"அமாலியினதும் பெற்றோரினதும் இலட்சியங்கள், கனவுகள் இன்று பகிடிவதை என்ற அரக்கனின் கையில் சிக்கிய பூமாலையாக போய்விட்டது"
--------------------------
சப்ரகமுவ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமாலி சத்துரிகா என்ற 23 வயதான இந்த மாணவி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போது மிகக் கொடூரமாக பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இதனால் மிகுந்த வேதனையடைந்து காணப்பட்டார். மேலும் கடந்த வருடம் ஆகஸட் மாதம் அமாலி ஒரே தடவையில் 16 மாத்திரைகளை உட்கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அத்துடன் மன நலம் குன்றியவராகவும் காணப்பட்டார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் மிகவும் வேதனையடைந்த நிலையில் வீட்டிலேயே இருந்து வந்தார். ஆனால், அவர் வாழ்வா? சாவா? என்ற மன பேராட்டத்துடனேயே சில நாட்கள் காணப்பட்டமையை எவரும் கண்டு கொள்ளவில்லை. முடிவில் தனது நிம்மதிக்கும் மரியாதைக்கும் தற்கொலை ஒன்றே உரிய பரிகாரம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
இதன்படி, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதுடன் அதில் சில விடயங்களையும் மன்றாட்டமாக தனதுது பெற்றோர் உறவினரிடம் கேட்டிருந்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தனது பூதவுடலை பார்வையிடுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் தனக்குச் சொந்தமான காணியை அனாதைகள் ஆச்சிரமத்திற்கு வழங்கு வேண்டுமென்றும் அவர் கேட்டிருந்தார்.
அமாலியின் வாழ்க்கையின் இருண்டு போன முடிவு இன்று பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அவரதும் அவரது பெற்றோரினதும் இலட்சியங்கள், கனவுகள் இன்று பகிடிவதை என்ற அரக்கனின் கையில் சிக்கிய பூமாலையாக போய்விட்டது. ஆனால், மனுநீதிப்படி இதனை ஒரு தற்கொலையாக நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனை ஒரு பலாத்கார கொலையாக என்னால் பார்க்க முடிகிறது.
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
படமும் தகவலும் நன்றி:
கொஸிப் லங்கா நியூஸ் -சிங்களம்