கருநாகம் குடியிருக்க விட்டுவிடாதே மகனே!


19ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலை அறிந்த வடபுலத்து முதியவர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதினால் அக்கடிதம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தோம்.அந்தக் கற்பனை இங்கு தரப்படுகிறது.

மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிக்கு அன்பு வணக்கம். மன்னிக்கவும் மாண்புமிகு என்று என்னை விழித்து அழைக்க வேண்டாம் என்று நீங்கள் கூறியதை மறந்ததால் “மாண்புமிகு” என்ற பதத்தை கூறி விட்டேன். இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்த எவருக்கும் “மாண்புமிகு” என்ற பதம் ஏற்புடையதல்ல என்பதால் அந்தப் பதம் பழதாகிப் போனதாக கருதி அதனை ஒதுக்கி விட்டீர்களோ! என்று நான் நினைப்பதுண்டு.
நல்லது. பெருந்தன்மைகள் இப்படித்தான் வெளிப்படுத்தப்படவேண்டும்.

அதிலும் 19ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட செய்தி அறிந்தேன். உங்களுக்குக் கிடைத்த அதிகாரங்களை வேண்டாம் என்று கூறிய உங்கள் உயர்ந்த பண்பைக் கண்டு இந்த முதியவன் புளகாங்கிதமடைகின்றான். 

ஜனாதிபதியாகப் பதவியேற்று மூன்று மாதங்களே நிறைவடைந்த நிலையில்  உங்களின் அதிகாரத்தை நீங்களே முன்னின்று குறைப்புச் செய்தீர்கள் என்றால் அது கண்டு நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.

19ஆவது திருத்தச் சட்டமூலம் தமிழர்களுக்கு எதையும் தரப்போவதில்லை என்பது தெரிந்த உண்மை. எனினும் 19ஆவது திருத்தச் சட்டமூலம் இந்த நாட்டிற்கு நல்லது என்று நினைக்கும் இந்த வயோதிபன் இலங்கைத் திருநாட்டை நேசிப்பவன்.

இலங்கையில் சிங்களவர்கள் இருக்கிறார்கள், தமிழர்கள் இருக்கிறார்கள், முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ஆனால் இலங்கையர்கள் இல்லையே என்று குறை தள்ளாடும் என் உள்ளத்தை வதைக்கிறது.

நாம் இலங்கையர் என்று சொல்லும் காலம் எப்போது வரும் என்று ஏங்கி ஏங்கி என் வாழ்நாள் நிறைவுக்கு வந்துவிட்டது. என்ன செய்வது! உங்களைப் போன்ற நல்ல ஆட்சித் தலைவர்களுக்கு இந்த நாட்டில் பெரும் பஞ்சம். அதனால் மனித குருதியை குடிக்கும் கொலை வெறித்தனம் இந்த மண்ணில் தாண்டவம் ஆடியது.

இதனால் ஏற்பட்ட இழப்புகள், மனப் பேதலிப்புகள் கொஞ்சம் அல்ல. என்ன செய்வது! நாம் செய்த பாவவினைப் பயனோ! என்று நொந்து கொண்ட போது, நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானீர்கள்.

மூன்று மாத காலத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்காத உங்கள் உத்தம குணத்தை நினைக்கும் போதெல்லாம் என் கன்னத்தின் ஓரம் ஈரமாகிக் கொள்ளும்.

அன்பு மகனே மைத்திரி! நல்ல தலைவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்பது என் சிற்றறிவின் சிந்தனை. ஆனால், நல்லவர்கள் அதிகாரம் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

எதுவாயினும் 19ஆவது திருத்த சட்டமூலத்தை அரங்கேற்றியதோடு உங்கள் பணி நின்றுவிடக் கூடாது. நல்ல பிரதமர்களையும் நீங்களே இனங்காண வேண்டும்.கறையான் புற்றெடுக்க, கருநாகம் குடியிருந்த கதையாக முடிந்துவிடக்கூடாது.

கறையான் புற் றெடுத்தால் கருநாகம் குடியிருக்கத் தானே செய்யும் என்று சொல்லிவிடாதீர்கள். கருநாகங்களை கூட்டில் அடையுங்கள். பெட்டிக்குள் அமுக்குங்கள் எல்லாம் சரியாக வரும்.

அதுசரி மகன், காணாமல்போன பிள்ளைகளுக்கு  நடந்தது என்ன? சிறையில் வாடும் தமிழ் கைதிகளுக்கு விடுதலை எப்போ? போரில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எப்போது நிவாரணம்? இதற்கும் ஒரு வழி தேடுங்கள். அப்போது தான் நாட்டில் அழுகண்ணீர் குறையும். தர்மம் தலை தூக்கும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila