யாழில் பரபரப்பு : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீர் மரணம்

 யாழ். வல்வெட்டித்துறை (Valvettithurai) காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயது குடும்பஸ்தரான சந்திரகுமார் சந்திரபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை (18.01.2025) குறித்த நபர் பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்ற தருணம் குறித்த நபருக்கு பிடியாணை உள்ளதாக கூறி விசாரணை செய்ய வல்வெட்டித்துறை காவல்துறையினரால் விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் வைத்து நேற்றையதினம் (19.01.2025) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழில் பரபரப்பு : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீர் மரணம் | Person Detained At Jaffna Police Station Dies

குறித்த நபர் இரவு உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்கள் பெற வேண்டியிருந்ததால் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலத்தின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் இது காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனாலேயே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila