இலங்கை ஆட்சியின் அழகு கண்டோம்


நாடு என்பதற்கு ஒரு அதிகாரத்தை ஒதுக்கிய வன் வள்ளுவன். ஒரு நாடு என்றால் அங்கு என்னென்ன விடயங்கள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட வள்ளுவன், ஒரு நாட்டில் என்ன இருக்கக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தினான்.

வள்ளுவன் கண்ட நாட்டை எங்கு காண்பது என்பதல்ல இங்கு வேதனை. மாறாக எங்கள் இலங்கைத் திருநாட்டில் எப்படி எல்லாம் ஆட்சி நடக்கிறது என்பதைப் பார்க்கும்போதுதான் வேதனை இதயத்தை அடைக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை விசாரிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பது இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஒரு சுயாதீன அமைப்பு. எனவே இந்த அமைப்பு அழைக்கும் போது அதற்கு மதிப்பளித்து செயற்படுவதே ஒழுங்கும் கடமையுமாகும். எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை விசாரிக்கும் பொருட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்ததை எதிர்த்து பாராளுமன்றத்தில் மகிந்தவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் அட்டகாசம் செய்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை விசாரிக்க முடியாது- விசாரிக்கக் கூடாது என்பதாக அவர்களின் ஆர்ப்பாட்டம் இருந்தது.

ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பில் விசாரணை நடத்துகின்ற பொறுப்பு, குறித்த ஆணைக்குழுவுக்கு இருக்கும் போது அந்த சுயாதீன அமைப்பு தனது கடமையை செய்வதை எவரும் தடுக்கக் கூடாது.

அவ்வாறு தடுத்தால், இலஞ்ச ஊழல் விடயத்தில் தடுத்தவர்களுக்கும் தொடர்பு உண்டு எனக் கருதி அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக அவர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை செய்யக்கூடாது எனக் கூறுவதன் ஊடாக சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற தத்துவம் தோற்கடிக்கப்படுகிறது. இத்தகைய தொரு ஏற்ற இறக்கம் இலங்கையில் இருப்பதன் காரணமாகவே தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்காமல் உள்ளது என்பது உறுதியாகின்றது.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன் காரணமாகவே குறித்த சட்டம் எனக்குத் தெரியாது என்று கூறி எந்தக் குற்றவாளியும் தப்பித்துக் கொள்ள முடியாது. நிலைமை இதுவாக இருக்கையில், இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரிப்பதற்காக  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த அழைப்புத் தொடர்பில், மகிந்த ராஜபக்­ பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.

இவ்வாறு விமர்சிப்பதானது, ஆணைக்குழு என்ற சுயாதீன அமைப்பை கேலி செய்வதாக இருப்பதுடன் சுயாதீன ஆணைக்குழுகளாலும் எதுவும் செய்து விடமுடியாது என்றொரு சூழ்நிலையையும் தோற்றுவித்து விடுகிறது.

அதேநேரம் இப்படியான விமர்சனங்களை எல்லோரும் செய்யமுடியும் என்றொரு தோற்றப்பாடும் ஏற்பட்டுவிடும்.

ஆக சட்டங்கள் தனது கடமையைச் செய்வதில் எவர் தலையிட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதுடன் இத்தகையவர்கள் எக்காலத்திலும் மக்கள் பிரதிநிதிகளாக முடியாது என்ற இறுக்கமான தீர்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் சட்டம் சகலருக்கும் சமம் என்ற உண்மை நிலைநாட்டப்படும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila