நாதியற்ற தமிழன்..! ஆசியாவின் கடல்களெல்லாம் ஆண்டவனும் தமிழன் - இன்று அகதியாகி உலகமெங்கும் அலைபவனும் தமிழன்...

உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன.
எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆம்...! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார்.
தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை உணர்வும் விடுதலைப்புலிகளுக்கு போராளிகளை அலைகடலென இணைய வைத்த அற்புதமான வரிகளைக்கொடுத்தவர் தான் புரட்சிக்கவிஞர் புதுவை இரத்தினதுரை என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து தமிழினத்தின் வீரத்தினை உலகறியச்செய்த எம் புலவனின் பாடல்களில் நமக்கு மிகவும் பிடித்த வரி தான் இது
ஆசியாவின் கடல்களெல்லாம் ஆண்டவனும் தமிழன் - இன்று
அகதியாகி உலகமெங்கும் அலைபவனும் தமிழன்...

இந்தப்பாடல் வரிகளை எழுதும் போது என்றைக்கும் தமிழன் அகதியாகத் தான் அலைவான் என்று நினைத்து தான் எமது புதுவை இப்படி கவிவடித்தானா என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆம்...! இன்று உலகின் எல்லாப்பரப்பிலும் தமிழன் வாழ்கின்றான். வாழுகின்ற ஒவ்வொரு பரப்பிலும் அவனின் பெயருக்குப்பின்னால் அகதி என்கின்ற அடைமொழி உண்டு.
இது ஒரு புறமிருக்க...., வாழுகின்ற ஒவ்வொரு பகுதியிலும் அடிவாங்குவதும், கையேந்தி வாழ்க்கை நடத்துபவனாகவும் வாழுகின்றான் உலகின் மூத்த குடி என்று சொல்லப்படுகின்ற தமிழ்க்குடி..! எவ்வளவு வேதனை இது!
கடல் கடந்து ஆட்சிகளைக் கைப்பற்றி தன் இனத்தின் ஆட்சி எல்லைகளைப் பரப்பினான் தமிழனத்தின் பாட்டனும் முப்பாட்டனும், ஆனால் இன்று நிலைமை என்னவாயிற்று,
சொந்த நிலத்தில் குடியேற வந்த குடியேறிகளிடம் கையேந்த வேண்டிய நிலையும், சொந்தக் கடற்பரப்பில் மீன்பிடிக்க உரிமையில்லா திண்டாட்டங்களுமே மிச்சம்.
ஏன் இந்த நிலை, ஈழத்தில் தொடர்ந்தும் அடிமைமாடுகள் போல ஈழத்தின் பூர்வீகக்குடிகளான தமிழன் செத்துமடிந்து கொண்டிருக்கின்றான். இறுதியாக 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியோடு மொத்தமாக கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டான்.

எதிர்த்து நின்று சம பலத்தோடு அடிகொடுத்து தமிழன் ஒன்றும் கோழையல்ல என்பதை காட்டினான் வீர மறத்தமிழன். ஆனால் புலிகளை அழிப்பதாக சொல்லி ஒட்டுமொத்த தமிழினத்தின் வேரையும் கருவறுத்தது சிங்களம்.
உலகமே காப்பாற்றும் என்று கையேந்திய வேளை ஒன்று கூடி நின்று வேடிக்கை பார்த்தது சர்வதேசம். பயங்கரவாதம் என்னும் சொல் கொண்டு பயங்கரநாசகார வேலைகள் செய்தவர்களையெல்லாம் செங்கம்பள வரவேற்பு கொடுத்தது இந்திய தேசம்.
தொண்டை தண்ணீர் வற்றி காப்பாற்றுங்கள் என்று கதறிய வேளையிலும், அண்டை நாடான இந்திய நாடு,,. தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லாத விதத்தில் போர் நடப்பதாக உலகிற்கு சொல்லிற்று.
கருவறுக்கப்பட்டான் ஈழத்தமிழன். அரசியல் அநாதையாக்கப்பட்டான் எந்தன் தமிழன்.
இது ஈழத்தின் நிலை என்றால் எட்டுக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத் தமிழனின் நிலை....... பாவம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஈழத்தில் தமிழன் கொல்லப்பட்ட வேளை எங்களைக் காப்பாற்ற எங்கள் தொப்புள் கொடி உறவுகள் உண்டு என்று சற்று ஆறுதல் கொண்டோம். ஆனால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் வார்த்தைகளுக்கு பாரத தேசம் செவிசாய்க்காதவனாக இருந்தான். ஈழத்தில் கொல்லப்படுவது தமிழன் தானே எதற்காக கத்துகிறீர்கள் என்கின்றது போல அடிக்கடி கடுப்பில் இருந்தது அன்றைய சோனியா அரசாங்கம்.
இன்று காலச்சுழற்சி மாறி தமிழகத் தமிழனும் பழிவாங்கப்படுகின்றான். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தமிழர்களின் ஆன்மீகத்தின் அடையாளம், பிரகதீஸ்வரர் கோவிலும், மாமல்லபுரம் குகைக்கோவிலும் தமிழர்களின் வரலாற்று அடையாளம், காவிரியும் வைகையும் தமிழர்களின் நீரடையாளம், மேற்குத்துத் தொடர்ச்சி மலை தமிழர்களின் பூகோள அடையாளம், வங்காள விரிகுடா தமிழர்களின் கடல்வள அடையாளம்.
இது வரலாற்றில் முற்பட்டது. இப்போது தமிழர்களின் அடையாளம் அகதி என்பதாகும்.
மீன் கொஞ்சம் பிடித்தால் தான் அன்றைய நாளில் வீட்டில் அத்தனை பேருக்கும் சாப்பாடு என்று மீனவன் கடலுக்குள் சென்றால்..., அவனின் சடலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. கடன்பட்டு வாங்கிய படகோடு தொழிலுக்குச் சென்றால் சிங்கள இராணுவத்திடம் படகை பறிகொடுத்துவிட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டு தனியே நாடு வந்து சேருகின்றான் மீனவன்...,
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் சுடுவோம் என்கின்றார் சிங்களத்தின் பிரதமர் ரணில். கூலித் தொழிலுக்கு வரும் அப்பாவிகளை சுட்டுக்கொல் என்கின்றார் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. எப்படி இருக்கிறது தமிழனின் நிலை?
இதை நினைத்து தான் எமது தமிழீழக் கவிஞன் புதுவை இரத்தினதுரை தீர்க்கதரிசனமாக கவிவடித்தான்.
இலங்கையில் கடலில் ஆமை பிடித்தால் தடை. தரையில் நாயை கொன்றால் குற்றம். கோயிலில் ஆடு மாடு வெட்டினால் தண்டனை. இது பௌத்தத்திற்கு எதிரானது என்கின்றார்கள் பௌத்தர்கள். ஆகையால் ஆமை பிடிப்பவர்களும் நாயை கொல்பவர்களுக்கும் தண்டனை கொடுக்கும் அரசாங்கம் தமிழனின் உயிரைப்பறித்தவனுக்கு தேசிய விருது பீல்ட் மார்ஷல் வழங்கி கௌரவிக்கிறது.
தலைக்கு மேல் உள்ள இந்தியாவில். இந்துத்துவத்தை முதன்மைப்படுத்தும் பாரதம் இந்துக்களின் புனிதமாக போற்றப்படும் பசுக்களை கொன்றால் அது புனிதத்தன்மைக்கு எதிரானது என்று கொக்கரித்துக் கொள்கின்றது. ஆனால் ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழன் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது தான் வேடிக்கை.
நாய்க்கும், மாட்டிற்கும் இருக்கும் மரியாதை கௌரவம் கூட தமிழனுக்கு இல்லை என்கின்ற நிலையை நினைத்து கண்கலங்காமல் இருக்க முடியாது. இந்த இடத்தில் தான் தமிழன் அநாதை என்கின்ற உண்மையான யதார்த்தத்தை உணரமுடிகின்றது.
சரியான நிலையான உண்மையான அரசியல் தலமை இல்லாமல் வந்தவன் நின்றவன் எல்லோரும் ஏறிமிதிக்கவும், சுட்டுப்போட்டாலும் எட்டிப்பார்த்து எதிர்த்து குரல்கொடுக்க முடியாத யாருமில்லா சாதி தமிழ்ச்சாதி.
முடிவாய் முடிந்து போன வரலாறுகளைப் பேசுகின்றான் சமூகவலைத்தள தமிழன், பேச்சில் ஒரு உண்மையை கக்குகின்றான். என்ன தெரியுமா?
வீரப்பனும் பிரபாகரனும் இருந்திருந்தால் இன்று இந்தநிலை வந்திருக்குமா என்று ஆதங்கம் கொள்கின்றான். இது தான் இன்று சமூகவலைத்தளங்களில் அடிபடும் பேச்சுக்கள். அது உண்மையும் கூட.
ஆனால் அதே வீரப்பனையும் பிரபாகரனையும் எத்தனை காலத்திற்கு தான் போராட அழைப்பீர்கள். உங்களில் ஒரு வீரப்பனோ பிரபாகரனோ இல்லையா? அப்படியாயின் தமிழர்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கத் தெரியாதவர்களா?
அடுத்த தலைமுறையினர் சிந்திக்க வேண்டியது இதுதான். தன்னினத்திற்காக தான் போராடத்துணியாவிட்டால் முள்ளிவாய்க்காலில் நடந்ததும், கடலில் நிகழ்ந்து கொண்டிருப்பதும், அண்மையில் ஆந்திராவில் செம்மரமாக சரிந்து விழுந்ததும் அடுத்தடுத்து விழும். அடிவாங்கியவாறு புலம்பிக்கொண்டிருந்து எந்த பிரயோசனமும் இல்லை.
தலைவரின் கருத்துக்கு ஏற்றவாறு எதிரிக்கு எதிரியின் வழியிலேயே பதில் சொல்ல வேண்டும். இல்லையாயின் தமிழர் நாம் இருந்த இடமே தெரியாமல் அழிந்து போவோம்.
குட்டக் குட்டக் குனியாது
வீறுகொண்டு நிமிர்ந்துநில்....!
விழித்துக்கொள் தமிழினமே...!




எஸ்.பி.தாஸ்
Puvithas4@gmail.com
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila