எதிர்வரும் 31.01.2015 சனிக்கிழமை காலை8.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை‘பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்துதல்’என்ற கருப்பொருளில் பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தினை மேற்கொள்வதென யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சிக்குத் தங்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு பல்கலைக்கழக சமூகத்தினரையும் பல்கலைக்கழக நலனில் அக்கறை கொண்டோரையும் யாழ. பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.
27 அங்கத்தவர்களைக் கொண்ட யாழ். பல்கலைக்கழகப் பேரவை 14 வெளிவாரி உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக சட்டம் 1985 பிரிவு 44(1) கல்வி, தொழில்சார் நிபுணத்துவம், வர்த்தகம், கைத்தொழில், விஞ்ஞான, நிர்வாகவட்டங்களில் கௌரவிக்கத்தக்க வகையில் சேவையாற்றியோரிடமிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவால் வெளிவாரி உறுப்பினர்களானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டு என குறிப்பிடுகிறது.
யாழ. பல்கலைக்கழகத்தில் 14 வெளிவாரி உறுப்பினர்களையும் 2008, 2011, 2014 ஆம் ஆண்டுகளில் உள்ளுர் அமைச்சர் அவர்களே தெரிவு செய்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைத்தார். 2009 ஆம் ஆண்டுயுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்படி அமைச்சர் யாழ். பல்கலைக்கழகத்துள் தமது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினார். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களை படமாளிகைக்குத் தவறாது ஒவ்வொரு மாதமும் அழைத்து மாத இறுதியில் இடம்பெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்களையும் அதற்கான முடிவுகளையும் அமைச்சரே தீர்மானிப்பார் என்பதும் துணை வேந்தரும் சில பீடாதிபதிகளும் படமாளிகைக்கு அழைக்கப்பட்டு அறிவுறுத்தல் வழங்கப்படுவதும் அவர்கள் அவற்றைச் சிரமேற் கொண்டு கருமமாற்றுவதும் பல்கலைக்கழக சமூகத்தில் பரவலாகப் பேசப்படும் சாதாரண விடயமாகும். இத்தகைய சூழலில் இதுவரை காலமும் பல்கலைக்கழக சுற்றுநிருபங்கள், தார்மீகம், மனச்சாட்சி அனைத்தையும் புறந்தள்ளித் தனியொரு கட்சியின் நலன் கருதியே பேரவையில் முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டன.
பல்கலைக் கழகத்தில் கல்விசாரா ஊழியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் எவரும் ( ஒருசில புறநடைகள் நீங்கலாக) உயர்கல்வி அமைச்சில் தமது பெயர்களைப் பதிவுசெய்தல் வேண்டும். பிரதி புதன் கிழமைகளிலும் பொதுமக்கள் உயர்கல்வி அமைச்சில் அப்பதிவுகளை மேற் கொள்ள முடியும். இது சகல பல்கலைக் கழகங்களுக்கும் பொதுவான விதியாகும். ஆனால் யாழ்.பல்கலைக் கழகத்தில் வேலை வேண்டி பதிவுகள் மேற் கொள்ளவருபவர்களை மட்டும் உள்ளுர் அமைச்சர் அவர்களின் சிபார்சுக் கடிதத்துடன் வருமாறு உயர் கல்வி அமைச்சில் உள்ள அதிகாரிகள் பலதடவைகள் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனையும் மீறி நல்லிதயம் கொணட அதிகாரிகள் சிலர்மூலம் பதிவுகளை மேற் கொண்டால் அப்பெயர்ப் பட்டியல் உள்ளுர் அமைச்சர் அவர்களுக்கு யாழ். பல்கலைக் கழகத்தால் அனுப்பிவைக்கப்படும். அவர் அப்பட்டியலைப் பரிசீலித்துத் திருத்தித் திருப்பிக் கொழும்பிலுள்ள உயர் கல்வி அமைச்சு மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைப்பார். இவ்வாறு நூறு வீதம் அமைச்சர் விரும்பும் நபர்கள் மட்டுமே வேலை வாய்ப்புப் பெறக் கூடியதாக யாழ். பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர் நியமன முறைமை மாற்றியமைக்கப்பட்டு இருந்தது.
கணினிப் பிரயோக உதவியாளர் பதவிக்கு 2011இலும் , 2012 இலும் அனுப்பப்பட்ட பெயர்ப் பட்டியல்களில் உள்ளுர் அமைச்சரின் சிபார்சைப் பெறாதவர்களும் இடம் பெற்றமையால் எழுத்துப் பரீட்சை, செய்முறைப் பரீட்சை, நேர்முகத் தேர்வு முதலியவற்றில் சித்திபெற்று நியமனக் கடிதம் வழங்கும் தருணத்தில் ஐம்பதுக்கும் அதிகமானவர்களின் நியமனங்களை வழங்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டன. இவ்வாறு சுருக்கெழுத்தாளர், எழுதுவினைஞர் நியமனங்களிலும் தகுதி வாய்ந்தவர்களின் நியமனங்கள் தடைசெய்யப்பட்டன. தெரிவுப் பரீட்சைகளில் சித்தி பெறாதவர்களில் கணனிப் பிரயோக உதவியாளர்களாகவும், எழுது வினைஞர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2013ஆம் ஆண்டு தொழிலாளர் பதவிக்கான பெயர்ப் பட்டியல் உயர்கல்வி அமைச்சிடமிருந்து பெறப்பட்டது. இப்பட்டியலிலும் அமைச்சர் பலதிருத்தங்களை மேற் கொண்டிருந்தார். பட்டியலில் உள்ளவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 19.07.2013 என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால் மாகாணசபைத் தேர்தலை நோக்காகக் கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாகுமுன்னர் நியமனம் வழங்கலை மேற் கொள்வதற்காக 10.07.2013 -12.07.2013 வரை இடம்பெற்ற நேர்முகத் தேர்வுக்கு படமாளிகையிலிருந்து அமைச்சரின் சிபார்சினைப் பெற்றவர்கள் பேருந்து ஒன்றில் அழைத்து வரப்பட்டுப் பல்கலைக்கழக வாசலில் இறக்கி விடப்பட்டனர். 2009இன் பின்னரான காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு கல்விசாரா ஊழியர்களினதும் கல்விச் சான்றிதழ்கள் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு சான்றிதழ்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.
கடந்த சில வருடங்களாக விரிவுரையாளர் நியமனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விஞ்ஞான ஆசிரியர் சங்கம் ஆவணப்படுத்தி வருகின்றது. வருடாந்த அரசாங்கக் கணக்கு ஆய்வு அறிக்கையில் ஆட்சேர்ப்பு, நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாகப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் இவ்விடயங்களை சிலபாராளுமன்ற உறுப்பினாகள் சுட்டிக்காட்டியிருந்தனர். யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒருவர் அடிப்படை மனித உரிமைமீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பழிவாங்கும் நோக்குடன் இடமாற்றம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழக சேவைகள் மேன் முறையீட்டுச் சபையில் இன்னெர்ரு வழக்கு கல்விசாரா ஊழியரொருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கினைத் தாக்கல் செய்வதில் உள்ளசிரமங்கள், செலவுகள்காரணமா கவேறு சிலர் தொழிற்திணைக்களம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிடுவதுடன் நின்று விடுகின்றனர். இன்னும் சிலர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்கும் இவை தொடர்பாகப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. 2014க்கான புதிய பேரவை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் உள்ளுர் அமைச்சர் முழுமையான செல்வாக்குச் செலுத்துவதனைத் தடுத்துநிறுத்த ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்கள் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டன. ஆயினும் அம்முயற்சி அன்றைய சூழலில் தோல்வியைத் தழுவின.
தொடர்ந்து சுதந்திரமாகக் குரல் தரக் கூடியசிவில் வெளி யொன்றினை ஏற்படுத்துவதற்குப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் 2015 ஜனவரி08 ஜனாதிபதி தேர்தலில் கடுமையாகப் பாடுபட்டன. அத்தகைய தொரு சிவில் வெளியொன்றினைப் புதிய ஆட்சிமாற்றம் தற்காலிகமாக வேனும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகையதொரு சிவில் வெளியில் எமது பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்துவோம். “வெளிவாரி உறுப்பினர்களை வெளியேறுமாறு”தேர்தல் முடிவுகள் வெளிவந்ததினம் (09.01.2015) ஊழியர் சங்கம் விடுத்தகோரிக்கை இத்தூய்மைப்படுத்தலின் முதற் கட்ட நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம் பெறுவதற்கு இவ் வெளியேற்றம் மிக அவசியமாகும்.
இன்றைய பேரவை உறுப்பினர்களில் ஆகக்குறைந்தது 04 பேர் குறித்த கட்சிசார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றோராவர். மேலும் பலர் போதனா வைத்தியசாலை, கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் நிர்வாகங்களில் தலையிடுவதற்கென்றே உள்ளுர் அமைச்சரினால் உருவாக்கப்பட்ட பினாமி அமைப்புக்களில் அங்கம் வகிப்பவர்கள். பேரவை உறுப்பினர் ஒருவர் சமகாலத்தில் கட்டட ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொண்டதுடன் இவர்கள் ஆகக் கூடிய சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இரு உள்ளுர்ப் பத்திரிகைகளில் பல்கலைக்கழக விளம்பரங்களைப் பிரசுரிப்பதனையும் தடுத்துநிறுத்தினர். இதனால் பல்கலைக்கழக பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்கள் பல, வெளிமாவட்ட மாணவர்களை சென்றடையாமல், மாணவர்கள் தேவையற்ற அசௌகரியங்களை எதிர்நோக்கிய சம்பவங்களும் இடம்பெற்றது. இரு தடவைகள் துணைவேந்தர் தேர்தலிலும் இறுதியாக இடம் பெற்ற பட்டப்படிப்புகள் தேர்தலிலும் இவர்கள் அமைச்சரின் ஆணைப்படியே வாக்களித்தனர். இதற்குப் பிறகும் இவர்கள் தங்கள் “தகுதி”பற்றி உயர்ந்த நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் அவர்களின் உளநலனில் குறைபாடு இருப்பதாகவே சமூகம் கருதும்.
யாழ.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்