கடூழிய சிறைத் தண்டனை பெற்றது போல் உணர்ந்தேன்: முன்னாள் பிரதம நீதியரசரின் உணர்வுபூர்வமான உரை- ஓய்வு பெற்றார் ஷிராணி

புதிய பிரதம நீதியரசராக பொறுபேற்கவுள்ள கே. ஸ்ரீபவனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி கூறினார்.
கொழும்பு புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வருடங்களாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் எம் மீது சுமத்தப்பட்டன. கடூழிய சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு சென்றது போல் உணர்ந்தேன். தற்போது அந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது. நியாயம் வெற்றி பெற்றுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்திற்காகவே நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த போராட்டத்தை முன்னெடுத்தேன். ஆரம்பம் முதல் எம்மோடு இருந்து எமக்கு ஏற்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ஷிராணி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஷிராணி பண்டாரநாயக்க சம்பிரதாயபூர்வமாக ஓய்வுபெற்றார்!
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் சம்பிரதாயபூர்வமான வைபவம் இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்க நேற்று மீண்டும் தனது கடமைகளை பொறுபேற்றதுடன் இன்று ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாது அவரை பதவியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், சட்டவிரோதமான முறையில் பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ்சை நியமித்தது. அவரது நியமனம் சட்டவிரோமானது என அறிவிக்கப்பட்டுள்ளதால், மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புகளின் செல்லுப்படி தன்மை குறித்து தற்போது பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila