இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பமானது. ஆனால் குறித்து சென்ற கேள்விகள் ஊமையாய் உறங்கிய அழுத்தம் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியது கனடா வந்த சுமந்தரனிடம் கேள்வி கேட்க சென்ற என் போன்ற மக்களை குரல் எழுப்பி கேள்வி கேட்க விடாமல் துண்டெழுதி கேள்வி கேட்க வைத்து, படித்தது பாதி படிக்காதது பாதி, கேள்வியை திரிபு படுத்தி படித்தது பாதி, என நுனிப் புல் மேய்ந்து சாதுரியமாக பதில் என்ற பெயரில் எதையோ சொல்லி தட்டிக் கழித்து தப்பித்தார் சுமந்திரன்.
சபை ஊமைகள் அரங்கானது….நம்புங்கள்.. நாம் ஊமைகளாகவே இருக்க பணிக்கப்பட்டோம். பேச்சு வன்மை உள்ளவர் தான்.. மறுக்கவில்லை. ஆனால் “என்னாமா பேசுகிறார்!” என வியப்பதற்கு பதிலாக “என்னாமா புரட்டிப் பேசுகிறார்!” என விசனம் தான் எழுந்தது … கலப்பு விசாரணை தமிழ்த் தேசக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட அரிய சந்தர்ப்பமாம். அதை நழுவ விடாமல் பயன்படுத்த வேண்டுமாம்.. அது சரியாக நடப்பதை தாம் உறுதி செய்வார்களாம்… மக்களுக்கு நம்பகத்தன்மையான தீர்வை கொடுக்கத் தவறினால் விளைவு விபரீதமாகும்…
ஆனால் அதற்காக இப்பொழுதே சிங்கள அரசையோ அமெரிக்காவையோ அல்லது சர்வதேசத்தையோ சந்தேகமாக பார்த்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாதாம். இது அவரது கருத்து மட்டுமல்ல. தமிழ்த் தேச கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளினதும் ஏகோபித்த கருத்தாம்.
வட மாகாணசபை என்ன நினைக்கிறது என்பது பற்றி தனக்கு மன்னிக்கவும் தமக்கு கவலை இல்லையாம்:
இப்படியாக கலப்பு விசாரணையை மக்கள் மகிழ்வோடு ஏற்று எதிர்கொள்ள பரப்புரை பணியை மிக நேர்த்தியாக சொற்களை அழகாக தெரிந்தெடுத்து வலியுறுத்தி கருத்தை ஆணித்தரமாக எல்லோரும் ஏற்கும் நிலைக்கு தள்ளப்படும் வண்ணம் விபரித்தார்.
அழகான மூளை சலவை. ஆபத்தான கருத்து திணிப்பு…
பழங்கதை வேண்டாம் என்றார்.. ஆனால் அவர் மட்டும் இடையில் கஜேந்திரகுமார் அணிக்கு எதிரான கருத்துக்கள் தொட்டு சென்றார்… புலம் பெயர் தமிழர்கள் தாம் சொல்வதை கேட்பது தான் சனநாயக ரீதியாக தம்மை தெரிவு செய்த மக்களை மதிக்கும் வழி என்றும்.. புலம் பெயர் தமிழ் மக்கள் அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் தமக்கு ஏற்புடைய வழியில் இல்லை என்றால் அது தம்மை தெரிவு செய்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் எச்சரிக்கை வேறு செய்தார்.. இனப்படுகொலை பற்றி ஒரு கயிறு திரிப்பு.. என்னாமா திரிக்கிறார்….தும்பை நூலாக்கி.. நூலை கயிறாக்கி..கயிறில் கப்பலையே கட்டி கடலில் கவிழ்க்கிறார்… சிறி லங்கா அரசு கொடுத்து வைத்தது..ஒத்துக் கொள்கின்றோம்..
ஜேர்மன் தீர்பாயத்தின் முடிவுக்கு ஒரு கிண்டல் வேறு..அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டாராம் …
நாமே ஆயம் நடத்தி எதிராளி இன்றி விவாதம் இன்றி குற்ற விசாரணை இன்றி இனப்படுகொலை என சொன்னால் அது சர்வதேச நீதி மன்றத்தில் நிறுவப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்படாதாம். இதனால் போர்குற்ற வழக்கு தோற்றுப் போகும் அபாயம் உண்டாம்.. அவர் ஜெர்மன் தீர்ப்பாயம் பற்றியே பேச விரும்பவில்லையாம் மொத்தத்தில்…இனப்படுகொலையின் கூறுகள் மூலம் நடந்தது இனப்படுகொலை என நிறுவப்படும் வரையில் அதை இனப்படுகொலை என சொல்ல முடியாதாம். சரி.. சர்வதேச நீதி மன்றம் சொல்லும் வரை தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிறுவி எடுத்துரைக்கலாம் தானே.. ஆவணத்திற்கா பஞ்சம்? அதை நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லுங்களேன்….என எழுதப்பட்ட கேள்விக்கு …மேலே சொன்னது போன்று தட்டிக் கழித்து பேசினார்.
நம்புங்கள் சத்தியமாக சிங்கள அரசுக்கு எறும்பு கடித்த வலி கூட வராமல் மென்மையாக மயில் இறகால் வருடியே பேசினார். ஜெர்மன் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலையின் கூறுகள் பற்றி ஐ. நா. முன்னாள் நீதிபதி அழகாக நிறுவி விளக்கினார்…. இன சுத்திகரிப்பின் அத்தனை கூறுகளும் இன்றும் தொடர்கின்றது என்று.. இவர் இல்லை. என்கின்றார். இவர் மக்களின் பிரதிநிதி….! ம்…..