டில்லியில் நடந்த கொடூரமும் புங்குடுதீவில் நடந்த நெட்டூரமும்

இது இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற சம்பவம். மருத்துவ பீட மாணவி ஒருவர் தனது காதலனுடன் டில்லி நோக்கிப் பயணிக்கிறார். இரவுப்பொழுது பஸ்ஸில் பயணித்த ஐந்து இளைஞர்கள் காதலனை அடித்துப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர்.

தமது இச்சை தீர்ந்து போக ஓடும் பஸ்ஸில் இருந்து அந்தப் பெண்ணைத் தூக்கி எறிந்து விட்டு பஸ் ஓடித் தப்பி விடுகிறது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய துன்பம் ஒரு புறம். ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி எறிந்த அட்டூழியம் மறுபுறமாக கோமா நிலையில் இருந்த அந்த மருத்துவ பீட மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து போகின்றார்.

உலகை உலுக்கிய இச்சம்பவத்தால் இந்திய தேசம் எங்கும் ஒரே கலவரம்; ஆர்ப்பாட்டம். அந்த மாணவியை பலாத்காரம் செய்த ஐந்து கயவர்களும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறையில் அடைபட்ட ஐவரில் ஒருவர் சிறைக்கு உள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

ஏனைய நான்கு பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்திற்கு டில்லி நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி அந்த நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிப்பதாக தீர்ப்பளிக்கிறது.  

குற்றச் செயல் நடந்து ஒன்பது மாதங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதற்குள் நீதிமன்றம் தனது விசாரணையை விரைவுபடுத்தியிருந்தமை இங்கு நோக்குதற்குரியது.

டில்லியில் மருத்துவ பீட மாணவிக்கு நடந்த கொடுமைக்கு எதிராக இந்திய தேசம் எங்கும் எதிர்ப்புக் கிளம்பியதாலும் சமூக பொது அமைப்புகள் வெளியிட்ட கடுமையான கண்டனங்கள் காரணமாகவும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து மக்களின் ஆவேசத்தை-கொந்தளிப்பை கட்டுப்படுத்தும் தார்மிகக் கடமையை டில்லி நீதிமன்றம் செய்து முடித்தது.

இவ்வாறு டில்லியில் மருத்துவ பீட மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒருபடி மேலான கொடுமைத்தனங்களுடன் புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் கொல்லப்பட்டார்.

பாடசாலைக்குச் சென்றவேளை அந்த மாணவியை வழி மறித்து கூட்டு வன்புணர்வு நடத்தி கொடூரமாகக் கொன்ற மாபாவச் செயலால் வடபுலம் எங்கும் கொதிப்படைகிறது. சமூக நீதிக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இளைஞர்களின் இந்த வெளிப்படுத்தல் இத்தகைய குற்றச் செயல்கள் எனிமேல் இடம்பெறாதவாறு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

எனினும் புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் எழுந்துள்ள ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்கள் என்பன குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்; எக்காரணம் கொண்டும் அவர்கள் விடுதலை பெற்று விடலாகாது என்பதை இறுக்கமாக உணர்த்தி நிற்கிறது.

அதேநேரம் புங்குடுதீவில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிராக சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் இளைஞர்கள், பொதுமக்கள் காட்டிவரும் அகிம்சைப் போராட்டங்கள் கனதியானவை.

அதேநேரம் எங்கள் மண்ணில் குற்றச் செயல்களை முற்றாக இல்லாது ஒழிக்க வேண்டுமாயின் குற்றவாளிகளுக்கான தண்டனை மிக விரைவாக வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் எங்கள் சமூகம் விழிப்படையும். எந்தக் குற்றச் செயல்களையும் செய்து விட்டு தப்பிவிடலாம் என்ற நினைப்புக்கு சாவு மணி அடிக்க வேண்டுமாயின்-சமூக கொந்தளிப்புக்கு மதிப்பளிக்க வேண்டுமாயின் மிக விரைவாக நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும்.

டில்லி நீதிமன்றம்போல இங்கும் மிக விரைவாக தீர்ப்பு வழங்குவதன் ஊடாக சமூகத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு, பெண்களின் பாதுகாப்பு என்ற பொது விடயங்களைக் காப்பாற்ற முடியும் என்பது நம் திடமான நம்பிக்கை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila