அமெரிக்க-சீன பூகோள அரசியல் போட்டியில் இந்தியாவின் நிலை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள-அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.

இவ்வாறு The diplomat  ஊடகத்தில் , Jhinuk Chow dhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான இராஜதந்திர முயற்சியாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை, செசெல்ஸ் மற்றும் மொரிசியஸ் தீவுகளுக்கான பயணத்தை மார்ச் மாதம் மேற்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல.

அதாவது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான போட்டி இடம்பெறவில்லை. மாறாக இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு நிலைநிறுத்தப்படுவதை எதிர்ப்பதே சீனாவின் பிரதான நோக்காகும்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னை ஒரு ‘பாதுகாப்பு வழங்கும் வலைப் பின்னலாக’ நிலைநிறுத்த விரும்புகிறது. இதற்கு இந்தியா தனது ஆதரவை வழங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

இந்திய மாக்கடலின் ஊடாக உலகின் மூன்றில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்கின்றன. அத்துடன் இதன் ஊடாக உலகின் மூன்றில் ஒரு சரக்குக் கப்பல்களும் பயணிக்கின்றன.

இதற்கும் மேலாக இந்திய மாக்கடலானது கிழக்காசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாக உள்ளது. இம்மாக் கடலின் ஊடாக உயர்வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபடும் நாடுகளாக சீனா மற்றும் அமெரிக்கா விளங்குகின்றன.

இதன் ஊடான தனது வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதற்கான நம்பிக்கையுடன் அமெரிக்கா செயற்படும் அதேவேளையில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் சீனா, மலாக்கா நீரிணையைப் பாதுகாக்க வேண்டிய பொருளாதார அவசியத்தைக் கொண்டுள்ளது. சீனா தனது எரி சக்தி இறக்குமதிப் பாதுகாப்புத் தொடர்பாக எப்போதும் அச்சமுற்றுள்ளது.

பேர்சியன் வளைகுடாவுக்கு வெளியே உள்ள எண்ணெய் வளக் கொள்கலன்கள் கொண்டு வரப்படும் பாதைகளைப் பாதுகாப்பது தொடர்பில் அமெரிக்காவின் கண்காணிப்பு நடவடிக்கைளில் தங்கியிருப்பதானது சீனாவுக்கு கவலை அளிக்கிறது.

‘தேசிய கடல்சார் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்’ ‘சீனாவின் வெளிநாட்டு நலன்களுக்கு நம்பகமான ஆதரவை வழங்கும் இராணுவப் படைகளை உருவாக்குதல்’ போன்றன சீனாவின் முக்கிய இரு நோக்கங்களாக உள்ளதாக 2013 இல் வெளியிடப்பட்ட சீனாவின் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்விரு பிரதான இலக்குகளையும் அடைந்து கொள்வதற்காக சீனா மிகப் பாரியளவில் கடற் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. தொலைதூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற கடல்சார் ஆயுதங்களை சீனா கொள்வனவு செய்துள்ளது.

இந்திய மாக்கடலில் கடற்படைக் கப்பல்களுக்கான போக்குவரத்துக் கண்காணிப்பு செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக ஜனவரியின் பிற்பகுதியில் சீனாவுக்கான தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

குறிப்பிடத்தக்க எவ்வித பாதுகாப்பு முதலீட்டையும் இந்திய மாக்கடலில் மேற்கொள்ளாது மீண்டும் இங்கே உறுதித்தன்மை நிறுவ முடியும் என்ற நம்பிக்கையுடன் தென் கிழக்காசியாவில் தனது செல்வாக்கை நிறுவ முயற்சித்த அதேவேளையில், மத்திய கிழக்கில் தனது செல்வாக்கைச் செலுத்தும் பணியில் ஈடுபட்ட அமெரிக்கா ஆசியா மீதான தனது வெளியுறவுக் கோட்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாக்கடலின் மத்தியிலும் மலாக்கா நீரிணைக்கு அருகிலுமுள்ள இந்தியாவுடன் கூட்டுச் சேர்வதன் மூலம், தனது கோட்பாட்டை அடைய முடியும் என அமெரிக்கா கருதியது.

‘இந்திய மாக்கடலுக்கும் பசுபிக் மாக்கடலுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ஏனைய போக்குவரத்துக்கள் அதிகரித்த வரும் இந்நிலையில் இதை உறுதிப்படுத்துவதற்கான காரணியாக இந்தியாவின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது மிக முக்கியமாகும்.

இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக இந்தியா தனது இராணுவத் துறையைப் பலப்படுத்துவதானது வரவேற்கத்தக்க பங்களிப்பு என அமெரிக்கா கருதுகிறது’ என அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் சக் ஹக்கேல் 2013இல் குறிப்பிட்டிருந்தார்.

அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற தனது பிராந்தியக் கூட்டாளி நாடுகளுடனும், இந்தியா, பிலிப்பீன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற பங்காளி நாடுகளுடனும் இணைந்து இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகிறது.

வியட்நாமுடனான இந்தியாவின் நல்லுறவு மற்றும் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடனான அரசியல்-இராணுவ உறவுகளை விரிவுபடுத்துதல் போன்றன இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனக்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா மறைமுகப் பணியாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இப்பிராந்திய நாடுகளுக்கு மோடி அண்மையில் பயணம் செய்ததானது தனது அயல்தீவு களுடன் மிக நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்காகவே எனக் கூறப்பட்டது.

இதற்கும் மேலாக, மொரிசியசுக்கு இந்தியாவால் உருவாக்கப்பட்ட கரையோர பாதுகாப்பு கண்காணிப்புக் கப்பலை இந்தியா கையளித்தமை, செசெல்சிடம் தனது கண்காணிப்பு வான் கலத்தை வழங்கியமை போன்றன அமெரிக்காவுக்கு இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் கூட்டணிகளை உருவாக்குவதையே மறைமுக நோக்காகக் கொண்டதாகும்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுடன் இடம்பெறும் ‘முத்தரப்பு’ தேசிய பாதுகாப்பு ஆலோசனைப் பேச்சுகள் போன்று மொரிசியஸ் மற்றும் செசெல்ஸ் போன்றவற்றுடனும் பேச்சுக்கள் மேற்கொள்ளப்படும் என மோடி பரிந்துரைத்துள்ளார்.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட முத்தரப்பும் பயிற்சி வழங்குதல், கடற்படையினரின் திறனை வளர்த்தல், தொடர்ச்சியான கூட்டுப் பயிற்சிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்புக்கள் உட்பட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.
அதிகரித்துவரும் இவ்வாறான உறவு மற்றும் உலகம் முழுவதி லிருந்தும் மேலதிக இராணுவத் தொழினுட்பத்தைப் பெற்றுக் கொள்வதற்கான இந்தியாவின் இலகுவான வழிமுறை போன்றன சீனாவைக் கவலைகொள்ள வைத்துள்ளது.

இந்தியாவால் அமெரிக்கா விடமிருந்து இராணுவத் தொழினுட்பத்தை துரிதமாகப் பெற்றுக் கொள்ள முடியும். ‘அமெரிக்க-இந்திய உறவு வட்டம்’ குறிப்பாக இந்திய மாக்கடலில் உருவாக்  கப்படுவதாக யூன் 2013 இல் சீனாவின் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழினுட்ப முயற்சியின் ஊடாக இந்தியாவுடன் அமெரிக்கா ஆழமான மூலோபாயப் பங்காளியா வதற்கான தெளிவான திட்டத்தை பென்ரகன் முன்வைத்துள்ளதாக 2104 இல் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பாரிய பாதுகாப்பு வழங்குனராக இருந்த ரஸ்யாவுக்குப் பதிலாக இன்று இந்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவுடன் இந்தியா மிகப் பலமான உறவைப் பேணினாலும்கூட, இந்தியா தொடர்ந்தும் மூலோபாய தனித்துவத்தைப் பேணும் என சீனா நம்புகிறது.

இந்திய மாக்கடலில் சீனாவும் இந்தியாவும் தமது சொந்த நலன்களை அடைந்து கொள்வதற்கான பூச்சியக் கூட்டல் விளையாட்டில் முற்றிலும் ஈடுபடவில்லை என சீன ஊடகமான Global Times  ஆசிரியர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மாக்கடலின் மிகப் பெரிய சக்திகளாக விளங்கும் இந்தியா மற்றும் சீனா என்பன பிராந்திய பாதுகாப்புத் தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள- அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila