காணாமல் போனவர்கள் ஒன்றில் இறந்திருக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளில் வசிக்க வேண்டும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற காணாமல் போன உறவுகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் பொறுப்பில்லாமல் இவ்வாறு கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டில் நல்லிணக்கம் நிலவுகிறது என்று கூறும் அரசாங்கம் அன்றாட அடிப்படைப் பிரச்சினையான காணாமல் போனவர்களின் பிரச்சினை குறித்து இவ்வாறு கூறுவது தவறான செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் பதவி அந்தஸ்துக்களையும் முன்னாள் பிரதம நீதியரசரின் பதவியையும் ஒரே நாளில் மீளப் பெற்றுக் கொடுத்தமையையும் அவர் நினைவுபடுத்தினார்.
அவைகளை ஒரேநாளில் நிறைவேற்றும் பிரதமர் ரணில் அரசாங்கம் காணாமல் போனவர்கள் குறித்து மாத்திரம் எவ்வாறு தட்டிக்கழிக்க முடியும் என்றும் இது எதன் வெளிப்பாடு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குளோபல் தமிழ் செய்தியாளர்