தமிழ் மக்களும் ஜனாதிபதி தேர்தலும் - செல்வரட்னம் சிறிதரன்

தமிழ் மக்களும் ஜனாதிபதி தேர்தலும் - செல்வரட்னம் சிறிதரன்:-

புதிய வருடம் பிறந்துவிட்டது. புதிய நம்பிக்கைகளும் புதிய புதிய எதிர்பார்ப்புகளும் மக்கள் மனங்களில் புதிய வருடம் பிறக்கும்போது தோன்றுவது வழமை. ஆனால் இந்த வருடம் - 2015 ஆம் ஆண்டும் வழமைபோல புதிய நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்துள்ள போதிலும், நாட்டு மக்கள் மிகவும் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்திற்குள் இந்த புதிய ஆண்டுபிறப்போடு பிரவேசித்திருக்கின்றார்கள்.

அதியுயர் அரசியல் தலைவராகிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுபு;பு புதிய ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டு மக்களின் தலைகள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதென்பது, பழைய தலைவரைத் தொடர்ந்தும் பதவியில் இருத்துவதா அல்லது புதிய ஒருவரிடம் பொறுப்புக்களைச் சுமத்துவதா என்ற இரண்டிலொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியவர்களாக மக்கள் இருக்கின்றார்கள். இதனால் நாடு இன்று இரண்டு விதமான கொள்கைகளில் பிளவுண்டு நிற்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது.

ஏனெனில் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையா, அல்லது, ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று சூளுரைத்து, ஜனாதிபதியின் பாசறையில் இருந்து பிரிந்து சென்று, அவருக்கு எதிராகக் களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனாவையா யாரை ஆதரிப்பது என்று மக்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கின்றது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர், இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்குவேன் என்று அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் கூறுகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, மக்கள் குறிப்பாக, சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் ஒரு தேசிய வீரனாகவே மதித்துச் செயற்படுகின்றார்கள்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டில் இர்தத ஆறு ஓடுவது நிறுத்தப்பட்டிருக்கின்றது. வெளியில் செல்பவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா மாட்டார்களா என்ற உயிருக்கு நிச்சயமற்ற நிலைமையில் தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக போக்கு என்பவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நாட்டில் பொது வசதிகளை நவீன மயப்படுத்தியவரும் அவரே. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அதேவேகத்தில் நவீன முறையில் வீதிகள் அமைக்கப்பட்டன. பொது வசதிகளை வழங்கும் அரச அலுவலகங்கள், வங்கிகள் போக்குவரத்துக்கான வசதிகள் என்பனவும் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுக்கு ஈடான முறையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் எந்தப் பகுதிக்கும், எந்தவிதமான தடைகளுமின்றி எவரும் இலகுவாகவும், வசதியாகவும் போய் வரக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலேயே இடம்பெற்றிருக்கின்றன.

அதேநேரம், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், அந்த யுத்த வெற்றியைத் தனது அரசியல் மூலதனமாக்கி, நாட்டின் ஜனாதிபதி என்ற பதவியில் தனது அதிகாரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி, அவற்றை வலுவுள்ளதாக்கும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவி என்பது எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்டது என்பது பொதுவான கருத்து. ஆணை பெண்ணாக்க முடியாதேயொழிய ஏனைய அனைத்தையும் செய்யக் கூடிய வல்லமை இலங்கையில் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பவருக்கு இருக்கின்றது என்பது பொதுவான கூற்று. இதனால் தான் யுத்தத்தில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடிய பின்னர் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ‘‘இறந்தவர்களை என்னால் உயிர்ப்பிக்க முடியாது. ஆகவே, இறந்தவர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் நான் திருப்பித் தருவேன். ஆகவே தமிழ் மக்கள் மீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தத்தை உருவாக்கக் கூடிய தவறான வழியில் செல்லக் கூடாது. அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும். என்னை நம்ப வேண்டும். நான் உங்களைப் பாதுகாப்பேன்’’ என்று கூறி வருகின்றார். இந்தத் தேர்தல் கால பரப்புரைகளின்போதும், ‘‘என்னை நம்புங்கள். நான் உங்களைப் பாதுகாப்பேன்’’ என்று அழுத்தி கூறி வருகின்றார்.

மைத்திரியின் நிலைப்பாடு

அதேநேரம், இந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக எதிரணிகளின் சார்பில் போட்டியிடுகின்ற மைத்திரிபால சிறிசேன, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவேன் என சூளுரைத்திருக்கின்றார்.

‘‘மகிந்த ராஜபக்ச மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்து அவரை பெரும்பான்மையான வாக்குகளினால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். ஆனால், அவர் யத்தத்தில் வெற்றிபெற்றதன் பின்னர், அமைச்சரவையில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களையோ அல்லது நாடாளுமன்றத்தின் கருத்துக்களையோ செவிமடுப்பதில்லை. அவர் தன்னிச்சையாகவே முடிவெடுக்கத் தொடங்கிவிட்டார். அது மட்டுமல்லாமல் தான் நினைத்ததையே செய்யவும், தான் நினைத்தபடியே செயற்பட்டு வந்தார். அமைச்சர்களையோ முக்கிய தலைவர்களையோ தங்கயுளுமைடய கடமை பொறுப்புக்களைச் செய்ய விடாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தார். இதனால் பலரும் அவர் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள்’’ என்று எதிரணியின் பெது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.

‘‘நாட்டில் ஒருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டு, குடும்ப ஆட்சியையே அவர் நடத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் தானே தொடர்ந்தும் ஜனாதிபதி பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார். எதினெட்டாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து ஜனநாயகத்திற்குத் துணையாக இருந்த சட்டவிதிகளை மாற்றியமைத்து, ஏதேச்சதிகாரச் செயற்பாடுகளுக்கு வழியேற்படுத்தியிருக்கின்றார். இந்த ஆட்சியில் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அவர்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, ஊழல்கள் மலிந்த, ஒரு குடும்பத்தின் செல்வாக்கை மட்டும் பெற்றுள்ள இந்த ஆட்சியை மாற்றி, புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்’’ என்று எதிரணியின் பொது வேட்பாளர் நாட்டு மக்களிடம் கோரி வருகின்றார்.

தேர்தலில் வெற்றிபெற்றால் 100 நாட்களில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டில் ஒரு புதிய ஆட்சியை உருவாக்குவேன் என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருக்கின்றார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தியுள்ள போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், நாட்டில் உள்ள அனைத்து இன மக்களையும் அவரால் ஒன்றுபடுத்த முடியவில்லை. இனவாதமும், மதவாதமும் தலைவிரித்தாடுகின்றன என்றும் மைத்திரிபால சிறிNசுன சுட்டிக்காட்யிருக்கின்றார். தான் பதவிக்கு வந்தால் மக்கள் அனைவரினதும் மனங்களை வென்று அவர்களை ஒன்று திரட்டி, ஒற்றுமைப்படுத்தி நல்லதொரு ஜனநாயக ஆட்சியை உருவாக்குவேன் என்றும் அவர் அடித்துக் கூறி வருகின்றார்.

தமிழ் மக்களின் நிலைப்பாடு

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு தனக்கு வாக்களிக்க வேண்டும் என கோரியுள்ள ஜனாதிபதி ராஜபக்ச ஒருவரினாலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அதற்கான வல்லமை அவரிடம் மாத்திரமே உள்ளது ஆகவே அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை நோக்கி அரச தரப்பினர் கூறிவருகின்றார்கள். அது மட்டுமல்லாமல், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக எதிர்த்தே வந்துள்ளது, அவரை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கூட்டமைப்பினர் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண:;டும். அதற்கான சந்தர்ப்பம் இதுதான் என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

சரியான காரணங்கள் எதுவுமின்றி, தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள சிங்கள மக்களையும் ஏமாற்றுவதற்காகவே கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க முன்வந்துள்ளது என்று அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

அதேநேரம், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் இல்லாமல் செய்துவிட்டனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முதல் இரண்டு பதவி காலத்திலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுத்திருக்கின்ற நேரத்தில் பலதரப்பட்ட காரணமங்களையும் குறிப்பிட்டு தமிழ் மக்களின் ஆதரவைத் தேடுவதற்குப் பதிலாக முன்னரே தமக்குக் கிடைத்திருந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்ககலாம். அவ்வாறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருந்தால் தமிழ் மக்கள் நிச்சயமாக இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருப்பார்கள். வேறு ஒருவரைப் பற்றி அவர்கள் சிந்திப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளும், அரசியல் உரிமைகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் மறுக்கப்பட்ட காரணத்தினாலேயே, ஆயுதப் போராட்டம் ஒன்றில் தமிழ் இளைஞர் யுவதிகள் குதிக்க நேர்ந்தது. சிங்கள மக்களைப் போன்று தாங்களும் இந்த நாட்டில் சம உரிமை உடையவர்களாக அதிகாரங்களைக் கொண்டவர்களாக, தமது பிரதேசங்களைத் தாங்களே நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும்.

சிங்கள மக்களுக்கு இல்லாத ஒன்றைத் தங்களுக்குத் தரவேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்கவில்லை. பரம்பரை பரம்பரையாக, பாரம்பரியமாக சிங்கள மக்கள் வசித்து வந்த பிரதேசங்களில் தமக்கு அரசியல் உரிமைகள் வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படவில்லை. இந்த நாட்டில் தலைமைப்பதவியான பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதி பதவியைபோ பெற வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் தாங்கள் முதன்மை நிலையில் இருக்க வேண்டும் என்றோ அவர்கள் கோரவில்லை. இந்த நாட்டில் ஜனநாயக பண்புகளுக்கு அமைவாக சகல அரசியல் உரிமைகளையும் உடையவர்களாக, பெரும்பான்மை இன மக்களுடன் இணைந்து அமைதியாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகும். இதனை சிங்கள பேரினவாத அரசுகள் எதுவும் சரியான முறையில் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. யுத்தத்தில் வெற்றி பெற்ற அல்லது தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் ஆயுதபலம் கொண்டவர்களாக விளங்கிய விடுதலைப்புலிகளை இல்லாதொழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவருடைய தலைமையிலான இந்த அரசாங்கமும் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தமிழ் மக்களையும் அவர்களுடைய நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்காக கொள்கைகளுக்காகச் செயற்பட்டு வருகின்ற தலைமைகளையும் இன்னும் சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்ற போக்கிலேயே அவர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள். இது இந்த நாட்டின் அமைதியான சுபிட்சமான எதிர்கால – ஸ்திரமான அரசியல் நிலைமைக்கு நல்லதல்ல. விரும்பதக்கதுமல்ல.

தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சரி எதிரணியின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவும்சரி, பொது எதிரணியினரும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை எழுத்து மூலமாக வழங்கவில்லை. தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக உள்ள இரண்டு வேட்பாளர்களினதும் தேர்தல் கொள்கைப் பிரகடனங்களிலும்கூட, தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், முக்கியமாகவும், அவசரமாகவும் தீர்வு காணப்பட வேண்டிய தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது பற்றிய தமது நிலைப்பாடு குறித்து எதையுமே குறிப்பிடவில்லை.

தங்களைப் பற்றி, தங்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசாத ஜனாதிபதி தேர்தலில் எதையுமே பேசாத, அதுபற்றி எதனையும் ஆக்கபூர்வமாகக் குறிப்பிடாத முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. மேலோட்டமான ஒரு பார்வையில், சிந்தனையில் எவரும் இத்தகையதொரு முடிவுக்கே வருவார்கள். ஆனால் தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்த நாட்டின் முக்கியமான பிரஜைகள். அந்த வகையில் அவர்கள் இந்த நாட்டின் நிர்வாகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, பாதுகாப்பு என்று இன்னோரன்ன அம்சங்களில் பிரித்து ஒதுக்க முடியாத ஒரு பிரிவாக இருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் ஏற்படுகின்ற மாற்றங்கள் எதுவாயினும்சரி, அது இயற்கையானதாக இருக்கலாம் அல்லது செயற்கையானதாக இருக்கலாம். அதில் அவர்களும் பங்குதாரர்களாக, பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றார்கள். எனவே, அவர்கள் இந்த நாட்டின் முக்கியமான ஒரு தலைவரைத் தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலில் ஒதுங்கியிருக்க முடியாது. அவர்கள் தமது ஜனநாயக உரிமையாகிய வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். அதன் ஊடாகத் தாங்கள் என்ன கருதுகின்hர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன, இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் அது அவர்களுடைய கடமையாகும். தவிர்க்கமுடியாத பொறுப்பாகும்.

அது மட்டுமல்லாமல், யுத்தம் நடைபெற்ற காலத்திலும்;சரி, யுத்தம் முடிவடைந்த பின்னரான கடந்த ஐந்தரை வருடங்களிலும்சரி மிகமோசமான நெருக்கடிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு அவர்கள் உள்ளகியிருக்கின்றார்கள். யுத்த காலத்திலும் பார்க்க அதிகூடிய நெருக்கடிகளை அவர்கள் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் எதிர்கொண்டு வருகின்றார்கள். யுத்தத்தில் வெற்றிகொண்ட இந்த அரசும்சரி, ஜனாதிபதியும்சரி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களை அரவணைத்து, ஆதரவாக இணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்து, அவர்களை மேலும் மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்குகின்ற கைங்கரியங்களையே முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், மீறப்பட்டிருக்கின்றன. பேச்சுச்சுதந்திரம், ஒன்றிணைந்து செயற்படுகின்ற சுதந்திரம் என்பன மறுக்கப்பபட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தை நோக்கி நாட்டில் உள்ள எதிரணி அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முற்பட்டிருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அந்த சக்திகளுக்கு ஆதரவளித்து தாங்கள் முகம் கொடுத்து வருகின்ற நெருக்கடிகளுக்கு முடிவு காண முற்பட வேண்டியது முக்கியமாகும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களுடைய கஸ்டங்களுக்கு முடிவு காண்பதைத் தவிர வேறு தெரிவு அவர்களுக்குக் கிடையாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனாவை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் முடிவு காண முடியும் என்று கூற முடியாது. ஆனால் ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவதன் ஊடாக தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வேறு ஒரு தளத்தை நோக்கி சம்பந்தப்பட்டவர்களை நகர்த்த முடியும் என்பது முக்கியமானது.

இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் இத்தகைய ஒரு தேவைக்குப் பயன்படுத்துகின்ற அதேநேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் இந்த அரசியல் நகர்வையும், அவர்கள் வெளிப்படுத்துகின்ற செய்தியையும் பயன்படுத்தி, மாறுகின்ற தலைமைகளை சரியான திசையில் கொண்டு சென்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்க வேண்டும்.

இது தமிழ் மக்களினதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila