கடந்த வாரம் சென்னைக்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு, கனடாவில் இருந்து இயங்கும் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் கலந்துரையாடுவதற்காக சென்றமை தான் காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என் மீது போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எனக்கு எந்த தடை செய்யப்பட்ட அமைப்பையும் தெரியாது. நான் யாருடனும் கலந்துரையாடவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
தனக்கு எதிராக போலியான பிரசாரங்களை பரப்பும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 10ஆம் திகதி தமிழ்நாட்டில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நான் இந்தியாவுக்கு பயணமாகியிருந்தேன். எனினும், எனது கடவுச் சீட்டுக்களில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்து என்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில் எனது கடவுச்சீட்டில் குறைபாடு உள்ளதாகவும், பயங்கரவாத குற்றத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் விசாரணைகளுக்கு என்னை உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள் எனக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
எனினும், என்னுடன் குறித்த மாநாட்டிற்கு வருகைத் தந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் சில முயற்சிகளுக்குப் பிறகு இறுதி நேரத்தில் பயணிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சுமந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கும், அஸ்மினின் முகநூல் பதிவிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக நான் நம்புகின்றேன். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்னை சென்னை செல்ல விடாமல் செய்ய மேற்கொள்ளப்பட்ட சதியாகவே இதை கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இதன்போது உறுதியளித்தார்.