இன்னுமொரு வரலாற்றுத் தவறை இழைத்து விடாதீர்கள்


இனத்துவ வேற்றுமை என்பது மனித மனங்களோடு இரண்டறக் கலந்து விட்டது என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு எதை எடுத்தாலும் அதில் இனவாத சிந்தனை புரையோடி இருப்பதைக் காணமுடியும்.

குறிப்பாக வரலாறுகளை திரிவுபடுத்துவதில் பெரும்பான்மை சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பாட நூல் தயாரிப்பில்கூட வரலாற்றுத் திரிவுபடுத்தல்கள் தாராளமாக நடந்தேறுகின்றன. இதுதவிர அரசியல் அமைப்புகளின் உருவாக்கத்தின் போதெல்லாம் சிறுபான்மை இனங்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டு விடலாகாது என்பதில் பேரினவாதம் மிகத்தெளிவாக இருக்கின்றது.

இத்தகைய நிலைமைகள் இந்த நாட்டில் ஏற்படுத் திய அழிவுகள், சேதங்கள் கொஞ்சமல்ல. இருந்தும் இன்னமும் பேரினவாதத்தின் கோரத்தாண்டவம் அடங்கியதாகத் தெரியவில்லை.

இலங்கை எல்லா இன மக்களுக்கும் உரிய நாடு என்ற நினைப்போடு செயற்பட்டால் இலங்கையில் அமைதியும் சமாதானமும் எளிதில் அடையப்படக் கூடி யதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனினும் சிறுபான்மை இன மக்களின் வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே எல்லாச் செயற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பதை அவதா னிக்க முடியும்.

இதில் ஒன்றாக தேர்தல் திருத்த நடவடிக்கையை குறிப்பிடலாம். தேர்தல் நடைமுறையில் சில மாற்றங் களைச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்ட  நிலையில் அத்தகைய திருத்தங்கள் சிறுபான்மை இனத்திற்குப் பாதகமாக அமையும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது.

பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மை இனத்தின் அங்கத்துவம் குறைந்து போகுமாயின் அதன் விளைவு பாரதூரமாக இருக்கும் என்பது இங்கு நோக்குதற்குரியது. நடைமுறையில் இருக்கக்கூடிய தேர்தல் முறைமை பொருத்தமற்றது எனில் தேர்தலில் பொருத்தமான திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதில்  மாற்றுக் கருத்திருக்கமுடியாது. அதற்காக சிறுபான்மை இனத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக் கும் நோக்கில் தேர்தல் ஒழுங்குமுறையில் திருத்தம் கொண்டு வர நினைப்பது இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை வரலாற்றுத் தவறை இழைப்பதாக இருக்கும் என்ற உண்மை உணரப்பட வேண்டும்.

எதுவாயினும் சிறுபான்மை இனங்களை அடக்கு வதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இந்த நாட்டுக்கு எவ்வளவு கேடாக அமைந்தது என்பதை யதார்த்தத்தில் கண்டறிந்தோம்.

சிறுபான்மை இன மக்களின் மூச்சை அடக்குவ தற்காக ஜே.ஆர் ஆல் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை சிங்கள மக்களுக்கும் நிறையப் பாடம் புகட்டியது.ஐயா! எப்பாடு பட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லா தொளிக்க வேண்டும் என்று சிங்களத் தலைமைகள் முடிவு கட்டின.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு தமிழ் மக்களின் ஆதரவும் தேவை என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது அதற்கு தமிழ் மக்கள் தங்களது பரிபூரண ஒத்துழைப்பை வழங்கினர். இதன் காரணமாக  மைத்திரிபால சிறிசேன ஜனா திபதியானார். அதனூடாக 19ஆவது திருத்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. ஆக, மைத்திரியை ஜனாதிபதி யாக்கி 19ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றி இந்த நாட்டில் மீண்டும் ஜனநாயகம் துளிர்ப்பதற்கு தமிழ் மக்கள் செய்த உதவி மிகப்பெரியது.

இந்நிலையில் தமிழ் மக்கள் செய்ததை மறந்து சிறுபான்மை இனத்திற்கு பாதகமாக அமையக்கூடிய வகையில் தேர்தலில் திருத்தம் செய்வது நல்லதல்ல.
இது இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமையுமே தவிர அன்றி வேறு எதுவுமாக இருக்காது.
எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடைய தாக-ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடியதாக தேர்தல் முறைமை மாற்றி அமைக்கப்படவேண்டும். இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர் மனப்பாங்குடன் செயற்படுவார் என தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila