கை மீறும் போக்கு - செல்வரட்னம் சிறிதரன்

கை மீறும் போக்கு - செல்வரட்னம் சிறிதரன்:-

தமிழ் மக்களின் அரசியல் புதிய தலைமையொன்றைத் தேடி தடுமாறத் தொடங்கியிருக்கின்றதா என்ற சந்தேகம் இப்போதைய அரசியல் சூழலில் தலையெடுத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

தேர்தல்களைப் பொறுத்தமட்டில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே தமிழ் மக்கள் தமது தலைமையாக வரித்துக் கொண்டிருக்கின்றார்கள். வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டாலும், அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், எம்மவர்கள் என்ற மனநிலையில் அவர்களுக்கு மக்கள் வாக்களித்து வருகின்றார்கள்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் தோற்றம் பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் கால கொள்கையில் அவர்கள் இன்றுவரை – யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் நிறைவடையப் போகின்ற நிலையிலும் தொடர்ந்து இறுக்கமாக இருந்து வருகின்றார்கள்.

தேர்தல் காலத்திற்கு அவர்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு தலைமை இருக்கின்றது. ஆனால், பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்குமான சரியானதோர் அரசியல் தலைமைக்காக அவர்கள் அலைமோதுகின்றார்கள். இதனால் இரட்டை நிலைப்பாடொன்றில் அவர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நகர சபைகள், மாநகரசபைகள், பிரதேச சபைகள், மாகாண சபைகள், நாடாளுமன்ற அவை என பலதரப்பட்ட நிலைகளிலும் பல மட்டங்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் - மக்கள் தலைவர்கள் இருக்கின்றார்கள். பணியாற்றி வருகின்றார்கள். ஒட்டு மொத்தமான ஒரு நோக்கில் இந்த உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அல்லது நாடாளுமன்ற அவையின் ஊடாக அந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

சிலபல அபிவிருத்தித் திட்டங்கள் அல்லது பொதுமக்களுக்காக அரசாங்கத்தினால் கொண்டு வரப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் என்பவற்றின் ஊடாக மக்கள் நன்மையடைந்திருக்கலாம். அந்தத் திட்டங்கள் இந்த மக்கள் பிரதிநிதிகளின் சபைகளுக்கு ஊடாக நிறைவேற்றப்பட்டிருக்கலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை.

ஆனால், மோசமான ஒரு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, அத்தனையையும் இழந்து, அடிப்படை வசதிகளுக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்ற மக்களுடைய ஏக்கத்தைப் போக்குவதற்கு, அந்த மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக, அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக நிறைவேற்றுவதற்கு இந்த மக்களுடை பிரதிநிதிகள், ஓரணியில் ஒரே குரலில் செயற்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களாகிய நகரசபை, மாநகரசபை, பிரதேச சபைகள் என்பவற்றில் குழப்பங்களும் பிரதிநிதிகளுக்கிடையிலான பிரச்சினைகளையுமே காண முடிகின்றது. இந்த சபைகள் சரியான முறையில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அபிவிருத்தித் திட்டங்களை செவ்வனே முன்னெடுப்பதில் ஒற்றுமையாக மக்களின் அபிமானத்தைப் பெற்ற வகையில் செயற்படுவதாகத் தெரியவில்லை. உள்ளுராட்சி சபைகளுக்குள்ளேயே பிரச்சினைகள் இருக்கும்போது, மக்களுடைய பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு தீர்க்க முடியும்?

மக்களின் பிரச்சினை என்பது பொதுப் பிரச்சினை. தலைவர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தலைவர்களாவே மக்கள் நோக்குகின்றார்கள். இத்தகைய மக்களின் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் மக்களுடைய பொதுப் பிரச்சினைகளில் ஒற்றுமையாக, ஒரே நோக்கத்தில் - ஒரே இலக்கை நோக்கிச் செயற்பட்டிருப்பதாகவோ, செயற்படுவதாகவோ தெரியவில்லை. மக்கள் ஓரணியில் ஒற்றுமையாகத் திரண்டிருப்பதற்கே விரும்புகின்றார்கள். யுத்தச் சூழல் காரணமாக சாதாரண சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்டமைப்புக்களில் ஏற்பட்டிருந்த மாற்றங்களையடுத்து, இந்த நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

தலைமைகள் ஒரு போக்கு, மக்கள் ஒரு போக்கு

யுத்தத்திற்கு முந்திய காலத்தைப் போன்று அரசியல் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் விசுவாசிகளாக பரம்பரை, பரம்பரையாக கட்சிகளின் வழிவந்தவர்களாகக் கண்மூடித்தனமாகச் செயற்படுவதற்கு இன்று மக்கள் தயாராக இல்லை. யுத்தச் சூழல் காரணமாக தமது வாழ்க்கையையே தொலைத்துள்ள அந்த மக்கள், அந்த வாழ்க்கையை சரியான முறையில் கட்டியெழுப்புவதையே முழு நோக்கமாகக்  கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியான ஒடுக்குமுறை ஆயுதரீpதியான அடக்குமுறைகளின் மூலம் நசுக்கப்பட்டுள்ள அவர்கள் தமது நியாயமான குடியுரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் வென்றெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். பொதுமக்களுடைய இந்த நோக்கத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் காரியங்களை ஒற்றுமையாக முன்னெடுக்கின்ற போக்கினை அந்த மக்களுடைய தலைவர்களிடம் காண முடியவில்லை.

நகரசபை, மாநகரசபையில் இருந்து, பிரதேச சபைகள் வரையில் மக்கள் பிரதிநிதிகளிடையே மோதல்களும் தனிவழிப் போக்கிலான செயற்பாடுகளையுமே காண முடிகின்றது. மாகாண சபைகளிலும்கூட, சரியான தலைமைத்துவச் செயற்பாட்டைக் காண முடியாத நிலைமையே தொடர்கின்றது. இதனால் மக்களுக்கும் அந்த மக்களுடைய பிரதிநிதிகளாகிய அரசியல் தலைவர்களுக்குமிடையில் இடைவெளி அதிகரிக்கத்தொடங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

மக்கள் தமது தலைவர்களின் ஊடாகப் பிரச்சினைகளை முன்நிலைப்படுத்தி அவற்றுக்குத் தீர்வு காண்கின்ற வழிமுறையில் இருந்து விலகி, தாங்களே தமது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராடுகின்ற ஒரு சூழல் - ஒரு போக்கு இப்போது உருவாகியிருக்கின்றது. தலைவர்களே மக்களுக்கு வழிகாட்டுவார்கள். அவர்களை வழிநடத்திச் செல்வார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், மக்களுக்குப் பின்னால் தலைவர்கள் செல்கின்ற புதிய சூழல் தோற்றம் பெற்றிருக்கின்றதா என்று வினவத் தோன்றுகின்றது. 

மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், கிராமங்களுக்கான வீதிகள், அடிப்படை வசதிகள் போன்ற பிரச்சினைகளை தமது தலைவர்களின் ஊடாக முன்னிலைப்படுத்தி தீர்வு காண முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்களோ என்று கருதத்தக்க வகையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன. பல இடங்களிலும் இதற்காக மக்கள் தாங்களே வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியிருக்கின்றார்கள். சிறிய அளவிலான இத்தகைய போராட்டங்கள் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் வன்னிப்பிரதேசங்களில் தலையெடுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் குறித்த ஐநாவின் விசாரணை அறிக்கை பின்போடப்பட்டதையடுத்து, அதனைக் கண்டித்தும், அந்த அறிக்கை முறையான ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத்தினரே பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் அரசியல் தலைவர்களும் இணநை;து கொண்டிருந்தார்களே தவிர, அந்தப் போராட்டத்தின் தலைமையில் அதனை ஒழுங்கமைக்கின்ற தலைமைத்துவச் செயற்பாட்டில் அரசியல் தலைவர்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை.

ஐநா விசாரணை அறிக்கையுடன் தொடர்புடையதாக, உள்ளக விசாரணையே நடத்தப்படும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்று புதிய அரசாங்கத்தின் அறிவித்தல் காரணமாகக் கொதிப்படைந்த மக்கள், உள்ளக விசாரணையை – காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை – புறக்கணிக்கப் போவதாக மேற்கொண்ட தீர்மானத்தில் அரசியல் தலைவர்களின் வகி பாகத்தைக்காண முடியவில்லை.

ஊள்ளக விசாரணையைப் புறக்கணிப்பது என்று தீர்மானித்தது மட்டுமல்லாமல் அந்தத் தீர்மானத்தை, திருகோணமலையில் அவர்கள் உடனடியாகவே செயற்படுத்தவம் தொடங்கிவிட்டார்கள். ஆனால் தலைவர்கள் உள்ளக விசாரணையைப் புறக்கணிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்க முடியாதவர்களாக, அது குறித்து தீர்க்கமான முடிவை மேற்கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். இது தொடர்பில் மக்களை வழிநடத்திச் செல்லத்தக்க வகையிலான முடிவையோ அல்லது நிலைப்பாட்டையோ அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலை என்ன?

உள்ளுராட்சி மன்றங்களில் ஒற்றுமையாக மக்களின் நலன்களில் கவனம் செலுத்திச் செயற்படாத காரணத்தினால் பல பிரதேச சபைகள் நகர சபை என்பன செயலிழந்திருக்கின்றன. அது மட்டுமல்ல. தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிககளின் தலைமைகள் மட்டத்திலேயும் இந்தப் போக்கு காணப்படுவதே கவலைக்குரியதாக இருக்கின்றது. போதிய வெளிப்படைத் தன்மையும் பிரச்சினைகள், விடயங்கள் எதுவாக இருந்தாலும் சரியாகக் கலந்துரையாடாத போக்கும், மனம்விட்டு விடயங்களை விவாதித்து முடிவுக்கு வருகின்ற தன்மையும் கட்சித் தலைமைகள் மத்தியில் காணப்படவில்லை.

அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பு என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவை இருக்கக்கூடாது என்பதல்ல. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் இத்தகைய கருத்து வேறுபாடுகளை பரந்த மனப்பான்மையோடு மக்களின் நலன்களுக்காக விட்டுக்கொடுத்து, வேறுபாடுகளுக்கிடையிலும் உடன்பாடு கண்டு காரியங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம். பல்வேறு வழிகளிலும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ் சமூகத்தின் நிலைமையைக் கருத்திற் கொண்டு அந்த சமூகத்தின் அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டியது முக்கியமாகும். பிடிவாதப் போக்கும், விட்டுக் கொடுக்காத தன்மையும் இன்றைய அரசியல் சூழலில் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும் என்பதை மறந்துவிடலாகாது.

குழம்பிய குட்டையில் கிடைத்ததைப் பிடிக்கலாம் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்வதற்கு பலர் இன்று சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி சுயலாப அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியான சூழலை ஏற்படுத்தி விடக் கூடாது. யுத்த காலத்திலும்சரி, யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும்சரி, மக்கள் நிதானமாகவே இருந்தார்கள். ஏமாற்று அரசியல் பேர்வழிகள் குறித்து அவர்கள் விழிப்பாகவே இருந்து செயற்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அரசியல் தலைவர்கள் தமக்குள் கருத்துமோதலில் ஈடுபட்டு, தாங்களாகவே ஒற்றுமையைக் குலைத்து, மக்களின் நம்பிக்கையை வீணடிக்க முயற்சிக்கக் கூடாது. அத்தகைய பாதகமான ஒரு சூழல் உருவாகுவதற்கு தலைவர்களின் செயற்பாடுகள் வழிவகுத்துவிடக் கூடாது.

முக்களின் நம்பிக்கையைப் பெறுவதென்பது சாதாரண விடயமல்ல. அது கடினமான காரியம். இருக்கின்ற மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டு அதனை மீளப் பெறுவதென்பதும் இலகுவான காரியமல்ல. இதனை தமிழ் மக்கள் ஏற்கனவே பல அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியிருக்கின்றார்கள். இதனை எச்சரிக்கையாகக் கொண்டு மக்களுடைய தலைமை நிலையில் இருப்பவர்கள் செயற்பட வேண்டும்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்படாத காரணத்தினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாங்கம், தேர்தலுக்கு முன்னர், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கவில்லை. ஆனாலும், அந்த புதிய அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கியுள்ள தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும், அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்று பெரிய அளவில் எதிர்பார்த்திருக்கின்றார்கள். தங்களால் ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களுக்கு நன்மை தரத்தக்க வகையில் ஏன் செயற்படக் கூடாது என்பது அவர்களுடைய கேள்வியாக இருக்கின்றது.

பெரும்பான்மை இன மக்களை இலக்காகக் கொண்டு 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், அந்த வேலைத்திட்டத்திலும், 100 நாட்களின் பின்னர் வரப் போகின்ற பொதுத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்ற சிந்தனையிலும் கூடிய கவனத்தைச் செலுத்திச் செயற்பட்டு வருகின்றபோது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. இருந்த போதிலும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளே, நாட்டில் இன்று எரியும் பிரச்சினைகளாக வீரியம் பெற்றிருக்கின்றன. எனவே, அந்தப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். அதேநேரத்தில் ஆட்சி மாற்றத்தின்; மூலம் 100 நாள் அரசாங்கத்தை அரியணையில் ஏறச் செய்வதற்குக் கைகொடுத்த தமிழ் மக்கள் அடுத்த தேர்தலிலும் அந்த ஆதரவை வழங்க வேண்டுமானால், அந்த மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டியது புதிய அரசாங்கத்திற்குக் கட்டாயத் தேவையாக இருககின்றது.

புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அதனை ஆட்சியில் அமர்த்திய தமிழ்த்தலைமைகள், தமது மக்களின் மன உணர்வுகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். காலம் காலமாக கஸ்டங்களையும் நெருக்கடிகள் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருந்த மக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் மூலம், தங்களுக்கு சிறிய அளவிலாவது நன்மை கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பேரினவாததத்தின் அழுத்த்தில் சிக்கித் தவிக்கின்ற புதிய அரசு, தமிழ் மக்களுக்குச் செய்கின்ற காரியங்களை மிகவும் நிதானத்துடனேயே செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்ற அதேநேரத்தில்,
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத்தக்க வகையிலான நல்லெண்ணச் செயற்பாடுகளையாவது முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

தமிழ் மக்கள் புதிய அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு உதவியாக வாக்களித்தார்கள். அவர்களுடைய தலைவர்கள், நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தார்கள். புதிய ஆட்சி மலர்ந்ததன் பின்னரும், நல்லெண்ண வெளிப்பாடாக, மக்களுடைய விருப்பத்தைக் கேளாமலேயே, நாற்பது வருடங்களாக கரிநாளாகக் கடைப்பிடித்து புறக்கணித்து வந்த நாட்டின் 67 ஆவது சுதந்திர தினத்தில், தன்னிச்சையாகக் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை மீளக் கையளித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்: காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல் போன்ற ஏதாவது ஒரு விடயத்தில் புதிய அரசாங்கம் நல்லெண்ண வெளிப்பாடாக சிறிய அளவிலாவது ஏதாவது ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். அது நடைபெறவில்லை.
எனவே, விட்டுக் கொடுப்பின் மூலம், பல வழிகளிலும் அரசாங்கத்திற்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய தமிழ்த்தலைவர்கள் அத்தகைய ஒரு செயற்பாட்டிற்கு அடியெடுத்துக் கொடுத்து, தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து நல்லெண்ண வெளிப்பாடாக சில விடயங்களைச் செய்வதற்;கு ஏன் ஊக்குவித்திருக்கக் கூடாது?  அத்தகைய ஒரு செயற்பாடானது, தமிழ் மக்களை ஆறுதலடையச் செய்திருக்கும். அத்துடன் தமது தலைவர்கள் மீது அவர்களுக்கு அபிமானம் அதிகரித்திருந்திருக்கும்.

தொடர்ச்சியான பாதிப்புகளுக்கு உள்ளாகிவந்த தமிழ் மக்களுக்கு இப்போது உறுதிமொழிகள் அவசியமில்லை. பெரிய அளவில் இல்லாவிட்டாலும், மிகவும் சிறிய அளவிலாவது, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டத்தக்க வகையில் ஏதாவது ஒரு நடவடிக்கையை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதனையே அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத்தக்க காரியங்கள் இடம்பெறுவதற்குப் பதிலாக அவர்களுக்கு எரிச்சல் ஊட்டுகின்ற வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ்த் தலைமைகளுக்கு எதிரான உணர்வுகள் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த உணர்வு வெளிப்பாடானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதானது, ஏற்கனவே தமது அரசியல் தலைமைகள் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் புதிய தலைமையை நோக்கி நகர்வதற்கு ஊக்குவிக்கவே உதவும் என்பதில் ஐயமில்லை.

தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வு அல்லது தப்பிப்பிராயம் என்பவற்றை ஆரோக்கியமான கலந்துரையாடல்களின் மூலம் தீர்த்துக் கொண்டு முன்னேறிச் செல்வதே ஆரோக்கியமான அரசியல் செயற்பாடாக இருக்க முடியும். வெளிப்படைத்தன்மையற்ற போக்கும், நாங்கள் செய்வதே சரி, நாங்கள் செய்ததே சரி என்ற பிடிவாதப் போக்கும் தலைமைக்கும் மக்களுக்கும் இடையிலான, இடைவெளியை அதிகரிக்கவும், மக்கள் புதிய தலைமையை நோக்கிச் செல்வதற்கு அவர்களை மேலும் ஊக்குவிக்கவே உதவும் என்பதிலும் சந்தேகமில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila