தமிழ் மக்களால் கிடைத்த வெற்றியைப் புரிந்து கொண்டு புதிய அரசு முதற்கட்டமாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் இன்றி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியது.
அதன்படி தமிழ் மக்களையும் பொது எதிரணி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோரியது . எமது கோரிக்கையினை ஏற்று தமிழ் மக்களும் தேர்தலின் ஊடாக தமது நல்லெண்ணத்தை காட்டியுள்ளனர்.
நாங்கள் எமது நல்லெண்ண வெளிப்பாட்டை காட்டிவிட்டோம். எனவே இதற்கு புதிய ஜனாதிபதி தனது வெளிப்பாட்டையும் காட்டவேண்டும்.
எனவே எவ்வித வழக்குகளும் இன்றி நீண்டகாலமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளையும் வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு 10-15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாழும் இளைஞர், யுவதிகளை பொதுமன்னிப்பின் கீழ் முதல்கட்டமாக விடுதலை செய்ய வேண்டும்.
இதுவே புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு காட்டக்கூடிய நல்லெண்ண வெளிப்பாடாகும். இவ்வாறு செயற்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் மக்களது செயற்பாடுகளுக்கும் இது ஒரு உந்துசக்தியாக அமையும்.
இலங்கை அரசும் , ஏனையவர்களும் மைத்திரிபாலவின் வெற்றி தமிழ் மக்களால் கிடைத்த வெற்றி என்பதை நன்கு அறிந்துள்ளனர்.
எனவே வெற்றியின் தன்மையை புரிந்து கொண்டு சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக 25 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலங்களுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படாது நிற்கதியற்று நலன்புரி முகாம்களில் இருக்கின்ற மக்களை மீண்டும் நடுவீதியில் நிற்கச் செய்யாது முழுமையாக மீள்குடியேற்றம் செய்யவேண்டும்.
இவ்வாறு புதிய அரசு செயற்பட்டால் தமிழ்- சிங்கள மக்களின் உறவுகள் வலுப்படும். நாட்டில் சமுகமான நிலையை ஏற்படுத்தப்படும்.
அத்துடன் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கும் ஆரோக்கியமானதாக அமையும். எனவே ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.