சிறிலங்காவின் (Srilanka) சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி நகரத்தில் யாரோ சிங்கக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தார்கள்.
2009ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் எங்கள் நகரத்தில் புலிக்கொடி உறுமிக்கொண்டு பறக்கும். அந்தக் கொடியின் முன்னால் எங்கள் மக்கள் அனைவரும் திரண்டு நிற்பார்கள்.
சிறுவர்களாயிருந்ந்த காலத்தில் மிகுந்த ஈர்ப்போடு அந்தக் கொடியின் முன்னால் நிற்போம். அது தமிழர்களின் கொடி என்பதும் அது தமிழர் நிலத்தின் கொடி என்பதும் எங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்காமலே உணர்வில் கலந்திருந்தது.
அப்படித்தான் அன்றைய நாட்களில் எங்கள் தேசத்தில் இருந்த ஒவ்வொரு அடையாளங்களிலும் எங்கள் உயிரையும் உணர்வையும் கலக்கச் செய்து வாழ்ந்தபடி இருந்தோம்.
ஆனால் இன்றைக்கு எங்கள் நகரத்தில் யாரோ பறக்கவிட்டிருக்கும் கொடிகளை ஒரு வெறுப்புடன் பார்த்தபடி நகர்கிறோம். அந்தக் கொடி எங்கள் கொடியில்லை என்ற உணர்வில் ஏன் ஒவ்வொரு ஈழத் தமிழ்மக்களும் கடந்து செல்கிறார்கள் என்பதை ஶ்ரீலங்கா அரசும் அதன் மக்களும் ஆராய வேண்டும். ஆனால் அதற்குப் பதில்கள் மிக வெளிப்படையாகவே தென்படுகின்றன.

சிறிலங்காவின் சுதந்திர தினம் நடைபெறுகின்ற நாளில் வடக்கு கிழக்கைச் யாழ் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கண்ணீர் விட்டுப்பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனசாட்சி உள்ள மனிதர்களை கரைத்துக் கொண்டிருந்தது.
தன் ஊருக்கும் தன் கோயிலுக்கும் இன்று நேர்ந்த கதியை அவர், கண்ணீரோடு பேசினார். ஊர் திரும்பியவேளையில் தன் கோயிலைக் காணவில்லை என்றும் அது தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டது என்றும் இன்றும் தங்கள் மயானம்கூட தங்களுக்கு இல்லை என்றும் கூறுகிறார்.
சொந்த நாட்டிலும் அகதியாக வாழ்கின்ற அவலத்தைப் பற்றிப் பேசி அந்த இளைஞர் கண்ணீர் விடுகிறார். தன்னுடைய காணி இன்றுவரையில் விடுபடவில்லை என்றும் தங்கள் நிலங்களில் ஒரு இராணுவக் கமாண்டர் மாதத்தில் ஒருமுறை அல்லது இருமுறை வந்து ஒருவேளை உணவை எடுத்து மதுவிருந்து எடுத்துச் செல்வதாகவும் அப்போது அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதைக் கண்டு வேதனையுடன் கண்ணுற்றதையும் அவர் குறிப்பிட்டார்.
“எங்கிருந்தோ வந்த நீங்கள் என்னை எனது காணிக்குள் விடாமல் இப்படிக் கூத்தடிக்கும்போது, என்னுடைய மனம் எப்படி வேதனைப்படும்” என்றும் அந்த இளைஞர் அக் காணொளியில் கேள்வியெழுப்பி கண்ணீர் விட்டிருந்தார்.
அநுர இன்னொரு மகிந்தவா?
இப்படியாக அந்த இளைஞர் பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னணியில் இராணுவத்தினர் செல்கின்றனர். சிலவேளை எங்கள் மண்ணில் காணுகின்ற காட்சிகள் ஈழ நிலத்தில் அவலத்தையும் ஆக்கிரமிப்பையும் ஒடுக்குமுறை அரசியலையும் தெளிவாகக் காட்டி விடுகின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தின்போது புதுக்குடியிருப்பில் ஆள் அரவமற்ற ஒருகடையில் ஶ்ரீலங்கா தேசியக் கொடி பறப்பதாகவும் அங்கு மக்கள் சுதந்திரதினத்தைக் கொண்டாடுவதாகவும் காட்ட முற்பட்டார்கள். கிளிநொச்சி நகரத்தில் பசுமைப் பூங்காவில் எங்கிருந்தோ பேருந்தில் அழைத்துவந்த மக்களைக் கொண்டு ஶ்ரீலங்கா சுதந்திரதினம் கொண்டாடப்படுவதாக காண்பிக்க முயற்சி செய்தார்கள்.
இப்படியாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரதினத்தைப் புறக்கணித்துள்ள நிலையில் போலியாகவும் பொய்யாகவும் சுதந்திரதினத்தைக் கொண்டாடுவதைப் போலக் காண்பிக்க அநுர அரசும் முயற்சி எடுத்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டிய விடயம்.
கடந்த காலத்தில் அதாவது 2009இற்குப் பிறந்தைய சூழலில் ராஜபக்ச அரசாங்கம், வடக்கு கிழக்கில் தமிழர்கள் ஶ்ரீலங்கா சுதந்திரதினத்தைக் கொண்டாடுவதைப் போலக் காண்பிக்க ஆயுதமுனை கொண்டு சிங்க்க் கொடிகளை பறக்க விட்டதும் திணித்ததும் நாம் கண்ட அனுபவங்கள்.
அதேபோலவே இன்றும் அநுர அரசாங்கமும் ஆட்களை இறக்குமதி செய்து வடக்கு கிழக்கில் சுதந்திரதினக் கொண்டாட்டம் இடம்பெற்றதைப் போல தேற்றப்பாடுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுகின்றது. ஆக ராஜபக்ச போன்ற ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கில் மேற்கொண்ட அடக்குமுறை ஒடுக்குமுறை அரசியலைத்தான் அநுர அரசும் மேற்கொள்ளுகிறதா? என்பதும் அதில் இதுவும் ஒரு வெளிப்பாடா? என்பதும் கேள்வி எழுப்ப வேண்டிய விடயமாகிறது.
இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்க முடியாது
கடந்த தேர்தல்களில் வடக்கு கிழக்கில் தமிழ் தலைவர்கள்மீதான விமர்சனங்களால் தேசிய மக்கள் சக்தி எனும் ஜேவிபி ஆசனங்களைப் பெற்றமை காரணமாக அதைவைத்து ஶ்ரீலங்கா அரசுக்கு வெள்ளை அடித்துவிடலாம் என்று இன்றைய அரசு எண்ணக் கூடாது.

அந்த விடயத்தில் ஜேவிபிக்கு தென்னிலங்கையின் எல்லாப் பேரினவாதிகளும் ஆதரவு அளிப்பார்கள். ஆனால் அவைகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவே வடக்கு கிழக்கில் தமிழர் தேசம் ஶ்ரீலங்கா சுதந்திர தினநாளில் போராட்டங்களின் வழியாக எதிர்ப்புக்களைப் பதிவு செய்துள்ளது.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் ஶ்ரீலங்காவின் சுதந்திரதினத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும், இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது?
முதலிய கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதேவேளை ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையான சுயநிர்ணய உரிமை தமிழ்த் தேசியம், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் முதலிய கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டும், தேபோல இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் பன்னாட்டு விசாரணை வழியாக நீதியை முன்வைக்க வேண்டும் முதலிய கோரிக்கைகளை வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கிழக்கில் எழுந்த குரல்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பறந்த ஶ்ரீலங்கா அரசின் கொடியை இறக்கி கறுப்புக் கொடியை பல்கலைக்கழக மாணவர்கள் பறக்கவிட்டனர். அத்துடன் ஶ்ரீலங்காவின் சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு வடக்கு மாகாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் கிழக்கு மாகாணமும் ஶ்ரீலங்கா சுதந்திரதினத்தைப் புறக்கணித்து வெகுண்டதில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதையம் வெளிப்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த போராட்டத்தில் மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டார்கள்.
'இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்', 'நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா', 'சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு?', 'எங்கே எங்கே உறவுகள் எங்கே?' போன்ற ஈழ மக்களின் குரல்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஶ்ரீலங்கா அரசை நோக்கி எழுந்திருந்தன.
இப்படியாகத்தான் ஈழத் தமிழ் மக்களின் மனக்கொந்தளிப்பு இருக்கிறது. அவர்கள் ஶ்ரீலங்கா சுதந்திரதினத்தை புறக்கணிப்பது இதற்காகவே. இதனைக் கடந்த கால ஶ்ரீலங்கா அரசுகளும் உணரவும் ஏற்கவும் மறுத்தன. அதையே அநுர அரசும் தொடர்கிறது. அதனால்தான் போலியாக வடக்கு கிழக்கில் சுதந்திரதினக் கொண்டாட்டங்களை காண்பிக்க முனைகிறது.