தமிழர்களின் எதிர்பார்ப்பு இலவுகாத்த கிளியின் கதையாகிவிடக் கூடாது!

கடந்த ஒருவார காலமாகவே அரசியலில் அடுத்து என்ன நடக்குமென்ற கேள்வி மக்களை வெகுவாகக் குடைந்து கொண்டிருந்தது.
ஒருபுறம் 19வது திருத்தச் சட்டத்திற்கு என்ன நடக்குமென்ற கேள்வியும் மறுபுறம் மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்த விவகாரமும் நாட்டில் மக்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்க போகின்றது என்ற ஒருவித அங்கலாய்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடந்த 20ம் திகதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுத்தமையைக் கண்டித்து கடும் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. அதுமாத்திரமன்றி சில கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றும் வரை தாம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறி இரவிரவாகப் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தனர்.
பாராளுமன்ற வரலாற்றிலேயே சபை நடுவே சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் விடிய விடிய எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டமை இதுவே முதற்தடவை. பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கையை மக்கள் மிகுந்த வெறுப்புடனேயே பார்த்தனர்.
இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டம் எப்படியாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.
அந்த வகையில் பாராளுமன்ற அமர்வும், சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தம் மீதான விவாதமும் நாளை 27ம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே 19வது திருத்தச்சட்டம் கடந்த திங்கட்கிழமை 20ம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிரும் புதிருமான நடவடிக்கைகளால் அது ஒத்தி வைக்கப்பட்டது.
நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி 19வது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமென மதத்தலைவர்கள் உட்படப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த 19வது திருத்தச்சட்டம் என்னவெனில்,
தகவல் அறியும் உரிமையை மக்களுக்கு வழங்குவது,
ஜனாதிபதியின் அமைச்சரவை சம்பந்தப்பட்ட அதிகாரங்களைப் பிரதமருக்கு வழங்குவது,
ஜனாதிபதியின் செயல்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைக் கோப்பிடுவது,
ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது,
ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் நீதியரசர்களை நியமிக்கும் போது பலதரப்பு பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பாராளுமன்ற சபையின் தீர்மானங்களால் ஜனாதிபதி கட்டுப்படுவது
போன்ற நல்லாட்சியின் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் ஒருவரிடம் அதிகாரம் செறிந்திருக்காமல் அதனை மட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
அதேவேளை, இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.
அந்தவகையில் 19வது திருத்த சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஆதரவு வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நூறுநாள் வேலைத் திட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வியாழனன்று ஆற்றிய உரையில் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது எமக்கு கிடைத்த வரலாற்று ரீதியான ஒரு சந்தர்ப்பம். எனவே இதற்கு ஆதரவு வழங்கினால் வரலாற்று ரீதியான கௌரவத்தை அது உங்களுக்கு வழங்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த பங்காளியாகுங்கள் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒருவராக அவரது உரை அமைந்திருந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
தனது உரையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பொருளாதாரம், அரசியல், அபிவிருத்தி, சர்வதேச தொடர்புகள் உள்ளிட்ட பல விடயங்களில் கால் பதித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜனநாயக, உரிமையின் பரிணாமத்தையும் புரட்சியையும் உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக செயற்பட்டனர். சட்டமா அதிபருக்கு கூட தனது கடமையைச் செய்ய சுதந்திரம் இருக்கவில்லை.
நாம் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தியுள்ளோம். சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் நாம் உரிய கரிசனை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, நான் பலமான தலைவரல்ல என சிலர் கூறுகின்றனர். அதற்குக் காரணம், இந்த 100 நாட்களில் நான் எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. இந்த அதிகாரங்களை நீக்குவதற்கே நான் தெரிவு செய்யப்பட்டேன் என்றும் ஜனாதிபதி மிகுந்த தன்னடக்கத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தின் அவசியம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, சிலர் இணையதளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பி ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதுவதாகவும் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இராணுவத்தினரால் வடபகுதியில் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளை மீண்டும் புலிகளுக்கு வழங்குவதாக விஷமத்தனமாக முடுக்கி விடப்பட்டிருக்கும் பிரசாரங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்தம் நடைபெற்றபோது படையினர் வடக்கில் மட்டுமன்றி கொழும்பிலும் தனியார் காணிகளை பயன்படுத்தினர். அவற்றை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தவறாகுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த 100 நாள் திட்டத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் சாத்தியமான அளவு நிறைவேற்றப்படவில்லை என்பதும் பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகிவிட நேரிடுமென்ற அச்சம் காரணமாக எதனையும் முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும் தமிழ் பேசும் மக்கள் விசனம் கொண்டுள்ளனர்.
அதேவேளை, புதிய அரசாங்கத்தின் தர்மசங்கடமான நிலை மையை கருத்திற்கொண்டு மிகுந்த விட்டுக்கொடுப்புகளுடன் நல்லாட்சிக்கான ஒத்துழைப்பை தமிழ் மக்கள் வழங்கி வருகின்றனர்.
இதனை ஜனாதிபதி, பிரதமர் உட்பட புதிய அரசின் முக்கியஸ்தர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
புதிய அரசாங்கம் தன்னை சகல வழிகளிலும் ஸ்திரப்படுத்திக் கொண்டு தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை பெற்று கொடுக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் தமிழ் மக்கள் காணப்படுகின்றனர்.
தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பு இலவுகாத்த கிளியின் கதையாக மாறிவிடக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila