் குறுக்கு விசாரணையை முன்னெடுக்கவிருந்தார். எனினும் அவர் பயணமாகவிருந்த விமானம் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்துக்கான சேவையை இடைநிறுத்தியது. எனவே வழக்கை தவணையிடுமாறு மன்றைக் கோருகின்றேன்” என்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அப்போது, வழக்கை இழுத்தடிப்புச் செய்யும் நோக்கம் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு உண்டா? என்று மன்று கேள்வி எழுப்பியது. கடந்த தவணையின் போதும் அரச சட்டவாதி மன்றில் தோன்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி மன்று அதிருப்தியை வெளியிட்டது.
மனுதாரரான வயோதிபத் தாயாரின் இயலுமையைக் கருத்திற்கொண்டு வழக்கை காலம் தாழ்த்தாமல் நிறைவு செய்து, விசாரணையை அறிக்கையை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், குறுகிய தவணையாக வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கத்தை ஒத்திவைத்தார்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார். அவரை இராணுவத்தினரால் கடத்திச் சென்று தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என்று இளைஞனின் பேர்த்தியரான குணவதி நடேசர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாத முற்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் அரியாலை துண்டி இராணுவ முகாமில் 1996ஆம் ஆண்டு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஜெயவர்த்தன முதலாவது பிரதிவாதியாகவும் பூசா தடுப்பு நிலைய பொறுப்பதிகாரி இரண்டாவது பிரதிவாதியாகவும் இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் முறையே 3, 4 மற்றும் 5ஆவது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் சுமார் 30 மாதங்களாக இடம்பெற்றன. நிறைவில் மனு தாரரின் கோரிக்கைக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி கட்டளை வழங்கினார்.அதன் பிரகராமே வழக்கு விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila