இராணுவத்தினர், வான் படையினர், பொதுமக்கள் என்று பல தரப்பினரும் பயணித்த தனியார் பேருந்திலேயே இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு பலரினதும் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டால் அதற்கு புலிச் சாயத்தைப் பூசி விட்டுத் தப்பித்துக் கொள்வது தெற்கு அரசியல் தலைவர்களுக்கு கைவந்த கலை. இந்த விடயத்தில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் உள்ளனர்.
பேருந்தில் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் புலிகள் உயிர்ப்புப் பெறுகின்றனர் போன்ற மாயை சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படவும், பன்னாட்டுச் சமூகத்துக்கும் அவ்வாறான ஓர் எண்ணவோட்டம் கடத்திச் செல்லப்படவும் வாய்ப்புக்கள் பெருமளவில் உள்ளன.
மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா அவ்வாறான ஒரு கருத்தை சூட்டோடு சூடாக வெளிப்படுத்தியுள்ளார்.
கெப்பற்றிக்கொல்லாவவில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை ஒரு பிடிபிடித்துள்ளார் அவர்.மகிந்தவின் புகழ் பாடவும் சொய்சா தவற வில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டு அரசு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் , அவர் தனது உரையின் நிறைவுப் பகுதியில் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆக, இந்த அசம்பாவிதத்தை வைத்து அரசியல் இருப்பை உறுதி செய்யவும் ஆதாயம் தேடவும் சில கட்சிகள் அத்திபாரம் அமைத்துள்ளன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
விடுமுறையில் சென்ற சிப்பாயொருவர் கொண்டு சென்ற கைக்குண்டே வெடித்தது என்று பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகரவும், பேருந்தில் பயணித்த பயணியொருவரின் பொதியில் இருந்த கிரனைட் குண்டே வெடித்தது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றது என்பதைத் தவிர இருவரினதும் கருத்துக்களும் முன்னுக்குப்பின் முரணாகவே அமைந்துள்ளன. எந்தவொரு துல்லியத்தன்மையும் அற்ற, பல்வேறுபட்ட கருத்துக்கள் மாறிமாறி வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததைப் போன்று சிப்பாய் கொண்டுசென்ற கைக்குண்டுதான் வெடித்தது என்றால், விடுமுறையில் சென்ற சிப்பாய் எதற்காகக் கைக்குண்டைத் தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டும். அவர் தன்னுடன் கைக்குண்டைக் கொண்டு சென்றதன் பின்னணி என்ன என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும்.
விடுமுறைக்காகச் செல்லும் போது கைக்குண்டைத் தம்முடன் எடுத்துச் செல்லக்கூடிய விதத்திலா இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பு உள்ளது என்பது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட வேண்டும்; தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பெறவே செய்கிறது.
கூட்டு அரசின் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தவும் அல்லது கூட்டு அரசின் மீது தற்போதுள்ள அதிருப்தியை திசை திருப்புவதற்காகவும்கூட குறித்த குண்டு வெடித்திருக்கலாம் என்ற கோணத்திலும் மனதில் பற்பல சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன.
பத்துடன் பதினொன்றாகக் கொள்ளத்தக்க விடயமல்ல இது.
ஆக, புலிப் பூச்சாண்டி காட்டுவதையும், அவசரப்பட்டு ஒன்றுக்கு ஒன்று முரணானதும், தொடர்பற்றதுமான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் தவிர்த்து, சரியானது எதுவோ அதை மக்களுக்கு விரைந்து தெரிவிக்க வேண்டும். அதுவே அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பும் கூட.